[X] Close

நடிகர் சங்கத் தேர்தல்: தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 17:37 pm
  • அ+ அ-

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

2015 - 2018 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அவசர செயற்குழு கூட்டம், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

நாசர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் விஷால், பூச்சி முருகன், மனோபாலா, ஸ்ரீமன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 16) காலை தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார் நாசர். அதைப் பெற்றுக் கொண்டவர், விரைவில் தேர்தல் அலுவலகத்தைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close