[X] Close

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 20:14 pm
  • அ+ அ-

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்யலாம் என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2015 - 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அவசர செயற்குழு கூட்டம், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (மே 14) மாலை 7 மணிக்குத் தொடங்கியது.

நாசர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் விஷால், பூச்சி முருகன், மனோபாலா, ஸ்ரீமன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பத்மநாபன் பொறுப்பேற்ற பிறகு, அவர்தான் தேர்தல் தேதி, நடைபெறும் இடம் ஆகியவை குறித்து முடிவு செய்வார்.

தற்போதைய தலைவரான நாசர் மீண்டும் போட்டியிடுவது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையிலான அணி களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close