[X] Close

திரையும் காதலும்: களவாடிய காதல் கதைகள்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:01 am
  • அ+ அ-

-திரைபாரதி

எதிர்பாராதவிதமாக சர்வாதிகாரி ஒருவர் ஆட்சிசெய்து, காதல் கதைகளை சினிமாவில் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்தால், வறண்டுபோவதைத் தவிர தமிழ் சினிமாவுக்கு வேறு வழி இருந்திருக்காது. அந்த அளவுக்குக் காதலைத் தனது பிரதானக் கருப்பொருளாகக் கைக்கொண்டு கல்லா கட்டி வந்திருக்கிறது தமிழ் சினிமா.

எப்படிக் காதலிக்க வேண்டும், எப்படிக் காதலிக்கக் கூடாது என்று வசனங்களால் வகுப்பறை நடத்திய கறுப்பு - வெள்ளை சினிமாவின் காலத்தில், பல காவியக் காதல் கதைகள் படமாகியிருக்கின்றன.

காதலைத் திரைக்கதைகளில் எடுத்தாண்ட திரைப்படங்கள் அதைக் கௌரவம் செய்தனவோ இல்லையோ, கண்ணதாசன் காலம் தொடங்கி, காதலின் ஆழத்தை, மேன்மையை, தியாகத்தை, அதன் ஆகச் சிறந்த அமரத்துவத் தன்மையை, மிக முக்கியமாகக் காதலின் உயிர்ப்பைத் திரையிசைப் பாடல்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாடி வந்திருக்கின்றன. காற்றில் அலைந்துகொண்டிருக்கும் காதல் கீதங்கள் இன்னும் காதோரம் சொல்லிக்கொண்டிருப்பது அந்த உண்மையைத்தான்.

ஆனால், நூறு ஆண்டுகளைக் கடந்து வந்துவிட்டாலும் சாதியப் பிரச்சினையின் தீவிரத்தைச் சித்தரிக்க ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநருக்குக் காதல்தான் தேவைப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தின் ஆபத்தைப் பேச, ‘2.0’ படத்தில் ஷங்கர் போன்ற மில்லியன் டாலர் இயக்குநர்களுக்கும் எந்திரன்களுக்கும் இடையில் காதலைக் காட்டி, ‘கமர்ஷியல் வேல்யூ’வைக் கூட்ட வேண்டியிருக்கிறது.

இப்படிப் பிரச்சினைகளைப் பேசும் படங்களிலும் காதலை ‘கமர்ஷியல் வேல்யூ’ ஆக்க வேண்டிய கட்டாயத்தை உதறியெறிந்துவிடும் ‘96’ போன்ற படங்கள்தாம் காதலின் மகோன்னதம் அதன் நேர்மையிலும் கண்ணியத்திலும் அடங்கியிருக்கிறது என்ற உண்மையை, நம் நினைவுகளைக் கிளறிச் சொல்லிச் செல்கின்றன.

கடந்த அக்டோபரில் முன்பனிக் காலத்தின் முதல் பனித்துளிபோல வெளியான ‘96’ திரைப்படம் இன்னும் கவனத்தையும் விருதுகளையும் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. பழைய நினைவுகளை நோக்கிப் பயணித்து, பால்யத்தையும் பள்ளி, கல்லூரிப் பருவத்தையும் ஒப்பனைகள் ஏதுவுமின்றி நம்மையே நமக்கு

நினைவூட்டிய ‘96’ போன்ற காதல் படங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே வெளி வந்திருக்கின்றன. இந்தத் தலைமுறை ரசிகர்களிடம், நனவோடையில் பயணிக்க வைத்து, உங்கள் மனதைக் களவாடிய காதல் படங்களின் பட்டியலைக் கேட்டால் கண்டிப்பாக அதில் ‘அழகி’யும் ‘ஆட்டோகிராஃபு’ம் தற்போது ‘96’ ஆகிய மூன்று படங்களும் இடம்பிடித்துவிட்டதாகச் சொல்வார்கள்.

