[X] Close

இயக்குநரின் குரல்: இங்கே வெற்றிதான் எல்லாமே!


  • kamadenu
  • Posted: 10 May, 2019 10:58 am
  • அ+ அ-

-சந்திப்பு:கா.இசக்கிமுத்து

டீஸரைப் பார்க்கும்போதே சில படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கண்ணாடி’ டீஸரைச் சொல்லலாம். இது பேய்ப் படமா, திரில்லர் படமா, காதல் படமா என்று ஊகிக்க முடியாத அளவில் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் வெளியீட்டுப் பணியில் மும்முரமாக இருந்த ‘கண்ணாடி’ இயக்குநர் கார்த்திக் ராஜூவை சந்தித்துப் பேசியதிலிருந்து...

‘கண்ணாடி’ படத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்?

மக்களுக்கு ஒரு நல்ல திரில்லர் அனுபவமாகப் படம் இருக்கும். இப்போதைக்கு டீஸரில் சில காட்சிகள் வரும். அதை வைத்து இதுதான் கதை என ஊகிக்க முடியும்.

ஆனால், படமாகப் பார்க்கும்போது, அதைத் தாண்டி ஒன்றைச் சொல்லி இருக்கேன். இதுவரை தமிழ் சினிமா வில் பார்க்காத காட்சியாக அது இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

எதை அடிப்படையாக வைத்து இக்கதையை எழுதினீர்கள்?

முந்தைய படமான ‘உள்குத்து’ படத்தைப் பார்த்தவர்கள், படம் நல்லாயிருக்கு என்று பாராட்டினார்கள். ஆனால், வசூல்ரீதியாக வரவேற்புப் பெறவில்லை. மனசு உடைஞ்சு போனது. என்னை நிலைநிறுத்த வேண்டிய சூழல் இருந்ததால் ரொம்பவே குழம்பினேன்.

அந்த நேரத்தில் வந்த ஐடியாதான் இந்தக் கதை. ஒரு வரிக் கதையைப் பிடித்து விட்டு, சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தேன். 4 நாட்களில் மொத்தக் கதையையும் எழுதி முடிச்சேன்.

படத்துக்கு சந்தீப் கிஷனை எப்படிப் பிடித்தீர்கள்?

இந்தக் கதையைப் பல நடிகர்கள் கேட்டு, சூப்பரா இருக்கு என்று பாராட்டினாலும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. ஆனால், சந்தீப் கிஷனிடம் சொன்னவுடன் ‘செமயா இருக்கு, உடனே பண்ணலாம்’ என்று அடுத்த கடத்துக்கு நகர்த்தினார்.

தெலுங்கில் அவரே தயாரித்தார். படத்தில் நன்றாகவும் பண்ணியிருக்கார். நாயகியாக அன்யா சிங் அறிமுகமாகிறார். தமிழில் சுப்பு தயாரித்திருக்கிறார்.

5.jpg 

தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் படப்பிடிப்பு என்றால் கஷ்டமாக இருந்திருக்குமே...

தெலுங்கில் படம் பண்ணிட்டு, தமிழில் டப்பிங் பண்ணி ‘இது தமிழ் படம்’ என்று நாங்கள் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு காட்சியையுமே தமிழ், தெலுங்கு என 2 தடவை படமாக்கினோம். தமிழில் கருணாகரன் கதாபாத்திரத்தை, தெலுங்கில் வெண்ணிலா கிஷோர் பண்ணியிருக்கார்.

இப்படி நாயகன், நாயகியைத் தாண்டி மற்ற எல்லோரையும் மாற்றியிருக்கேன். கதையிலும் படப்பிடிப்பிலும் தெளிவாக இருந்தால், 2 மொழிகளில் இயக்கியது எளிதாகவே இருந்தது.

சினிமாவில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

எப்படி இல்லாமல் இருக்கும். ஒரு படத்தை இயக்கி முடித்து பைனல் காப்பி எடுத்து தயாரிப்பாளரிடம் கொடுத்தவுடன் இயக்குநரின் பணி முடிவடைந்துவிடுவதில்லை. அப்படத்தின் வெற்றி, தோல்விதான் இயக்குநரின் அடுத்த படத்தைத் தீர்மானிக்கும்.

‘உள்குத்து’ கடும் போராட்டத்துக்குப் பிறகு வெளியானது. எல்லாம் நன்றாக இருந்தும் ஏன் வரவேற்பு கிடைக்கல என்று ஆராய்ச்சி செய்ய விரும்பல. அப்படிப் பண்ணத் தொடங்கினால், அடுத்த பட வேலைகள் பாதித்துவிடும்.

ஏன் கிராபிக்ஸ் துறையை விட்டு இயக்குநராக ஆனோம் என வருந்தியிருக்கிறீர்களா?

 ‘உள்குத்து’ படத்துக்கு பிறகு வருந்தியிருக்கேன். லட்சங்களில் சம்பளம் என்று நல்லா போயிட்டிருந்த வாழ்க்கை, இயக்குநரானவுடன் அப்படியே மாறிடுச்சு. படப்பிடிப்பு நடக்கும்போதுதான் பணம் வரும். படப்பிடிப்பு முடிந்த உடனே படம் வெளியாகத் தாமதமானால் பணமும் கொடுக்க மாட்டாங்க.

அப்போது குடும்பத்தைக் கவனிக்கணும், பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் என்று கடுமையான போராட்டம்தான். இயக்குநராகனும்னு வந்துவிட்டோம் ஜெயிக்காமல் போகக் கூடாது என்ற வைராக்கியத்துடன் ஓடிட்டு இருக்கேன்.

இந்தப் போராட்டத்துக்கு என் மனைவியும் அம்மாவும்தான் பக்கபலமா இருக்காங்க. அவங்க மட்டும் வீட்டில் கொஞ்சம் முகத்தைக் காட்டியிருந்தால், திரும்பவும் வேலைக்குப் போயிருப்பேன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close