[X] Close
 

'நான் சங்கிலி வந்திருக்கேன்’... சங்கிலி முருகனுக்கு பிறந்தநாள்!


sangili-murugan-birthday

  • வி.ராம்ஜி
  • Posted: 15 May, 2018 10:43 am
  • அ+ அ-

'நான் சங்கிலி வந்திருக்கேன்’...

இந்த வசனத்தையும் கம்பீரத்தையும் மறக்கமுடியுமா என்ன? உடலில் கருப்புப் போர்வையும் கையில் தடியுமாக, பார்வையாலேயே பதைபதைக்கச் செய்திருப்பார். முருகன் என்றால் தெரியாது. சங்கிலி முருகன் என்றால் அந்த முரட்டுப் பார்வையும் உருட்டி மிரட்டும் விழிகளும் எல்லோருக்கும் பரிச்சயம்.   

‘இப்பத்தான் சங்கிலி முருகன். அதாவது சினிமாவுக்கு வந்த பின்னாடிதான் இந்தப் பேரு. ஊர்லநாட்லெல்லாம் நமக்கு ‘பொதும்பு’ முருகன்னுதான் பேரு. பொதும்பு முருகன்னு சொன்னாத்தான், மதுரைல பாதிபேருக்குத் தெரியும்’’ என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன்.

மதுரை அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள பொதும்புதான் சொந்த ஊர். சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்தவரை வரவேற்று, வாய்ப்பும் கொடுத்தவர் கே.பாக்யராஜ்.

‘இன்னிக்கி இருக்கிற வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவரே பாக்யராஜ் சார்தான். அவரோட ரெண்டாவது படமான ஒருகை ஓசைல என்னை நடிகனா அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்துல எம்பேரு சங்கிலி. அதனால சங்கிலி முருகனாயிட்டேன். இந்த ஜென்மம் முழுக்க பாக்யராஜ் சாருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்.

ஏன் சொல்றேன்னா... சினிமால ஒரு அடைமொழிதான் பெரிய அங்கீகாரம். நாடகத்துல நடிக்கும்போதே, தந்தை பெரியா, சிவாஜின்னு சொல்லி, நடிகர்திலகத்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தாரு. வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தின்னு அடையாளப்படுத்துறது, நல்ல அங்கீகாரம். அப்படி நான் நடிச்ச கேரக்டர் பெயரோட எம்பேரும் சேர்ந்து, எல்லாரும் சங்கிலி முருகன்னு கூப்பிடுறாங்கன்னா... இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்க’’ என்று சொல்லி நெகிழ்கிறார் சங்கிலி முருகன்.

’’அதுமட்டுமா? என்னோட கேரக்டருக்கு முதல்ல வைச்ச பேரு என்ன தெரியுங்களா? ‘செட்டிநாயக்கன்’. பாக்யராஜ் சார், அந்தப் பேருதான் வைச்சிருந்தாரு. என்ன சார் இது... ரெண்டு ஜாதியோட பேரா இருக்குதேன்னு கேட்டேன். பாக்யராஜ் சார், ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த காலகட்டத்துல, ஒருத்தர் கூட்டிட்டுப் போவாராம். அந்த காவல்காரருக்கு அதான் பேராம். அதனால, அவர் நினைவா அந்தப் பேரு வைச்சேன்னு சொன்னாரு. ஆனாலும் பளிச்சுன்னு ஜாதிப்பேரா இருக்குதேன்னும் யோசிச்சாரு போல.

