சல்மான் கான் வழக்கில் 1,735 பக்க குற்றப்பத்திரிகை: அதில் என்ன இருக்கிறது?


பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 1,735 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு உள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி அதிகாலையில் பைக்கில் வந்த இருவர் சல்மான் கான் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம் நடந்த பிறகு டெல்லி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பின்ஷோய் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு நாங்கள் தான் காரணம் என்று ஃபேஸ்புக்கில் வெளிப்படையாக அறிவித்ததோடு இது டிரெய்லர் தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு தனிப்பட்ட எந்த காரணமும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டு சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. அந்த வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதில் இருந்து சல்மான் கான் வெளியே வந்தார். சல்மான் கான் வேட்டையாடிய மான்களை பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருகின்றனர். இதனால் சல்மான் கான், மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்திருந்தார். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் நீதிமன்றத்திற்கு வெளியே மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் தான் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் 1,735 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் சமர்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை மகாராஷ்டிரா அமைப்பு குற்றங்களைக் கட்டுப்படுத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதில் விசாரணை தொடர்பான ஆவணங்கள் உள்ளன. 46 சாட்சிகளின் வாக்குமூலம், 22 பஞ்சநாமங்கள், தொழில்நுட்ப சாட்சிகள் ஆகியவை குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஆய்வு செய்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.