கவனிக்கப்படாத ஒற்றுமை

ஆனால், வந்த சுவடே தெரியாமல் சத்தமில்லாமல் வந்துபோன தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். சமீபத்தில் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து சென்னை வந்த நண்பர் தொலைபேசியில் அழைத்தார். “நான் பயணித்த விமானத்தில், உலக சினிமா பிரிவில் தமிழ்ப்படங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கிறதா என்று ஏக்கத்தோடு தேடினேன்.

ஆச்சரியகரமாக ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘காக்கா முட்டை’ போன்ற சில படங்களோடு என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு படம் ‘களவாடிய பொழுதுகள்’. பொதுவாகப் பன்னாட்டு விமானங்களில் காட்டப்படும் உலகத் திரைப்படங்களில், ரசிகர்கள் படத்தைப் பார்த்து ரேட்டிங் தந்தால் மட்டும்தான் ‘உலக சினிமா’ பிரிவில் தொடர்ந்து இடம்பிடிக்கும்.

தங்கர்பச்சான் ‘களவாடிய பொழுதுகள், படத்தை எடுத்திருக்கிறார் என்று தெரியும். அதை உலக சினிமா பிரிவில் பரிந்துரைக்கிற அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கத் தொடங்கினேன். படத்தைக் காணக் காண என் கண்கள் நீரைப் பெருக்கின. படத்தைப் பார்த்து முடித்தபோது என் மனம் ஒரு பறவையின் இறகைப்போல எடை குறைந்துபோயிருந்தது.

அந்தப் படம் எனக்கு அளவற்ற மன நிறைவையும் மனநிம்மதியையும் மட்டும் கொடுக்கவில்லை. என் கடந்த காலக் காதல் மீது எனக்கிருந்த கருத்துகளையெல்லாம் மாற்றி, காதலின் மீது பெரிய மரியாதையை உருவாக்கிவிட்டது. அதைவிடப் பெரிய ஆச்சரியம்.. ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் கதைக்கும் ‘96’ படத்தின் கதைக்கும் இடையில் நான் உணர்ந்த ஒற்றுமை!” என்று மனதைத் திறந்து கொட்டினார் நாற்பதை எட்டாத அந்த இளவயது நண்பர்.

“ இந்த இரு படங்களின் கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்குமான ஒற்றுமையைப் பற்றி விமர்சகர்களோ, ஊடகங்களோ ஏன் எதையுமே குறிப்பிடவில்லை? நீங்களும் திரை விமர்சகர்தானே; நீங்கள் கூட இந்த ஒற்றுமையை உணரவில்லையா?” என்று என்னிடம் கேட்டார். அவரது கேள்வியிலிருந்த நியாயத்தின் முன்னால் என் மௌனத்தை பதிலாக மண்டியிடச் செய்தேன்.

பிரிவும் ஒன்று கூடலும்

பள்ளி வாழ்க்கை, கிராமத்து வாழ்க்கை ஆகியவற்றின் பின்னணியில் துளிர்க்கும் இயல்பான பள்ளிப்பருவக் காதலை அதன் காலப் பயணத்தை, காதலர்களின் எதிர்பாராத மீள் சந்திப்பை அதனால் விளையும் சிக்கல்களைச் சமரசமின்றி நினைவுகளின் கல்வெட்டாய் நமக்கு முதலில் காட்டியது தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம்.

17.jpgஅந்தப் படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ‘ஆட்டோகிராஃப்’ வெளியானது. ஒரு ஆண் தனது வாழ்க்கையில் கடந்துவரும் பல பெண்களை நினைத்துப் பார்க்கும் ஆட்டோகிராஃப் வாழ்க்கையைப் பள்ளி மற்றும் பால்யத்தின் நினைவுகளுடன் சித்தரித்த விதத்தில் அழகியின் காட்சி பூர்வ தாக்கங்கள் ‘ஆட்டோகிராஃபி’லும் இருந்தன.

அதன்பின்னர் தங்கர்பச்சானே ‘பள்ளிக்கூடம்’ என்ற படத்தைக் கொடுத்தார். ஒரே பள்ளியில் படித்து, பழகி, காதலையும் உணர்ந்து ஆனால் வாழ்க்கையின் நிர்பந்தத்தால் பிரிந்துவிடுவார்கள். பின்னர் காலவோட்டத்தில், படித்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவதாக ‘பள்ளிக்கூடம்’ படத்தை உணர்வுகளின் சந்திப்பாகத் தந்திருந்தார்.

