[X] Close

சாவித்ரி மா செய்த தவறுகளை நான் என்றும் செய்யமாட்டேன்: கீர்த்தி சுரேஷ்


keerthy-suresh-mahanati-interview

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 May, 2018 16:25 pm
  • அ+ அ-

தான் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கீர்த்தி சுரேஷ் நினைத்துப் பார்க்கவில்லை. நடிகை சாவித்ரியின் மனதைப் பிசையும் கதையை சொன்ன இந்தப் படம், கீர்த்தி சுரேஷுக்கும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுத் தந்துள்ளது.

"சாவித்ரி வேடத்தில் நடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவர் குறைந்த காலமே வாழ்ந்தாலும் அவரது வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்கள் நடந்துள்ளன. குடும்பம் மற்றும் நண்பர்களின் மதிப்பை நான் அறிந்துகொண்டேன். பொழுதுபோக்குத் துறை உங்களை தனிமைப்படுத்திவிடும் என்பது தெரிந்தது. தனது வாழ்க்கையிலும், தொழிலிலும் சாவித்ரிமா செய்த தவறுகளை கண்டிப்பாக நான் செய்ய மாட்டேன்.

ரசிகர்கள் இந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பைத் தந்துள்ளனர். இந்தப் படத்தை ஒப்புக்கொள்ளும்போது விசேஷமாக ஏதோ செய்யப்போகிறோம் என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஆனால் இப்படி ஒரு தாக்கத்துக்கு நாங்கள் தயாராக இருக்கவில்லை. எங்களுக்கு வரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் எங்களை மூழ்கடித்துவிட்டன. இந்த அளவுக்கு நான் இதற்கு முன் பாராட்டுகளை பெற்றதில்லை.

சாவித்ரி கதாபாத்திரத்தின் இருண்ட பக்கங்களை என்னால் சரியாக நடிப்பில் கொண்டு வர முடியுமா என்பதில் எனக்கு சந்தேகங்கள் இருந்தன. முக்கியமாக அவர் குடிப்பழக்கத்தை காட்டும் காட்சிகள். ஆனால் இயக்குநர் அஸ்வின் நாக் தெளிவாக இருந்தார். ’தொடரி’ படத்தில் நான் ஒரு பாடலில் நடித்ததைப் பார்த்த அவர், சாவித்ரி அவர்களின் இளமை பருவத்தை, அந்த அப்பாவித்தனத்தை, குறும்பை என்னால் சரியாக நடிப்பில் கொண்டு வர முடியும் என்று நம்பினார்.

சாவித்ரி நடித்த திரைப்பட காட்சிகளை இயக்குநர் எனக்கு அனுப்பினார். மகிழ்ச்சி, உணர்ச்சிமயம், நகைச்சுவை என அவர் காட்சிகளை வகைப்படுத்தியிருந்தார். இவற்றைப் பார்த்தும், ‘மாயா பஜார்’ படத்தை முழுமையாகப் பார்த்தும், சாவித்ரியாக நடிக்கும்போது என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொண்டேன்.  இதைத் தாண்டி நான் அவரது வேறு படங்களை பார்க்கவில்லை..

அவரை அப்படியே பிரதி எடுத்து நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் வழியில் நான் நடித்தேன். வரலாற்று சிறப்புமிக்க படமாக இது இப்போது பார்க்கப்படுகிறது. சாவித்ரி அவர்கள் மீது இன்னமும் நிறைய அன்பும், பாசமும் மக்களிடம் இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் இருக்கும் குறைகளை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை எங்களால் உறுதியாக கணிக்க முடியவில்லை. ஆனால் ரசிகர்களோ படத்தை அரவணைத்து, சாவித்ரியின் வாழ்க்கையை அந்தக் குறைகளோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதைத் தாண்டி நான் வேறு என்ன கேட்க முடியும். இப்படி ஒரு மிகப்பெரிய நிஜ ஆளுமையின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது இன்னும் 10 வருடங்கள் கழித்தே எனக்கு வந்திருக்கக்கூடும். ஆனால் சாவித்ரி அவர்களின் கதையில் நடிப்பது என் விதி என நினைக்கிறேன். அவரது இருப்பு இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது எங்களை வழிநடத்துவதாக நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.

இனி இது போன்ற கதாபாத்திரங்களில் அடிக்கடி நடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் ‘நடிகையர் திலகம்’ போன்ற பாத்திரங்களும் படங்களும் அடிக்கடி வருவதில்லை. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இருக்கும் மாஸ் கமர்ஷியல் படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியே.

கமர்ஷியல் படங்கள், நாயகியை மையமாக வைத்து உருவாகும் கதைகள் என சரிசமமாகவே இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஆனால் அடுத்து வெளிவரவிருக்கும் ’சாமி 2’, ’சண்டைக்கோழி 2’, ’தளபதி 62’ ஆகிய மூன்று படங்களும் நடிகையர் திலகத்துக்கு முன்னால் கையெழுத்தானவை. இந்தப் படங்களில் கதாநாயகனுக்கே முக்கியத்துவம் இருக்கும்.

இந்தப் படங்களில், ’நடிகையர் திலகம்’ போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் என்னை எதிர்பார்த்தால் ரசிகர்கள் ஏமாந்து போவார்கள். ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் அப்படியான படங்களை நான் தேர்ந்தெடுப்பேன் என்று உறுதியாகக் கூற முடியும்" என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

- ஐ ஏ என் எஸ்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close