[X] Close

மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பது சந்தேகமே: விஷால்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:51 am
  • அ+ அ-

மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பது சந்தேகமே என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தவுடன், திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. தொடர்ச்சியாக விஷால் அணியின் செயல்பாடுகள் குறித்து எதிரணியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தனர்.

கணக்கு வழக்குகள் சரிவர இல்லை, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாதது, இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்த செலவுகள் என பல்வேறு விஷயங்களை முன்வைத்து சங்கங்களின் பிரதிகளிடம் புகார் ஒன்றை அளித்தது எதிரணி. இதனை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், பதில் சரிவர இல்லாத காரணத்தால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுள்ளது.

என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நியமித்துள்ளது தமிழக அரசு. இது விஷால் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் 'அயோக்யா' படம் தொடர்பாக, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் விஷால். இதில் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான கேள்விக்கு “தயாரிப்பாளர் சங்க விஷயங்களை விட பைரசி விஷயத்தில் அரசு இன்னும் ஆர்வம் காட்டியிருக்கலாம் என விரும்புகிறேன். விசேஷ அலுவலரின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

நான் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் ஐஸ்க்ரீம் தான் விற்க வேண்டும். சங்கத்தின் தலைவராக இருந்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் நிற்பேனா என்பதில் சந்தேகமே. நான் எந்த காரியத்தையும் அரைகுறையாக விட்டதில்லை என்று மட்டும் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்,

மேலும், சிறிய படங்களுக்கு விஷால் உதவவில்லை என ஆர்.கே சுரேஷ் மற்றும் உதயா கூறிய குற்றச்சாட்டைப் பற்றிக் கேட்டதற்கு, "அவர்கள் படத்தின் கதை நன்றாக இல்லை. அது மட்டுமே ஒரே காரணம். ஒரு படத்தைப் பார்க்க வெறும் நான்கு நபர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அந்தப் படத்தை இரண்டு வாரம் ஓட்ட வேண்டும் என நான் திரையரங்க உரிமையாளரை நிர்பந்திக்க முடியாது. அது ரஜினிகாந்த் படம், அறிமுக நடிகரின் படமோ" என்றும் பதிலளித்துள்ளார் விஷால்

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close