[X] Close

'ஆல் இன் ஆல் அழகுராஜா’ கவுண்டமணிக்கு வாழ்த்துகள்


koundamani-birthday

  • வி.ராம்ஜி
  • Posted: 25 May, 2018 12:31 pm
  • அ+ அ-

’பத்த வச்சிட்டியே பரட்டை!’ - பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இந்த வசனத்தைச் சொன்னவரை, ரஜினிக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, ஊர்மக்களையும் சிலசமயங்களில் ரஜினியையுமே நக்கலடிக்கிற அந்த நபரை அப்போது யாருக்கும் தெரியாது. இன்றைக்கு அவரைப் பார்த்தாலே வெடித்துச் சிரித்துக்கொண்டிருக்கிறோம். அந்த நகைச்சுவை சரவெடியின் பெயர்... கவுண்டமணி.

’சரோசா... குப்பை கொட்றியா... கொட்டு கொட்டு...’ என்று கே.பாக்யராஜின் முதல்படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி பேசிய இந்த வசனம்தான், அநேகமாக முதல் பஞ்ச் காமெடியாக இருக்கவேண்டும். இதில்தான் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்தார் கவுண்டமணி.

’கிளிகிளிகிளிகிளி... இங்கே ஒரு கிளி, அங்கே ஒரு கிளி. இங்கே இருக்கறது பச்சைக்கிளி, அங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி’ என்று கிழக்கே போகும் ரயிலில் இவரின் கேரக்டரும் மாடுலேஷனும் பாடி லாங்வேஜூம், கவுண்டமணிக்கு கொடிக் கொடுத்து பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்கள் ரசிகர்கள்.

கவுண்டமணியின் முதல் ஸ்பெஷல்... தனித்துவம்தான். எந்த நடிகரின் சாயலும் இல்லை. எவரையும் முன்மாதிரியாகக் கொண்டு நடிக்கவில்லை. திரையில் மிகவும் புதிதாக வலம வந்தார். அதுவே கவுண்டமணியின் பலமானது. பிறகு, நடிப்பு, காலை உதைத்துக்கொண்டு, கையை ஆட்டிக்கொண்டு, விறைப்பாக நின்றுகொண்டு, எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டு என குற்றாலம் அருவி போல, கோடையின் வியர்வை போல, நடிப்பில் புதுப்புது உத்திகளை கொட்டிக்கொட்டி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

போதாக்குறைக்கு, மெட்ராஸ் பாஷை, மதுரை பாஷை என்று கோலோச்சிக்கொண்டிருந்த சினிமாவுக்குள், இவரின் வரவு நல்வரவு. சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சுப்ரமணி, கோவையில் இருந்து புறப்பட்டு வரும்போதே, நம்பிக்கையையும் திறமையையும் கூடவே கோவை பாஷையும் அள்ளிப்போட்டுக்கொண்டுதான் கோடம்பாக்கத்துக்குள் இறங்கினார். அவரின் நம்பிக்கை, திறமை, கோவை பாஷை எதுவுமே அவரை கைவிடவில்லை. பிறகு, அந்த கோவை பாஷையால் மணிவண்ணனும் சத்யராஜூம் ‘ண்ணா’ என்று விஜய்யும் பேசியதெல்லாம் தனிக்கதை.

தயாரிப்பாளரிடம் இயக்குநர்கள் கதை சொல்லவந்தால், தயாரிப்பாளர் சொல்லும் முதல் விஷயம்... ‘கவுண்டமணிக்கு கேரக்டர் இருக்கா. அவருக்கு கதைல ஸ்கோப் இருக்கற மாதிரி பண்ணமுடியுமா. பண்ணுங்க. பண்ணுவோம்’ என்பார்கள். அதேபோல் இயக்குநர்களும் நாயகன், நாயகி, கவுண்டமணி என்று வைத்துக்கொண்டே கதை பண்ணி ஹிட்டடித்தார்கள்.

