[X] Close

மீண்டும் தொடங்கப்படுகிறது 'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 12:13 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

கைவிடப்பட்டு இருந்த 'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பெல்லி சூப்புலு'. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தைத் தருண் பாஸ்கர் இயக்க, விஜய் தேவரகொண்டா மற்றும் ரீத்து வர்மா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கைப்பற்றினார்.

அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த செந்தில் வீராசாமி இயக்க, விஷ்ணு விஷால், தமன்னா இருவரும் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 'பொன் ஒன்று கண்டேன்' என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். ஆனால், படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாக, அப்படத்திலிருந்து விஷ்ணு விஷால் விலகிவிட்டார். படமும் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் 'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை தெலுங்குப் படத்தைத் தயாரித்தவர்களே, தமிழிலும் தயாரிக்கவுள்ளனர். மீண்டும் விஷ்ணு விஷாலே நடிக்க பேச்சுவார்த்தை நடத்த, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். புதுமுக இயக்குநர் திவ்யா என்பவர் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 'பொன் ஒன்று கண்டேன்' தலைப்பிலேயே பண்ணப் போகிறார்களா அல்லது மாற்றப் போகிறார்களா என்ற விவரமும் விரைவில் தெரியவரும். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close