[X] Close

திரை விமர்சனம்- வாட்ச்மேன்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:18 am
  • அ+ அ-

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ், வட்டிக்குப் பணம் வாங்கி தண்ணீர் கேன் பிஸினஸ் செய்கிறார். அதில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பணம் கொடுத்த ரவுடி வீட்டுக்கே வந்து மிரட்டுகிறார்.

இந்நிலையில், தான் காதலித்த பெண்ணுடன் திருமணம் முடிவாகிறது. ஒரே நாளில் கடனை அடைக்கிறேன் என வாக்கு கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ், பலரிடம் கெஞ்சியும் பணம் கிடைக்காததால், ஒரு பங்களாவுக்குள் திருடச் செல்கிறார்.

அப்போது அந்த பங்களாவை காவல் காக்கும் நாயிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த காவல் நாய் ஜி.வி.பிரகாஷை வெளியே செல்லவிடாமல் வீட்டுக்குள் துரத்துகிறது.

பங்களாவில் நுழையும் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பங்களா வில் வசிக்கும் முன்னாள் போலீஸ் அதி காரியான சுமனைக் கொல்ல தீவிரவாதி கள் சிலர் முயற்சி செய்கிறார்கள். சுமனோடு சேர்ந்து ஜி.வி.பிரகாஷ் என்ன செய்கிறார் என்பதுதான் ‘வாட்ச்மேன்’ படத்தின் கதை.

ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நகர்த்திச் செல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், இயக்குநர் விஜய் அதற்காக கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்திருக்கிறார். ஒரு திடீர் திருடனுக்கு நேரும் எதிர்பாராத அதிர்ச்சியை சுவா ரஸ்யம் குறையாமல் காட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

திருடப் போகும் இடத்தில் நாயிடம் மாட்டிக்கொள்ளும்போது அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றம் நாயகனைப் போல பார்வையாளர்களுக்கும் தொற் றிக்கொள்கிறது. ஆனால், பங்களாவுக் குள் தீவிரவாதிகள் நடத்தும் துப்பாக்கிச் சண்டை ‘வீடியோ கேம்ஸ்’ போல மாறி காட்சியின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட பங்களாவுக்குள் திருடச் செல்ல, கதை நாயகன் எடுக்கும் முடிவுக்கான காரணத்தை இயக்குநர் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த சிசிடிவி கேமரா யுகத்தில் சர்வ சாதாரணமாகத் திருடச் செல்வது சாத்தியமா என்பதை இயக்குநர் கவனிக்க மறந்துவிட்டார்.

பெரிய துப்பாக்கிகளுடன் வீட்டைச் சுற்றி சுமனைத் தேடுகிறார்கள் தீவிரவாதி கள். ஆனால், விட்டலாச்சார்யா படத் தில் வருவதுபோல சுமனும் ஜி.வி.பிர காஷும் அவர்கள் கண்ணில் படாமல் மறைந்துபோகிறார்கள். அவர்கள் கண் ணில் தென்படும்போது, தீவிரவாதி கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தோட்டா சுடுவேனா என்கிறது.

மாறாக, தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். கொஞ்சமும் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் இல் லாத இந்தக் காட்சிகள் படம் பார்ப் பவர்களை அயர்ச்சியில் தள்ளி விடுகிறது.

இரண்டாம் பாகம் முழுவதுமே காட்சிகள் வேறு எங்குமே நகராமல், அந்த அரை வெளிச்ச பங்களாவிலேயே நடப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. போலீஸ் அதிகாரியைப் பழித் தீர்க்க தீவிரவாதிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாக இல்லை. துப்பாக்கிச் சத்தம் பங்களாவைத் தாண்டி வெளியே கேட்காதா என்ற கேள்வி படம் முடியும் வரை நம் மனதை துளைக்கிறது.

ஒரு நாளில் நடக்கும் கதையை அவ்வப்போது நேரத்தை மாற்றி மாற்றி காட்சிப்படுத்தியிருப்பது திரைக் கதைக்கு வேகத்தடையாக அமைகிறது. கடனைத் திருப்பி கொடுக்க ஒருநாள் கெடு விதிக்கும் கடன்காரன், இரவு 12 மணிக்கெல்லாம் போன் செய்வதில் லாஜிக் இடிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறார். கதையின்படி படம் முழுவதும் பதற்றமாகவும் பரபரப் பாகவும் இருக்கிறார். ஹீரோயிஸம் காட்ட முடியாத அந்தக் கதாபாத்திரத்தை அறிந்து நடித்திருக்கிறார். படத்தில் சம்யுக்தா ஹெக்டே என்ற நாயகியும் இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போகிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பனாக வரும் யோகிபாபுவின் பாத்திர வார்ப் பில் காமெடியும் இல்லை. அவர் ஸ்கோர் செய்ய காட்சி அமைப்புகளும் இல்லை.

தீவிரவாதியாக வரும் ராஜ் அர்ஜுனின் உடல்மொழி அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தவேயில்லை. முன்னாள் போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், தாய் மாமனாக வரும் முனீஸ்காந்த் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித் திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் ‘புரூனோ’ என்ற கதா பாத்திரத்தில் வரும் ‘கோல்டன் ரெட்ரீவர்’ இன நாய்தான். பிற கதாபாத்திரங் களைவிட நாய் நன்றாக நடித்திருக்கிறது.

படத்துக்கு பலம் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசை காது ஜவ்வைப் பதம் பார்த்துவிடுகிறது. இருட்டு பங்களாவைச் சுற்றிச் சுற்றி படம் பிடித்திருக்கிறது நீரவ் ஷாவின் கேமரா.

திருடப் போகும் வீட்டுக்கே ‘வாட்ச் மேன்’ ஆக மாறும் இந்தக் காவ லாளியிடம் ஈர்ப்பு இல்லை.

talkies.JPG 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close