இயக்குநர் பாலச்சந்தர் பிறந்தநாள்: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!


இயக்குநர் பாலச்சந்தரின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக வீடியோவில் பேசி பகிர்ந்துள்ளார்.

’நீர்க்குமிழி’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் கே. பாலச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரின் 94அவது பிறந்தநாளில் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ”கே.பி. அவரின் பிறந்தநாளன்று பேச வேண்டும் என்று எனக்கு நினைவுப்படுத்துகிறார்கள். அப்படி நான் நாள் குறித்து வைத்து அவரைப் பற்றி பேசுவதில்லை. எல்லா நாளும் அவரைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தனக்கு எந்தவித பயனும் இல்லை என்று தெரிந்தும் என்னைப் போன்ற பல திறமையான நடிகர்களை, நட்சத்திரங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரைப் போல வேறு யாரும் இத்தனை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பார்களா எனத் தெரியவில்லை. என்னுடன் அவர் சம்பந்தப்படாமலேயே இருந்திருந்தாலும் அவர் பெயர் விடுபடாது. சினிமாவில் இருந்து நான் கற்ற பல நல்ல விஷயங்கள் அவரிடம் இருந்து வந்தவை தான். அவருடைய பிள்ளைகள் என்று சொல்லி, அவர் வீட்டிற்கு வரும் சினிமா வாரிசுகள் ஏராளம். இன்று அவர் பிறந்தநாள்! எங்கள் அறிவு வளர்ந்த நாள்!” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.