[X] Close

 ''பாரதிராஜா அஸிஸ்டென்ட்டுன்னாலே உடனே சான்ஸ்;முதல்படம் 'நெஞ்சமெல்லாம் நீயே’ ரிலீசாகி 36 வருடங்கள்!’’- இயக்குநர் கே.ரங்கராஜ் நெகிழ்ச்சி பேட்டி


36

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 15:25 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

‘’முதல் படம் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ ரிலீசாகி இன்றுடன் 36 வருடங்களாகிவிட்டன. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்ததாலேயே உடனே டைரக்‌ஷன் வாய்ப்பு கிடைத்தது’’ என்று இயக்குநர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.

‘நெஞ்சமெல்லாம் நீயே’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘மனிதனின் மறுபக்கம்’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் கே.ரங்கராஜ்.

இயக்குநர் பாரதிராஜாவிடம், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இருந்து, ‘அலைகள் ஓய்வதில்லை’ வரை ஐந்து படங்களுக்கு மேல் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு, ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தின் மூலம் இயக்குநரானார்.

1983ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வெளியானது ‘நெஞ்சமெல்லாம் நீயே’. மோகன், ராதா, பூர்ணிமா பாக்யராஜ், கவுண்டமணி முதலானோர் நடித்த இந்தப் படம், பாடல்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. சங்கர்கணேஷ் இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட இன்றுடன் படம் வெளியாகி, 36 வருடங்களாகிவிட்டன.

இயக்குநர் கே.ரங்கராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். மேலும் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘’எண்பதுகளில், எல்லாத் தயாரிப்பாளர்களும் பாரதிராஜா சாரை வைத்து படம் பண்ணவேண்டும் என்று படையெடுத்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது, பாரதிராஜாவிடம் வந்த பாக்யராஜ் வெற்றிபெற்றார். அதேபோல், அவரிடம் இருந்த உதவி இயக்குநர்களையும் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். மணிவண்ணன், மனோபாலா, நான் என வரிசையாக படங்கள் பண்ணினோம்.

’புதிய வார்ப்புகள்’ படத்தில் அவரிடம் உதவி இயக்குநரானேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ வரைக்கும் ஐந்து படங்கள் அவரிடம் பணிபுரிந்தேன். இதுதான் எனக்கான விசிட்டிங்கார்டு. ஐஎஸ்ஐ முத்திரை. பாரதிராஜா சாரிடம் இருந்து வெளியே வந்தபோதே, எனக்கு படம் ரெடியாக இருந்தது. தயாரிப்பாளர் கதையைக் கேட்டு ஓகே சொன்னார்.

krangaraj.jpg 

மோகனைக் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார். பாடகி ராதாவின்  கணவராக, தாழ்வு மனப்பான்மை கொண்டவராக சிறப்பாக நடித்திருப்பார். அதேபோல் ராதாவை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நன்றாகப் பழக்கம். அவர் உடனே ஒத்துக்கொண்டார். பூர்ணிமா ஜெயராமும் சம்மதித்தார். கொஞ்சம் சீரியஸான கதையாகிவிடக்கூடாதே என்பதால், கவுண்டமணி காமெடி போர்ஷன் வைத்தோம். அதுவும் ஒர்க் அவுட்டானது.

தயாரிப்பு மற்றும் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு, இளையராஜா சாரிடம் போகவில்லை. இந்த மியூஸிக்கல் சப்ஜெக்ட்டுக்கு ராஜா சார் இசை பொருத்தமாக இருக்கும். அதேசமயம், சங்கர்கணேஷும் பிரமாதமான இசையைத் தந்திருந்தார்கள்.

சென்னையில் வீடு, ஸ்டூடியோ என ஷூட் செய்துவிட்டு, அப்படியே ஊட்டிக்குச் சென்று முழுவதுமாகப் படமாக்கினோம். ஒரேகட்டமாக படத்தை எடுத்துமுடித்தோம்.

‘அபிமான்’ எனும் இந்திப் படம் என்னை ரொம்பவே பாதித்திருந்தது. அந்தத் தாக்கத்தில்தான் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ எடுத்திருந்தேன். வைரமுத்து எழுதி, வாணி ஜெயராம் பாடிய ‘யாரது... சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது?’ என்ற பாடல் இன்றைக்கு வரை மிகச்சிறந்த பாடல்களின் பட்டியலில் இருக்கிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் டைரக்டர் பாரதிராஜா சார், ‘உனக்கு ஃபேமிலி சென்டிமென்ட் நல்லா வருதுய்யா’ என்று பாராட்டினார். இந்தப் படம் சூப்பர் ஹிட் என்று சொல்லமாட்டேன். ஆனால் படம் தோல்விப்படமில்லை.

இந்தப் படம் வெளியான கையுடன், அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சார் அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். பாண்டியன், ரேவதி மண்வாசனைக்குப் பிறகு, இதில் ஜோடியாக நடித்தார்கள். இதன் பிறகு ‘நிலவு சுடுவதில்லை’ படம் பண்ணினேன். இதில்தான் இளையராஜா சாருடன் இணைந்தேன். அதையடுத்து, தொடர்ந்து அவர்தான் என் படங்களுக்கு இசை. அதுமட்டுமா? ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘மனிதனின் மறுபக்கம்’, ‘உனக்காகவே வாழ்கிறேன்’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ என வரிசையாகப் படங்கள். இளையராஜா சார் தயாரித்த ‘கீதாஞ்சலி’ படத்தையும் இயக்கினேன். இப்படி பல அனுபவங்களுக்கெல்லாம் கதவு திறந்துவிட்ட இந்தநாள் (1983 ஏப்ரல் 29), ‘நெஞ்சமெல்லாம் நீயே’ திரைப்படம் என எதையும் மறக்கவே முடியாது.

இதிலொரு சுவாரஸ்யம்... என் முதல் படமான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தில் பாடகி ராதாவின் கணவராக மோகன் நடித்திருப்பார். பிறகு ‘உதயகீதம்’ படத்தில் பாடகராகவே நடித்திருப்பார். அதன் பிறகு, ரசிகர்களால் மைக் மோகன் என்றே அழைக்கப்பட்டார். ஆக, இசைக்கும் மோகனுக்குமான ஏதோவொரு பந்தம், ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்திலேயே தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்’’ என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக தெரிவித்தார் இயக்குநர் கே.ரங்கராஜ்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close