சென்னை ஐசிஎஃப்-ல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டம்!


சென்னை: ஐ.சிஎஃப் ஆலையில் தூங்கும் வசதி கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் ஆர்டர் வழங்கியுள்ளது. இந்த ரயில்களை தயாரிப்பதற்கான வடிவமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக அளவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. இங்கு தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆலையில் தற்போது வரை அறுபதுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதற்கிடையில், சாதாரண வந்தே பாரத் ரயிலான அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன. அம்ரித் பாரத் ரயில்களில் ஏற்கெனவே இரண்டு ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், மேலும் சில அம்ரித் பாரத் ரயில்கள், வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

இந்த வரிசையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே மெட்ரோ ரயில்களையும் சென்னை ஐ.சி.எஃப்-பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ‘சென்னை ஐ.சி.எஃப்-பில் தற்போது வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இயக்கி பரிசோதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் இங்கு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 50 தூங்கும் வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆர்டரை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். சில ரயில்களில் 24 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்களை வடிவமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025-26-ல் தயாரிப்புப் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தற்போது, 10 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர்கள் கூறினர்.