[X] Close

முதல் பார்வை: அயோக்யா


  • kamadenu
  • Posted: 11 May, 2019 20:27 pm
  • அ+ அ-

-உதிரன்

ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'.

சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை.

இதனிடையே  ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்கிறது. அந்த மோதலுக்குக் காரணம் என்ன, விஷால் ஏன் ஆரம்பத்தில் கெட்ட போலீஸாக இருந்தார், பார்த்திபனும் அவரது நான்கு தம்பிகளும் என்ன ஆகிறார்கள் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

தெலுங்கில் ஹிட்டடித்த 'டெம்பர்' படத்தை தமிழில் வெங்கட் மோகன் ரீமேக் செய்துள்ளார். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை உள்ளது. அந்தக் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை இயக்குநர் வெங்கட் முன்னிறுத்தி இருக்கும் விதம் வித்தியாசமானது.

பணம் பறிப்பது, பொய் சொல்வது, தப்புக்குத் துணை போவது, அநியாயத்தைத் தானே செய்வது, மிரட்டுவது என போலீஸ் செய்யக்கூடாத அத்தனை வேலைகளையும் ஆர்டர் மாற்றாமல் செய்யும் இன்ஸ்பெக்டர் கர்ணன் கதாபாத்திரத்தில் விஷால் சரியாகப் பொருந்துகிறார்.  ஆமாம் நான் அயோக்கியன் தான், மோசமானவன் தான் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் விஷால், மனமாற்றத்துக்குப் பிறகு காதர் சார் என்று அழைப்பதும், கொடூரத்தின் பின்னணி உணர்ந்து கலங்குவதுமாக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். நீதி வெல்ல வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் ரிஸ்க் கதாபாத்திரத்தின் வலிமையைக் கூட்டுகிறது.

ராஷி கண்ணா கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.  யோகி பாபு காமெடிக்கான கடமையைச் செய்துவிட்டு காணாமல் போகிறார். ஆனந்த்ராஜ் யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். பூஜா தேவரியா அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளார். இனி ஒரு நடிகராகவும் அவர் பெரிய ரவுண்டு வரலாம். பேசியே டஃப் கொடுத்து ஸ்கோர் செய்யும் கதாபாத்திரத்தில் பார்த்திபன் இயல்பாக நடித்துள்ளார்.  ஆதாரத்தைக் கேட்டு விஷாலிடம் கெஞ்சும் இடங்களில் காமெடி கலந்த வில்லனாக குறை வைக்காமல் நடித்துள்ளார்.  நரேன், ராதாரவி, ஃபெரேரா, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, சச்சு, ராகுல் தாத்தா, சந்தானபாரதி, அர்ஜய்  என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் வந்து போகின்றனர்.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. சாம் சி.எஸ்.இசையில் கண்ணே கண்ணே பாடல் படத்துக்கு வேகத்தடை. யாரோ யாரோ பாடல் கதைக்கு கனம் சேர்க்கிறது. காட்டு காட்டு பாடல் தேவையே இல்லாத ஆணி. பின்னணி இசையில் டெம்போவைக் குறைக்காமல் பார்த்துக் கொள்கிறார் சாம் சி.எஸ்.

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை தர வேண்டும். தீர்ப்புக்கான காலக்கெடுவை அதிகம் நீட்டிக்கக் கூடாது என்ற கருத்தை இயக்குநர் வெங்கட் மோகன் முன் வைக்கிறார். சமூகத்தின் சமீபத்திய பிரச்சினையை உரக்கப் பேசிய விதத்தில் இயக்குநரின் அக்கறை வரவேற்கத்தக்கது. கெட்ட போலீஸ் நல்ல போலீஸ் ஆகும் தருணம், அதற்கான பின்னணியை இயக்குநர் வெங்கட் மோகன் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.

கே.எஸ்.ரவிகுமார் - விஷால், விஷால்- பார்த்திபனுக்கு இடையே நடக்கும் உரையாடல்களில் இயக்குநர் தன் முத்திரையைப் பதிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் முதன்முறையாக விஷாலுக்கு சல்யூட் அடிக்கும் காட்சி செம்ம.

ஒரு நீதிமன்றத்தில் இப்படி வாய் வலிக்கப் பேச முடியுமா? தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்பவர் சொல்ல முடியுமா? போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் விஷாலும்- பார்த்திபனும் வெறுமனே சவால் விட்டும் சத்தம் போட்டும் பிரிகிறார்கள். அவர்களுக்கு இடையேயான மோதல் வெறும் நாடகமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் இருக்கும் பகையில் வலுவில்லாமல் போகிறது. இது வழக்கமான கமர்ஷியல் படத்தில் வரும் பிழைகள்தான்.

நீதி, நியாயத்துக்கு ஸ்பெல்லிங் தெரியாமல் வரும் இன்ஸ்பெக்டர் அந்த நீதிக்காக, நியாயத்துக்காக செய்யும் உச்சபட்ச நடவடிக்கைக்காக 'அயோக்யா'வை ரசிக்கலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close