[X] Close

''கமலுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தேன்!’’ - ‘ஒத்த செருப்பு’ விழாவில் பாக்யராஜ் பேச்சு


  • kamadenu
  • Posted: 19 May, 2019 13:33 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

‘’கமலுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தேன்’’ என்று ’ஒத்தசெருப்பு’ ஆடியோ விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார்.

இயக்குநர் பார்த்திபன், தயாரித்து நடித்துள்ள படம் ‘ஒத்தசெருப்பு’. இந்தப் படத்தில் ஒரேயொரு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கதாபாத்திரத்தில், பார்த்திபன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒலிப்பதிவாளராக ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியராக விவேக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ விழாவில் கமல்ஹாசன், கே.பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர் முதலானோர் கலந்துகொண்டார்கள்.

விழாவில், பாக்யராஜ் பேசியதாவது:

பார்த்திபன் படத்தின் விழாவுக்கு வந்து கலந்துக்கிட்டதுல என இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டு. ஏதாவது புதுமையாச் செய்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறவர். சொல்லப்போனா, குருவை மிஞ்சின சிஷ்யனாவே சில விஷயங்கள்ல செயல்படுறவர் பார்த்திபன். அதுல எனக்குப் பெருமைதான்.

இந்த விழாவுக்கு, கமல் வந்து கலந்துக்கிட்டிருக்கார். அவரைப் பாத்ததும் ‘16 வயதினிலே’ படம் ஞாபகம் வந்துருச்சு. அது எனக்கு முதல்படம். படத்துல கமல் கேரக்டர், சந்தைக்குப் போயிட்டு, தாலியெல்லாம் வாங்கிட்டு வரணும். அப்படி வரும்போது மைசூர்ல, இரண்டு பக்கம் மரம் இருக்கிற பாதைல, கமலை நடக்க வைச்சு, லாங்ஷாட் எடுக்கறாரு டைரக்டர் சார் (பாரதிராஜா). அது ஒரு டேக் ரெண்டு டேக்னு போச்சு.

அப்போ, நான் விறுவிறுன்னு கமல் சார்கிட்ட போய், ‘சார், சந்தைக்குப் போயிட்டு வர்றீங்க. அதுவும் தாலியெல்லாம் வாங்கிட்டு வர்றீங்க. விடிஞ்சா, உங்களுக்கும் மயிலுக்கும் கல்யாணம். அதனால ஏதாவது பாடிக்கிட்டே வாங்க சார், நல்லாருக்கும்’னு சொன்னேன்.

உடனே கமல், ‘திடீர்னு பாட்டுக்கீட்டுன்னா என்னங்க பண்றது?’ன்னு சொன்னார். ‘ஆத்தோரத்துல ஊர்கோலமா மாப்பிள்ளை பொண்ணு. அதைப் பாத்துப்பாத்து ஏங்குதம்மா முண்டச்சிக் கண்ணு’ன்னு பாடிட்டு வாங்க சார்’னு சொன்னேன்.

அடுத்தாப்ல டேக். கமல் சார் பாடிக்கிட்டே வந்தார். எங்க டைரக்டர் ஷாக்காயிட்டார். ‘என்னய்யா இது?’ன்னு கேட்டாரு. ‘ஆனா, நல்லாருக்குய்யா’ன்னு சொன்னாரு. ஓகே சொல்லிட்டாரு.

உதவி டைரக்டர்களா இருக்கறவங்க, ‘நாம உதவி டைரக்டர்தானேன்னு நினைக்கக்கூடாது. இந்தப் படத்துக்கு நாமதான் டைரக்டர்னு நினைச்சு உழைக்கணும். அப்படி உழைச்சா, நிச்சயம் ஒருநாள் பெரிய டைரக்டராவீங்க.

‘சின்னவீடு’ படம் எடுத்துட்டிருக்கும் போது, ஒருநாள், ‘யோவ் பார்த்திபா. படத்துல செண்டிமெண்ட்டா, டச்சிங்கா ஒரு டயலாக் இருக்கணும்யா. கல்பனா அந்த வசனத்தைப் பேசணும்’னு சொன்னேன். உடனே பார்த்திபன், ‘மாமா, உங்க தோள்ல இருக்கற துண்டா நான் இல்லாட்டியும் உங்க காலுக்குப் போடுற செருப்பாவாவது நான் இருப்பேன் மாமா’ன்னு சொன்னாரு. அப்பவே பார்த்திபன் பெரியாளா வருவாருன்னு நம்பிக்கை இருந்துச்சு எனக்கு. புதுமை குணம், தனித்துவம், புதுசுபுதுசா யோசிக்கறதுன்னு எப்பவும் இருக்கற பார்த்திபன், இந்தப் படத்தையும் அசத்தியிருப்பார்னு உறுதியா நம்புறேன்.

இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close