[X] Close

16 வயதினிலே! - அப்பவே அப்படி கதை


16-vayadhinile-appave-appadi-kadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 12 May, 2018 10:29 am
  • அ+ அ-

’தமிழ் சினிமாவை அப்படியே திருப்பிப் போட்ட படம்யா இது’ என்று சில படங்களைச் சொல்லுவார்கள். ‘யாருய்யா டைரக்டரு. முத படத்துலயே பின்னிப்பெடலெடுத்துட்டார்யா...’ என்று சில டைரக்டர்களின் முதல் படத்துக்கே கிடைக்கும்... கிரீடமும் மரியாதையும்! ‘எத்தனை தடவை வேணும்னாலும் பாக்கலாம்பா. அலுக்கவே அலுக்காது; சலிக்கவே சலிக்காது’ என்று ஒரு சிலபடங்களைச் சொல்லிப் பூரித்துக்கொண்டே இருப்போம். ‘இந்தப் படம் வந்ததுலேருந்துதான் தமிழ் சினிமால இப்படிலாம் மாற்றங்கள் வந்துச்சு’ என்று வியந்தும் அதிர்ந்துமாகப் பேசிக்கொண்டே இருப்போம். ‘இந்த டைரக்டர்கிட்ட வந்தவங்க யாரும் சோடை போகலை. குருவை மிஞ்சின சிஷ்யன்னு பேரு எடுத்திருக்காங்கப்பா’ என்று மரியாதையுடனும் பெருமிதத்துடனும் சில டைரக்டர்களை மட்டுமே இப்படியாகப் புகழுவார்கள். இவை அனைத்துக்குமான ஒரே படம்... 16 வயதினிலே. 1977ம் வருடம் ரிலீசானது 16 வயதினிலே.

கல்யாண வீடுகளில், இரவெல்லாம் அந்த வேலை இந்த வேலை என்றிருக்குமே. அந்த வேலையை சுணங்காமல், சொதப்பாமல், அரைத்தூக்கத்தில் இல்லாமல் செய்யவைத்ததில், 16 வயதினிலே ஒலிச்சித்திரத்துக்கு பெரும் பங்கு உண்டு.

படம் முழுவதும் அவுட்டோரிலேயே எடுத்திருந்தது கண்டு, சினிமா உலகிலேயே வியந்து பார்த்தார்கள். பின்னாளில், இயக்குநர் இமயம் என்று அடைமொழி சொல்லிப் பாராட்டினார்கள். ‘ஆமாம்’ என்பதை உறுதி செய்தது, பாரதிராஜாவின் முதல் படமான இந்தப் படம்.

ரயில்வே ஸ்டேஷனில் நாயகி சோகத்துடன் காத்திருப்பாள். அங்கிருந்து ரயில் கிளம்பும் போது, பிளாஷ்பேக்கும் கிளம்பும்.

’ஆத்தா... நான் பாஸாயிட்டேன்’ என்று முதல் பட வாய்ப்பு கிடைத்ததையும் தான் நினைத்தது போலவே இயக்குநராகிவிட்டேன் என்பதையும் எப்படியும் ஜெயிச்சிருவேன், படம் ஜெயிச்சிரும் என்பதையும் முன்பே சொல்லும் விதமாக ஓபனிங் வைத்து, சினிமா செண்டிமெண்ட்டையும் டச் செய்திருப்பார் பாரதிராஜா.

வாய்ப்பு கிடைக்காமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல், துக்கத்தால் தூக்கமில்லாமல் ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற வெறியுடன் வந்த பாரதிராஜாவுக்கு, வெற்றியைச் சுவைத்தே ஆகவேண்டும் என்கிற உறுதி, அரங்கேற்றம் தொடங்கி சின்னதும் பெரிதுமாக நடித்துக்கொண்டிருந்த கமலுக்கு, காதல் மட்டுமின்றி நடிப்பிலும் மிளிரும் தாகம் இருந்தது. ஆகவே, மொத்த உழைப்பையும் கொடுக்கவேண்டிய வெறி, கமலுக்கு.

மூன்று முடிச்சில் நாயகியாக அறிமுகமானாலும் அடுத்த இலக்கு நோக்கி ஓட, இந்த மயிலு நிச்சயம் உதவுவாள் என்று பூரண நம்பிக்கையுடனும் உறுதியுடனும் நடிக்கவேண்டிய கட்டாயம் ஸ்ரீதேவிக்கு. ஹீரோவோ வில்லனோ... ஆனால் நடிக்கணும். நடிச்சு ஜெயிக்கணும். ஜெயிச்சே தீரணும்... போலாம் ரைட்... என்று அடுத்தடுத்து போய்க்கொண்டே இருக்க, இந்தப் பரட்டை பெரிய துணையாக இருப்பான் என்று தன் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரவேண்டிய முக்கியமான நிலை ரஜினிக்கு.

தன் நண்பன் தன்னைப்போலவே சினிமாவில் ஜெயிக்க ஆசைப்பட்டான். நாம் வந்தது போலவே அவனும் இப்போது வந்துவிட்டான். அவனை ஜெயிக்கவைக்கணும். அதுக்கு நம்மாலான விஷயங்களை சிறப்பாவும் செம்மையாவும் செய்யணும். தவிர, வாழ்ந்த கிராமம் சம்பந்தப்பட்ட கதை. நண்பன் படம் என்பதால், எல்லா பகீரத முயற்சிகளையும் செஞ்சிடணும் என்கிற வேட்கை இளையராஜாவுக்கு. ‘ஏதோ இவருகிட்ட இருக்கு... பெரிய ஆளா வரப்போறாரு. பின்னாடி இவர்கிட்டே இருந்தோம்னு சொன்னாலே அது பெரிய விசிட்டிங்கார்டு. அதனால இந்தப் படம் ஜெயிக்க கடுமையா உழைக்கணும். நிச்சயம் நாமளும் ஜெயிப்போம் என்கிற எண்ணம், உதவி இயக்குநர்களுக்கு. கதை புதுசு. படம் புதுசு. இடம் புதுசு. முடிஞ்ச அளவு, முதலுக்கு மோசம் இருக்காது என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு.