‘என்னய்யா பேரு வைக்கலாம்’னு அஸிஸ்டெண்ட்டுகள்கிட்டக் கேட்டாரு. ஒவ்வொருத்தர் ஒவ்வொருபேரா சொன்னாங்க. எல்லாம் ரெடி... ஷூட்டிங் ஸ்பாட்டு. டீக்கடை வாசல்ல நிக்கணும். டயலாக் பேசணும். ஆனா பேரு பத்தி டிஸ்கஷன். அப்ப அவரோட அஸிஸ்டெண்ட் கோவிந்தராஜன், ‘சங்கிலி’ன்னு சொன்னாரு. சட்டுன்னு பரவசமான பாக்யராஜ் சார், ‘இதான்யா பேரு’ன்னு சொல்லி, ‘நான் சங்கிலி வந்திருக்கேன்’ன்னு முத வசனம் கொடுத்தாரு. அப்பலேருந்து சங்கிலி முருகனாவே வர ஆரம்பிச்சேன்.

இந்தப் பேரு வைச்சதுல நெஞ்சே குளிர்ந்துபோச்சுங்க. ஏன் தெரியுங்களா? எங்க குலசாமி பேரு சங்கிலிதான். எங்க குலசாமியே பாக்யராஜ் சார் ரூபமா வந்துதான், நமக்கொரு வாழ்க்கையைக் கொடுத்துருக்கறதா நினைக்கிறேன்’’’ என்று சொல்லி நெகிழ்ந்து மகிழும் சங்கிலி முருகன். வரிசையாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இன்றைக்கும் நடித்துவருகிறார்.

 நடுவே தயாரிப்பாளராகவும் இருந்து பல படங்கள் எடுத்திருக்கிறார். விஜயகாந்தை வைத்து இராம. நாராயணன் இயக்கத்தில் கரிமேடு கருவாயன் எடுத்தார். மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து எங்க ஊரு பாட்டுக்காரன், சர்க்கரைப் பந்தல், எங்க ஊரு பூவாத்தா, பாண்டி நாட்டுத் தங்கம், பெரியவீட்டு பண்ணக்காரன், நாடோடி பாட்டுக்காரன், காதலுக்கு மரியாதை என்று எல்லாமே வெற்றிப்படங்கள்தான்.

‘’நான்  என்ன பண்ணினேன். எல்லாப் படமும் வெற்றியைக் கொடுத்ததுக்கு இளையராஜா சார்தான் காரணம். அவரோட இசையும் பாட்டுங்களும்தான் காரணம். இளையராஜா அவங்க அண்ணனோடயும் தம்பியோடயும் கிளம்பி, சென்னைல வந்து இறங்கினதும் நேரா என்னைப் பாக்கதான் வந்தாங்க. பாவலர் பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அப்ப ஆரம்பிச்ச பழக்கம்... இன்னிக்கி வரை நட்பா, அண்ணன் தம்பியாட்டம் இருக்கோம். அப்படியொரு நல்ல மனசு அவருக்கு. இதுவும் ஒரு கொடுப்பனைதான்.

’’இதுமட்டுங்களா? சிவாஜி சாரோட கருடா செளக்கியமா படத்துல நடிச்சிருந்தேன். அதுல நான் வில்லன். ஆனா அவருக்கு மாலை போடுற மாதிரி ஒரு சீன் உண்டு. அப்ப அந்த மகாகலைஞனுக்கு மானசீகமா வாழ்த்தி, வணங்கி மாலை போட்டேன். ஆனா நான் வில்லன் அதுல. அப்புறமா... கமல் சார், தேவர்மகன்ல சான்ஸ் கொடுத்தாரு. சிவாஜி சாரோடயே இருக்கற மாதிரியான கேரக்டர். வாழ்நாள் சாதனையா இந்த நாட்களே போதும்... இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் பண்ணிருக்கேனோ, தெரியலீங்க...’’ என்று பரவசம் பொங்க, கண்ணீர் வழியச் சொல்லிச் சிரிக்கிற சங்கிலி முருகனுக்கு இன்று 15.5.18 பிறந்தநாள்.

சங்கிலிமுருகன் அண்ணே... நீங்க நல்லாருக்கணும்ணே. பிறந்தநாள் வாழ்த்துகள்ணே!

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close