[X] Close

‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 21:02 pm
  • அ+ அ-

பாகிஸ்தானில் பாலிவுட் படங்கள் பிரபலம், ஆனால் தென்னிந்திய படங்கள் அவ்வளவு பெரிதாக அங்கு விரும்பப்படுமா என்பது சந்தேகமே, ஆனால் அங்கு நம் கமல்ஹாசனுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார், அவர் பெயர் கரண் குமார் காத்ரி, அவர் அங்கு தனிநபர் கமல்ஹாசன் ரசிகர் மன்றமாகவே மாறிவிட்டார்.

 

ட்விட்டரில் உங்களுக்குப் பிடித்த நடிகர் என்று சுவார்ஸ்யமான ஒன்று தொடங்கப்பட அதில் பிடித்த நடிகர், கருத்துக் கூறியவர் வசிக்கும் நாடு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இதில்தான் கரண் குமார் காத்ரி என்ற அந்த தீவிர கமல் ரசிகர் அடையாளம் காணப்பட்டார்.

 

இதில் பதிலிட்ட பலரும் மர்லன் பிராண்டோ முதல் டாம் ஹார்டி என்று பெரிய பெரிய பெயர்களை உதிர்க்க கரண் மட்டும் கமல்ஹாசன் என்றாரே பார்க்கலாம்.

 

ஒருவேளை இவர் தமிழரோ, இந்தியரோ என்று நினைத்த வேளையில் இரண்டுமே அல்ல, கராச்சியில் வசிக்கும் பாகிஸ்தானியர்தான் கரண் குமார் காத்ரி என்பது தெரியவந்தது.

 

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றாலும் 25 வயதான இவர் கமல்ஹாசனைப் பற்றி பல விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ளார்.  “என்னைப் பொறுத்தமட்டில் உலகின் மிகச்சிறந்த நடிகர் என்றால் அது கமல்தான்” என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சார்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது உற்சாகத்துடன் கூறினார் கரண்.  ‘வெறும் நடிப்பு மட்டுமல்ல, தான் வகிக்கும் கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து கொள்வதிலும் அவர் சிறந்தவர். ஹே ராம், விருமாண்டி படங்களில் அவரை விட்டால் வேறு ஒருநடிகரை நினைத்துக் கூட பார்க்க முடியாது’ என்கிறார் மேலும் அவர்.

 

“அப்புராஜா, ஹிந்துஸ்தானி (இந்தியன்), சாச்சி 420, சாகர சங்கமம் ஆகிய படங்களை பார்க்கும்வரை தென்னிந்திய படங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவை இந்தியில் டப் செய்யப்பட்டன. வழக்கமான பாலிவுட் படங்களை விட இவை வித்தியாசமாக இருந்தன.  நான் கமலை ‘அபய்’ (ஆளவந்தான்), தசாவதாரம் புரோமோ மூலம் அறிந்தேன்” எனும் கரண், ஆளவந்தானுக்குப் பிறகு கமல்ஹாசன் பிற படங்களை நெருக்கமாகப் பார்க்க ஆரம்பித்தேன். தசாவதாரம் பார்த்த பிறகுதான் கமலை ‘ஆராய’ தொடங்கினேன் என்கிறார்.

 

2013-ல் விஸ்வரூபம் படம் மூலம் ஏற்பட்ட எதிர்ப்புகளை அறிந்துள்ள கரண், “தீவிரவாதத்தை அந்தப் படம் பேசியதனாலேயே அது ஒரு தலைபட்சமான படம் என்று கூற முடியாது” என்கிறார்.  “இது என் மனதைப் பறக்கடித்தது. ஏய் இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததில்லை என்று நினைத்தேன்” என்றார். பாகிஸ்தானில் கமலுக்கு ரசிகர் மன்றம் எதுவும் இல்லை, ஆனால் தான் ஒரு நபர் ரசிகர் மன்றம் என்று கூறுகிறார் கமல்.

 

‘ஹே ராம்’

 

கமல் படங்களிலேயே ‘ஹேராம்’ படம்தான் அறிவார்த்தமாகத் தூண்ட வைக்கும் படம் என்றும் ஹே ராம் படத்தை மட்டும் தான் பலமுறை பார்த்ததாகக் கூறும் கரண், “முதல் முறை ஹே ராம் படத்தைப் பார்கும் போது நாவல் படிப்பது போல் உணர்ந்தேன்” என்கிறார்.

 

மேலும் கரண், ‘அன்பே சிவம்’, விருமாண்டி போன்ற தத்துவார்த்தப் படங்கள்தான் பிடிக்கும் என்று கூறும் கரண் நாயகன் படம் பற்றி பெரிய அபிப்ராயம் கொள்ளாதவராக இருக்கிறார்.

 

“நான் நாயகன் பற்றி பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தேன் ஆனால் அதில் கிரேட்டாக ஒன்றுமில்லை. விருமாண்டிதான் நான் பார்த்ததிலேயே சிறந்த கதையாடல் படம். அது பல மட்டத்தில் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்தது.

 

கமல் மட்டுமல்லாது ரஜினி, மம்மூட்டி, மோஹன்லால்  ஆகியோர் படங்களையும் கரண் பார்த்துள்ளார், ஆனால் “என் குறைந்தப் பட்ச அறிவுக்கு கமல் போன்று யாரும் என்னைக் கவரவில்லை” என்கிறார்.

 

எல்லையைக் கடந்து சமீபமாக கேஜிஎஃப், 2.0 ஆகிய படங்கள் பாகிஸ்தானில் வெளியானதாக குறிப்பிடும் கரண், பாகிஸ்தானில் சில படங்கல் தடை செய்யப்படும் சில படங்கள் அனுமதிக்கப்படும் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு போன்றது அது என்கிறார்.

 

“நான் கமல் படங்களை விரும்பிப்பார்க்க தொடங்கிய காலக்கட்டத்தில் இந்தியன் 2 தான் தன் கடைசி படம் என்று அவர் அறிவித்து விட்டார், இது எனக்கு வருத்தமளிக்கிறது.” என்றார்.

 

கமல் மக்கள்நீதிமய்யம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அவரது அரசியல் நகர்வுகளை தான் கூர்ந்து கவனித்து வருவதாகக் கூறும் கரண் ஒரு கமல் ரசிகராகவே சமூகத்துக்குத் தேவையான சீர்திருத்தங்களை அவர் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்.

 

கமல் படங்களைத் தியேட்டரில் பாகிஸ்தானில் பார்க்க வேண்டும், இது தன் நிறைவேறாத ஆசை என்கிறார் கரண். இந்தியன் 2 படம் பாகிஸ்தானுக்கு வரும் என்று நம்பும் அவர், ”வேறு தலைப்புடன் வெளிவந்தால் எனக்கு அதைத் தியேட்டரில் இங்கு பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்” என்றார்.

 

மூலம்: எஸ்.ஸ்ரீவத்சன் (தி இந்து ஆங்கிலம்)

தமிழில்: இரா.முத்துக்குமார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close