[X] Close

மும்பை கேட்: எப்போதும் தன்னம்பிக்கை இருந்ததில்லை


  • kamadenu
  • Posted: 03 May, 2019 09:58 am
  • அ+ அ-

-தொகுப்பு: கனி

எப்போதும் தன்னம்பிக்கை இருந்ததில்லை

சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ மௌலி என இரண்டு பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருக்கிறார் ஆலியா பட். ஆனால், ‘இந்த இருவரின் படங்களில் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தனக்கு எப்போதுமே இருந்ததில்லை’ என்று சொல்லியிருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் ‘இன்ஷால்லா’ படத்தில் முதன் முறையாக சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஆலியா.

தோல்வியால் ஷாரூக் ஏமாற்றம்

ஷாருக் கானின், ‘ஜீரோ’ படம் தோல்வியடைந்ததால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்தப் புதிய படத்திலும் நடிக்கும் மனநிலையில் தான் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த முறை புதிய படத்தைத் தேர்வுசெய்வதற்கு மூன்று மாதங்களாவது அவகாசம் எடுத்துகொள்ளவிருப்பதாகவும் ஷாருக் கான் தெரிவித்திருக்கிறார்.

“படங்கள் பார்ப்பதற்கும் திரைக்கதைகளைக் கேட்பதற்கும் புத்தகங்களைப் படிப்பதற்கும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அடுத்து எந்தப் படத்தில் நடிக்கலாம் என்பதை ஜூன் மாதம்தான் முடிவெடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

என் மனதுக்குப் பிடித்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். இதுவரை 15-20 கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவற்றில் 2-3 கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால், இன்னும் எந்தப் படத்தில் நடிப்பது என முடிவெடுக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார் ஷாருக் கான்.

விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கைக் கதையில் ஷாருக் கான் நடிக்கவிருப்பதாக ஜனவரி மாதம் தகவல் வெளியானது. ஆனால், பின்னர் அந்தப் படத்திலிருந்தும் அவர்  விலகிவிட்டார். அடுத்ததாக, ‘டான் 3’ படத்தில் ஷாருக் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டு வந்த இர்ஃபான்

லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்று சமீபத்தில் மும்பை திரும்பினார் இர்ஃபான் கான். வந்தவுடனேயே ‘அங்ரேசி மீடியம்’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். மீண்டும் தனது நடிப்புப் பயணத்தை மகிழ்ச்சியுட தொடர்ந்திருப்பதை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ‘அங்ரேசி மீடியம்’ படத்தின் முதல் பார்வையையும் அதில்தான் ஏற்று நடிக்கும் ‘சம்பக் ஜி’ கதாபாத்திரத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

2017-ம் ஆண்டு இர்ஃபான் நடிப்பில் வெளியான ‘இந்தி மீடியம்’ படத்தின் அடுத்த பாகமாக ‘அங்ரேசி மீடியம்’ வெளியாகவிருக்கிறது. ஹோமி அதஜானியா இயக்கும் இந்தப் படத்தில் இர்ஃபானுக்கு இணை, கரீனா கபூர். அமெரிக்காவில் படிக்க ஆசைப்படும்  முதல் தலைமுறைப் பெண்ணின் ஆங்கிலம் தெரியாத தந்தையின் கதாபாத்திரத்தை  இர்ஃபான் ஏற்க, அவரது மகளாக நடிக்கிறார் ராதிகா மதன்.

“வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் பயணம்செய்யும் நாம், அன்பைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்துவிடுகிறோம். பாதிப்புக்குள்ளாகும்போதுதான், நமக்கு அது புரிகிறது. என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெற்றதை நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். உங்களின் அன்பு, சிகிச்சையின்போது என்னைப் பெரும் அளவுக்கு அமைதிப்படுத்தியது. அதனால் உங்களிடம் நான் திரும்பிவந்திருக்கிறேன்” என்று நெகிழ்ந்திருக்கிறார் இர்ஃபான்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close