‘96’ படத்தின் பல பள்ளிக்கூட காட்சிகள் ‘பள்ளிக்கூடம்’ படத்தை நினைவூட்டியது என்றால், ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் கதைக்கும் ‘96’ படத்தின் கதைக்குமான ஒற்றுமை ஒருபடி அதிகமாகவே சிலிர்க்க வைத்தது.

சந்திப்பும் பிரிவும்

காதலர்களாக இருந்து வாழ்க்கையில் இணையத் தயாராக இருந்த நிலையில் பிரிந்து விடுகிறார்கள். விதிவசத்தால் ஒரு கட்டத்தில் இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் இருவரும் ஏன் பிரிய வேண்டி வந்தது, இருவரது வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்.

பேசித் தீர்த்தபின்பு, இவன் பிரிந்து கடந்துபோய்விட நினைக்கிறான். ஆனால், அவளால் அது முடியவில்லை. காதல் இருவரது மனங்களிலும் இன்னும் ஆழமாக எஞ்சியிருப்பதை இருவருமே உணர்கிறார்கள். அந்த உணர்தலின் மூலம் அவன் மீது அவளுக்கும் அவள் மீது அவனுக்கும் அக்கறை வெளிப்படுகிறது. ஆனால், உன்னதம் குறையாமல் தன் தூய்மையைக் காப்பாற்றி வைத்திருக்கும் தங்கள் காதலைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மீண்டும் பிரிகிறார்கள்.

இதுதான் எந்தப் படத்தின் தாக்கமும் இன்றி வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் கதை.

‘96’ படத்தைப் பொறுத்தவரை அதன் படமாக்கம், நடிப்பு, அது உருவாக்கிய உணர்வு நிலைகள் மிக உயர்ந்த தரத்தில் இருந்தன. அதற்குச் சற்றும் குறையாத உணர்வு நிலையுடன் பயணித்த ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் பல முக்கிய காட்சிகள் ‘96’ படத்தில் பிரதி பிம்பமாய் ஈர்த்துக்கொண்டன.

அவற்றில் முக்கியமானது ராம் தான் வசிக்கும் வீட்டுக்கு ஜானுவை அழைத்துச் செல்லும் காட்சி. ‘களவாடிய பொழுதுகள்’ படத்திலோ செழியனை தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் ஜெயந்தி.

இந்த ஜோடிகளின் மீள் சந்திப்பும் அந்தச் சந்திப்புகளில் ஊடாடும் அக்கறையும் குற்ற உணர்ச்சியும் காதலை அதன் தூய்மையோடு பொத்திக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பும் இரு ஜோடிகளிடமும் இந்த இரண்டு படங்களிலும் ஒரே தன்மையுடன் அவற்றின் முழுமையோடு வெளிப்பட்டிருக்கின்றன.

‘களவாடிய பொழுதுகள்’ எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த உரிய தருணத்தில் வெளியாகியிருந்தால் அதன் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும். விமர்சகர்களின் ஊடகங்களின் கவனத்தையும் அது ஈர்த்திருக்கும்.

ஆனால், தயாரிப்பு, வெளியீடு உள்ளிட்ட விநியோகச் சிக்கல்களில் பல ஆண்டுகள் கழித்து வெளியாகும் சிறந்த படைப்புகள், அவற்றின் தரம் சார்ந்தும் புறந்தள்ளப்பட்ட துயரம் ‘களவாடிய பொழுதுகள்’ போன்ற கலப்படமற்ற படத்துக்கு நிகழ்ந்துவிடக் கூடாது. அது காதலைக் கௌரவம் செய்யும் படமென்றால் அது ரசிகர்களைப் பிரிந்துவிடவே கூடாது.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்‘96’ படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி‘களவாடிய பொழுதுகள்’ படத்தில் பூமிகா, பிரபுதேவாதிரையும் காதலும்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close