[X] Close

நீட் தேர்வு அச்சம்: சஹானாவுக்கு நம்பிக்கை அளித்த சிவகார்த்திகேயன்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:31 pm
  • அ+ அ-

நீட் தேர்வுக்கு முன்னதாக மாணவி சஹானாவிடம் போனில் பேசி, தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கடந்த வருடம் கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி சஹானா, புயலால் விழுந்த குடிசை வீட்டில் இருந்தபடியே படித்து, ப்ளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்தார்.

வாழ்வாதாரத்தை இழந்துநின்ற வேளையிலும் விடாமுயற்சியுடன் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த சஹானாவுக்கு, எல்லா இடங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. சஹானாவுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்றும், அவருக்குப் பண உதவி தேவை என்றும் தொலைபேசி எண்களோடு ட்வீட்கள் வெளியாகின. அவருக்கு உதவிகளும் கிடைக்கத் தொடங்கின.

இந்தத் தகவல் சிவகார்த்திகேயனுக்குத் தெரியவர, ‘சஹானா என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும். அவர் படிப்புக்கான முழுச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என உறுதி அளித்தார் சிவகார்த்திகேயன். இதனால், சஹானா குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. சஹானாவும் இந்த நுழைவுத்தேர்வை எழுதியுள்ளார். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக சஹானாவுக்குப் போன் செய்து, நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், சஹானாவின் குடும்பத்தினருடனும் ஆறுதலாகப் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த அக்கறையைக் கண்டு சஹானா குடும்பத்தினர் நெகிழ்ந்து போயுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close