[X] Close

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘மெர்சல்’ தயாரிப்பாளர்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 16:30 pm
  • அ+ அ-

விஜய் ரசிகர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் நீக்கப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி.

விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடித்தனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அந்நிறுவனம் தயாரித்த 100-வது படம் இது. சூப்பர் ஹிட்டான இந்தப் படம், வெளிநாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்களை, விஜய் ரசிகர்கள் தங்களுடைய முகநூல், ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிர்ந்தனர். எனவே, காப்புரிமைச் சட்டப்படி அவை நீக்கப்பட்டதோடு, அவை இடம்பெற்ற சமூக வலைதளப் பக்கங்களும் நீக்கப்பட்டன.

இதனால், விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், அந்தச் சம்பவத்துக்காக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹேமா ருக்மணி, “ரசிகர்களின் ஐடி.க்கள் நீக்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஐடி.க்களை இழந்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வருகிற தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேமா ருக்மணி 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close