அந்தக் காலப் படங்களில், எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கருடன் சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் என்று கூடவே வருவார்கள். படத்துக்கு பலம் சேர்த்து, பணமும் சேர்த்துச் சேர்த்துக் கொடுத்தது. அதையடுத்து எண்பதுகளில் நீண்டகாலமாக இருந்த கொஞ்சமான இடத்தை, கவுண்டமணியை இட்டுதான் நிரப்பினார்கள்.

‘இந்த சென்னை மாநகரத்திலே...’ என்று பயணங்கள் முடிவதில்லை படத்தின் ஹவுஸ் ஓணரை மறக்கவே முடியாது. ‘ஏங்க. கிடா எப்ப வெட்டுவீங்க கிடா எப்ப வெட்டுவீங்க’ என நான் பாடும் பாடலில் இவரின் கிடாக் கேள்விக் கேலிகள், விடாக்கண்டன் கொடாக்கண்டனையும் விலாநோகச் சிரிக்கவைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் படங்களில், கவுண்டமணிக்கு வெகு அழகாக காமெடி மேடை போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும். அவரும் அந்த மேடையில் தில்லாலங்கடி காமெடியெல்லாம் பண்ணி, வயிறுகளைப் பதம் பார்த்தார். ‘இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்பதை, இப்போதும் எதற்கெல்லாமோ சொல்லி, லைட்டை வெயிட்டாக ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள், நெட்டிசன்கள்.

சின்னதம்பியும் மன்னனும் நடிகனும் சிங்காரவேலனும் என கவுண்டமணி ரவுசு... தாங்கமுடியலடா ரகம். பவித்ரன் இயக்கத்தில், ஷங்கரின் இணை இயக்கத்தில் வெளியான சூரியன் படத்தில், ‘நாராயணா... இந்தக் கொசுத்தொல்லை தாங்கமுடியலடா சாமீ’, ‘ஸ்டார்ட் மியூசிக்’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதெல்லாம் இத்தனை வருடங்கள் கடந்தும் கூட, டிரெண்டிங்கில் ஹிட்டடித்துக்கொண்டே இருக்கிற எவர்கிரீன் பஞ்ச் காமெடி டயலாக்குகள்.

ஒரு நடிகர், எந்த நடிகருடன் நடித்தாலும் மெர்ஜ் ஆகவேண்டும். கனெக்ட் ஆகிவிடவேண்டும். எந்த இயக்குநரின் படத்தில் நடித்தாலும் அந்த இயக்குநரின் கேரக்டரைஷேனை, வெளிக்கொண்டுவரவேண்டும். கிராம, நகர வித்தியாசங்களின்றி, புகுந்துபுறப்படவேண்டும். இந்த மூன்றிலும் ஜித்தனாகத் திகழ்பவர் கவுண்டமணி. சத்யராஜூடன் நடிப்பார். ஹிட்டு. கார்த்திக்குடன் நடிப்பார். அதுவும் ஹிட்டு. கமலுடன் நடிப்பார். அதுவும் வெற்றி. ரஜினியுடன் நடிப்பார். செம வெற்றி. பிரபு, விஜயகாந்துடன் நடிப்பார். மெகா வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக செந்திலுடன் சேர்ந்து செய்த ரவுசு மிகப்பெரிய வெற்றி. கவுண்டமணியையும் செந்திலையும் பிரித்துப் பார்க்கவே இல்லை ரசிகர்கள். லாரல் ஹார்டி ஹிட் கொடுத்து அசத்தியது தனியே எழுத வேண்டிய விஷயம். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், பி.வாசு மட்டுமின்றி ஷங்கர் வரைக்கும் கவுண்டமணியின் கவுண்ட்டிங்கை சரியாய் டெலிவரி எடுத்துக்கொண்டு, பயன்படுத்திய இயக்குநர்களின் பட்டியல் ரொம்ம்ம்ம்ம்பப் பெருசு.

ஜெண்டில்மேன் அப்பளக் கம்பெனி, இந்தியன் ஆர்டிஓ ஆபீஸ், மேட்டுக்குடி அரண்மனை, உள்ளத்தை அள்ளித்தா ஊட்டி அட்மாஸ்பியர், உதயகீதம் உண்டியல், அதே படத்தின் தேங்காய் வெடிகுண்டு... என கவுண்டமணியின் காமெடிகள் எல்லாமே அணுகுண்டு ரகம்.

நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், எகத்தாளம், அலட்டல், உட்டாலக்கடி என்பதற்கெல்லாம் தனித்தனி பாடிலாங்வேஜ்கள் வைத்து, சினிமாவில் பொளந்துகட்டிய கவுண்டமணியின் காமெடிகள் எல்லாமே, எப்போதுமே ஆல்டைம் அதிரிபுதிரிகள்.

காமெடி என்றில்லை. பகீர் கிளப்பும் வில்லனாகவும் வருவார். திடீர் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் மனதில் நிற்பார். தமிழ் சினிமாவின் ஹிட் படங்களை ஆராய்ச்சி செய்து, வடிகட்டி, சர்வே செய்தெல்லாம் பார்த்தால், அதன் பல படங்களின் ஹிட்டுகளுக்கும் அள்ளிய வசூலுக்கும் காரணகர்த்தாவாக சைலண்டாக இருப்பார் கவுண்டமணி. அதுவும் அவரின் ஸ்டைல்தான் போல! ’அடங்கொப்பா.. ஒலக மகா நடிப்புடா சாமி’, ’இதுக்குத்தான் ஊர்ல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கறது...’, ’நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கமுடியலப்பா...’ என்பதெல்லாம் பட்டாசுச் சிரிப்புகள். நகைக்குண்டு கலாட்டாக்கள்.

பட்டங்கள், அடைமொழி என்று எதையும் எதிர்பார்க்காதவர் கவுண்டமணி. ஆனாலும் மக்களின் மனங்களில் இன்றைக்கும் பறந்துகொண்டிருக்கிறது, கவுண்டமணிப் பட்டம்.

மணி என்றால் money... பணம். தயாரிப்பாளர்களின் இயக்குநர்களின் ரசிகர்களின் காமெடியன் என்பதாலேயே கவுண்டமணி நடித்திருக்கிறார் என்றாலே, வசூல் மழை பெய்தது.

மணி என்றால் time. இவரின் டைமிங்சென்ஸ்தான்... மிகப்பெரிய அந்தஸ்தையும் உயரத்தையும் மக்களிடம் பெற்றுத்தந்திருக்கிறது.

கவுண்ட்டிங் கொடுத்து, அதிலும் டைமிங்கில் சித்துவேலைகள் காட்டி, மணிமணியான வசனங்களால்... இன்றைக்கு நாளைக்கு நாளை மறுநாள் என்றில்லை... அடுத்தடுத்த ஜெனரேஷன் நெட்டிசன்களுக்கும் சேனல் நேயர்களுக்கும் ரசிகர்களுக்கும்... கவுண்டமணி எப்போதுமே தனிக்காட்டு ராஜா!

தமிழ் உலகில், வாழைப்பழத்தைப் பார்த்தாலும் சரி, சாப்பிட்டாலும் சரி... அப்போதெல்லாம் பழச்சுவையுடன் கவுண்டரின் நகைச்சுவையும் உள்ளே புகுந்து மகிழ்விக்கும். ‘சொப்பனசுந்தரி’யை யார் வைத்திருந்தார் என்பது இருக்கட்டும். அந்த சொப்பனசுந்தரியையும் காரையும் அந்தக் காமெடியையும் இன்றைக்கும் என்றைக்கும் வைத்துக்கொண்டிருக்கிறோம், மனதில்!

மே 25... இன்று கவுண்டமணி பிறந்தநாள்.

அண்ணே... கவுண்டமணிண்ணே... வாழ்த்துகள்ணே!

மேலும் சினிமா தொடர்பான கட்டுரைகளைப் படியுங்கள்...

ஆச்சி!

'15 படங்கள் ஹிட்...’ - 'உதயகீதம்’ கே.ரங்கராஜ் - 15 வருடங்களுக்குப் பிறகு மனம் திறக்கிறார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close