[X] Close

உயர்ந்த மனிதன் - 50: வெட்கப்பட்ட கதாநாயகிகள்!


50

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 12:34 pm
  • அ+ அ-

-ரசிகா

ஏவி.எம். தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-ம் படமாக, 1968 நவம்பர் 29 அன்று வெளியானது ‘உயர்ந்த மனிதன்’. இத்திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட,

என்.டி.ஃபேன்ஸ் என அழைக்கப்பட்டுவரும் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு சங்கமும் (NTFANS) அப்பாஸ் கல்சுரல் அகாடமியும் இணைந்து சென்னையில் சிறப்பான விழா ஒன்றை எடுத்தன.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், முதுபெரும் நட்சத்திரங்கள் சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, பாரதி, எஸ்.என்.பார்வதி, குமாரி சச்சு, இசையரசி பி.சுசீலா, தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் ஆகியோருடன் மோகன் வி.ராமன், பகவதி பெருமாள், கவிதாலயா கிருஷ்ணன் எனத் திரையுலக ஆளுமைகள், சிவாஜி குடும்பத்தின் சார்பில் ராம்குமார் கணேசன் எனத் திரளாக வருகை தந்து மதிப்புக் கூட்டிய இந்த விழாவை என்.டி.ஃபேன்ஸ் சங்கத்தின் தலைவர் ஒய்.ஜி.மகேந்திரா தனக்கே உரிய பாணியில் ஒருங்கிணைத்தார்.

நடிப்பின் மீது ஒரு மதிப்பீடு

விழாவில் ‘உயர்ந்த மனிதன்’ படத்திலிருந்து பல காட்சிகளைத் திரையிட்டு அதில் வெளிப்பட்டிருந்த நடிகர் திலகத்தின் நடிப்பு நுணுக்கங்களை ஒய்.ஜி.மகேந்திரா விளக்கிக் கூறியபடியே வந்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்துகொண்டே இருந்தது.

ஒய்.ஜி.மகேந்திரா நடிகர் திலகத்தின் ஒவ்வொரு காட்சியையும் திரையிட்டு வழங்கிய ரசனை மிகுந்த மதிப்பீடு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, ‘மிஸ்டர் ராஜலிங்கம்… ஓனர் ஆஃப் 100 ஸ்டாஃப்ஸ்’ என்ற வசனம் இடம்பெற்ற காட்சியை அவர் விளக்கியபோது அரங்கம் மொத்தமும் உற்சாகத்தில் துள்ளியது.

படத்தின் நடிகர் சிவகுமாருக்காக அறிமுகக் காட்சி, சௌகாருக்காக டாக்டர் செக்கப் காட்சி, வாணிஸ்ரீ காதல் காட்சி, பாரதிக்காக கொடைக்கானலில் விவாதக் காட்சி, அசோகனின் இறுதிக்காட்சி என ஒவ்வொரு காட்சியில் சக நட்சத்திரங்களுடன் நடிகர் திலகம் தனது வெளியை எந்த அளவுக்குத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டு மிளிர்கிறார் என்பதை அவர் எடுத்துக் கூறியவிதம் அனைவரையும் கவர்ந்தது.

சிவாஜியின் நடிப்பை மதிப்பிட்ட அதேநேரம், திரையிட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடியவர்கள் என அவர்களது பங்களிப்பு செய்த மாயத்தையும் குறிப்பாக நினைவு கூர்ந்தார்.

10.jpg 

மூழ்கடித்த இசை வெள்ளம்

சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, பாரதி ஆகியோருடன் இசையரசி பி. சுசீலா ஆகியோர் முதலில் கௌரவிக்கப்பட்டார்கள். பாடகி சுசீலா மேடையேறியபோது அரங்கமே அதிர்ந்தது. ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இந்த மூன்று கதாநாயகிகளுக்கும் தாம் ஒருவரே பின்னணி பாடியதை மகிழ்ச்சியுடன் நினைவூட்டிப் பேசிய அவர், அந்த மூன்று பேரின் பின்னாலும் சென்று நின்று கொண்டு அந்தந்தப் பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

சௌகார் பின்னால் நின்று ‘அத்தானின் முத்தங்கள்’ பாடலையும் வாணிஸ்ரீயின் பின் நின்று ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா...’ பாடலையும் பாரதியின் பின் நின்று ‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடலையும் பாடியபோது மூன்று முன்னாள் கதாநாயகிகளின் முகங்களிலும் புன்னகை கலந்த மெல்லிய வெட்கமும் மகழ்ச்சியும் பரவியது. வாணிஸ்ரீயின் முதல் படத்தில் அவருக்குத் தான் பாடிய முதல் பாடலும் நிலவைப் பற்றிய பாடல்தான் என்றும் நினைவூட்டினார்.

பிரிக்க முடியாத பந்தம்

படத்தின் இயக்குநர் கிருஷ்ணனின் பேத்தி ஜோதி மேடையில் கௌரவிக்கப்பட்டார். விழாவின் முக்கிய அம்சமாக மௌனராகம் முரளி இசைக் குழுவினர் ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் இசைத்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மேலும் சில நடிகர் திலகத்தின் படப் பாடல்களையும் பாடினார்கள். ‘உயர்ந்த மனிதன்’ பாடல்களைப் பாடியபோது பின்னணியில் அப்பாடல் காட்சியின் அபூர்வக் கறுப்புவெள்ளை ஒளிப்படங்கள் திரையில் மிளிர்ந்தன.

80 வயதைத் தாண்டிவிட்ட சௌகார் ஜானகி 3 மணி நேரம் நடந்த விழா முடிவடையும் வரையில் இருந்து முழுதாகக் கண்டு களித்ததை ரசிகர்கள் வியப்புடன் சிலாகித்த நிகழ்ச்சியின் முடிவில், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘தெய்வ மகன்’ ஆகிய படங்களுக்கான 50 ஆண்டு நிறைவு விழாக்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து நடைபெற இருப்பதாக ஒய்.ஜி.மகேந்திரா குறிப்பிட்டபோது மீண்டும் அரங்கில் ஆரவாரம் எழுந்தது. நினைவுகளை மீட்டிய இந்த விழாவைத் திறம்பட வடிவமைத்த என்.டி.ஃபேன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ஸ்ரீநினிவாஸ், ராகவேந்திரா இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close