[X] Close

விஷாலின் ’அயோக்யா’ ரிலீஸ் இல்லை: பின்னணி என்ன?


  • kamadenu
  • Posted: 10 May, 2019 09:04 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' திட்டமிட்டப்படி இன்று (மே 10) வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம், முதலில் ஏப்ரல் 19-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார்கள். ஆனால், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் இன்று (மே 10) வெளியீடு என்று அறிவித்தார்கள்.

நேற்று (மே 9) வரை தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த ’அயோக்யா’ இன்று (மே 10) காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

'அயோக்யா' வெளியாகாதது குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், "'அயோக்யா' படத்துக்காக கடுமையாக உழைத்து, அதன் வெளியீட்டுக்காக காத்திருந்தேன். நடிகரைத் தாண்டி என்னால் இயன்ற அளவுக்கு என்ன பண்ண வேண்டுமோ பண்ணினேன். எந்தவிதப் பிரச்சினையுமின்றி வெளியாகும் என நினைத்தேன். ஆனால், முடியவில்லை. எனக்கும் ஒரு நேரம் வரும். எனது பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’அயோக்யா’ வெளியாகாதது குறித்து விசாரித்த போது, “'டெம்பர்' படத்தின் தயாரிப்பாளர், அதன் அனைத்து மொழி உரிமைகளையும் இந்தி திரையுலகில் உள்ள ஒருவருக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழ் மொழி உரிமையை தனியாகவும் விற்றுவிட்டார்.

தற்போது அனைத்து மொழி உரிமைகளையும் கைப்பற்றியவர், எப்படி தமிழ் மட்டும் தனியாக விற்கலாம். ஆகையால் எனக்கு 3 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே படம் வெளியிட முடியும் என்று தடை வாங்கியுள்ளார்.

மேலும், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரோ தற்போது திட்டமிடப்படி படம் வெளியாகவில்லை. ஆகையால் என்னால் 1.25 கோடி ரூபாய் தர இயலாது என்கிறார். ஒட்டுமொத்தமாக தற்போது 4.25 கோடி ரூபாய் பிரச்சினையில் உள்ளது” என்று முன்னணி பைனான்சியர் ஒருவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close