[X] Close

விஜயவாடாவுக்குள் நுழைய தடை விதித்தது ஏன்?- சந்திரபாபு நாயுடுவுக்கு ராம்கோபால் வர்மாவின் 16 கேள்விகள்


16

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 12:38 pm
  • அ+ அ-

-இணையதள செய்திப்பிரிவு

தன்னை விஜயவாடாவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது ஏன் என வினவி 16 கேள்விகளை ஆந்திர முதல்வருக்கு முன்வைத்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து லட்சுமிஸ் என்.டி.ஆர். என்ற படத்தை இயக்கியுள்ளார். என்.டி.ராமாராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக வந்த ராம்கோபால் வர்மாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஹைதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர்.

இது தொடர்பாக ராம்கோபால் வர்மா தனது முகநூல் பக்கத்தில் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

விஜயவாடா விமானநிலையத்திலிருந்து எனது ஹோட்டலுக்கு நான் செல்லும்போது எனது காரை தடுத்து நிறுத்தி என்னை கைது செய்தனர். இதன் நிமித்தமாக நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1. என்னை தடுத்து நிறுத்தி அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் என்ன செய்தேன்?

2. என்னை தடுத்து நிறுத்திய போலீஸார் நான் விஜயவாடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை எனக் கூறி ஹைதராபாத் அனுப்பினார்கள். எனக்கு தடை உத்தரவு பிறப்பித்தது யார்?

3. விமானநிலையத்தில் 7 மணி நேரம் ஓர் அறைக்குள் என்னைப் பூட்டி வைத்தனர். என்னை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை யாராவது சொல்ல முடியுமா?

4. செய்தியாளர்கள் சந்திப்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக தடுக்கப்படுவதாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான முழுமையான விளக்கம் எதுவுமே இல்லை. நான் ஏன் விஜயவாடாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை? நான் ஏன் மணிக்கணக்காக சிறை பிடிக்கப்பட்டேன்? நான் ஏன் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டேன் என்பதற்கான விளக்கமில்லை?

5.நான் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு தடை விதித்தது ஏன்? எனது நண்பரின் இடத்தில்தான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். எனது அடிப்படை பேச்சுரிமைக்கு எதிரானது அல்லவா இது?

6.விஜயவாடா டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனருடன் நான் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றேன். ஆனால், ஏன் எனது தொடர் முயற்சிகளையும் தாண்டி அவர்கள் அமைதியாக இருந்தனர்.

7. என்னை சிறை பிடித்துச் சென்ற போலீஸ்காரர்கள்கூட அந்த உத்தரவை யார் பிறப்பித்தது என்பதை சொல்லவே இல்லையே..ஏன்?

8. அது ஒரு தனிநபர் முடிவா? அல்லது பலரது முடிவா? எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என ஏன் யாரும் சொல்லாதது ஏன்?

9. அரசியல் தலைவர்களின் கைக்கூலிகளாக போலீஸார் செயல்படுகின்றனரா?

10. இது ஒரு பொறுப்பு அரசாங்கமே. அதனால் டிஜிபியும், கமிஷனரும் தானே முடிவுகளை எடுக்க வேண்டும்? அப்படியென்றால் அவர்களே தான் விளக்கமும் சொல்ல வேண்டும்?

11. போலீஸ் நடவடிக்கை என்பது இப்படி தற்காலிகமானதாக அல்லது விசித்திரமானதாக இருந்துவிட முடியாது. தனிநபர்களின் உரிமையை சுதந்திரத்தை பறிக்கும் எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் அது எந்த சட்டதிட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமல்லவா?

12. போலீஸார் என்னை தடுத்து நிறுத்தியது என்பது நிர்வாக முடிவு. நான் எந்த விதிமீறலிலும் ஈடுபடாமலையே அவர்கள் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்றால் இதன் பின்னணியில் யாருடைய தலையீடு இருந்துள்ளது. அதனால் இந்த முடிவை எடுத்தது யார் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

13. டிஜிபியும் விஜயவாடா போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

14. காவல்துறை அரசாங்கத்தின் கைப்பாவையாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதை மறுத்தார்கள் என்றால் போலீஸார் அதனை நிரூபிக்க வேண்டும்.

15. ஓர் அறைக்குள் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு என்பது எப்படி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை.

16. கடைசியாக சந்திரபாபு நாயுடுவிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். இது ஜயநாயக இந்தியாவா? இல்லை அடக்குமுறை ஆந்திராவா?

எனது உரிமைகளும் சுதந்திரமும் இரக்கமின்றி பறிக்கப்பட்டுள்ளன. பொது இடத்தில் என்னை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதற்கான விடைகள் எனக்குத் தெரிய வேண்டும். ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் மக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பிருக்கிறது.

எனக்கு நம் அரசியல் சாசனத்தின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நமது தேசத்தின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் குடிமகனாக எப்போதுமே நான் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடந்திருக்கிறேன்.

எனது 16 கேள்விகளுக்கும் 16 மணி நேரத்துக்குள் பதில் கிடைக்கவில்லை என்றால் நான் நீதிமன்றத்தை நாடுவேஎன்.

ஜெய்ஹிந்த்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close