இப்படியாக எல்லோரின் சிந்தனையும் ஜெயிப்பு எனும் ஒற்றைப்புள்ளியில் குவிந்துவிட... அங்கே 16 வயதினிலே எனும் காவியம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

மயிலு, சப்பாணி, பரட்டை, குருவம்மா, டாக்டர் இவர்களெல்லாம் இப்போதும் கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் கிராமத்தில் இருந்து ரயிலேற்றிக் கூட்டிவந்து, கோடம்பாக்கத்தில் இறக்கி, எல்லாத் தியேட்டர்களிலும் ஏற்றிவைத்த சாதனைச் சிங்கம் பாரதிராஜாவுக்கே உண்டான திறன் அது.

 அழகே உருவான கனவுகள் கொண்ட மயிலு, ஊருக்கே எடுபிடி வேலை செய்கிற, உறவுக்கு யாருமே இல்லாத தன்னை அழகுபடுத்திக் கொள்ளாத சப்பாணி, மேல் ரெண்டு பட்டன்களைப் போடாமல், கழுத்தில் தங்கச்சங்கிலி டாலடிக்க, ஊர்வம்பு பேசிக்கொண்டும் ஊராரைச் சீண்டிக்கொண்டுமாய் மரத்தடியே கதியெனக் கிடக்கிற பரட்டையன், நகரத்தில் இருந்து நகர்ந்து கிராமத்துக்கு வந்து, பொழுதைப் போக்க என்ன செய்யலாம் என நினைத்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே போக்கிவிட்டுப் போன டாக்டர்... அவ்வளவுதான். அவர்களைக் கொண்டுதான் சரித்திரம் படைத்திருப்பார் பாரதிராஜா.

டைட்டிலில் ‘சோளம் வெதைக்கையிலே...’ பாட்டு. இளையராஜா பாடிய முதல் பாட்டு இதுதான். டீச்சராகும் ஆசை மயிலுக்கு. தனக்கேற்றவன் சீமையில் இருப்பதாக நினைப்பு. அப்படிச் சீமையிலிருந்து வந்த டாக்டர்தான் மணாளன் என நினைக்க, காதலனாக ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் மருத்துவரோ, அவளை அடையவேண்டும் பிறகு கழற்றிவிடவேண்டும் எனும் மோசமான வியாதியைக் கொண்டிருக்கிறான். மனசு முழுக்க மயிலைத் தூக்கிக்கொண்டு நடக்கமாட்டாமல் நடக்கிறான் சப்பாணி. ‘சந்தர்ப்பம் கிடைத்தால் யாரும் யோக்கியம் இல்ல’ என்பதாக நினைத்து சபலமும் கொண்டு திரிகிறான் பரட்டை. இந்த இடத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, அழகாகவும் தெளிவாகவும் திரைக்கதை அமைத்து, வலுவான வசனங்களாலும் இயல்பான நடிப்பாலும் என்னவோ செய்து, நம்மைக் கட்டிப்போட்டிருப்பார் பாரதிராஜா.

சப்பாணியை வெறுத்துக்கொண்டே இருப்பவள், ஒருகட்டத்தில், சப்பாணி என்று அவனை எல்லோரும் கூப்பிடுவதையே வெறுக்கிறாள். ‘அடிய்யா... அடி...’ என்று ஜெயம் படத்தில் சதா சொல்வாரே. ஆனால் ஸ்ரீதேவி இவருக்கெல்லாம் அக்கா. ‘இனிமே சப்பாணின்னு யாராவது கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிரு’ என்பார். அப்படியே செய்வார் கோபாலகிருஷ்ணன். அதுவும் ஏமாற்றிய டாக்டரையும் பார்வையாலேயே பலாத்காரம் பண்ணுகிற பரட்டையனையும் அடித்ததைச் சொல்ல... அங்கே ஒரு பாடல். ‘செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா...’ பாடலும் சூழலும் பார்ப்போருக்கும் இதம் தரும்.

கமல்ஹாசன் முதல்வராகவெல்லாம் முடியாது என்று இன்றைக்கு சொல்லிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணன் சாருஹாசன் தான், அன்றைக்கு கமலுக்கு கால்ஷீட் முதல் கணக்கு வழக்கு வரை பார்த்துக்கொண்டிருந்தார். பாரதிராஜா கதை சொன்னதும் கொந்தளித்துவிட்டார் சாருஹாசன். ‘என் தம்பிக்கு இந்த கிராமம், அழுக்கு, சப்பாணியெல்லாம் நல்லாருக்காது. அவனோட அழகுக்கு அவன் கேரியரே எங்கேயோ போகப்போவுது’ என்று மறுத்து அனுப்பினார். ஆனால் கமல்தான், அண்ணனை கன்வின்ஸ் பண்ணி, பாரதிராஜாவை அழைத்து ஒத்துக்கொண்டார். கோவணத்துடன் இருக்கும் கமலைப் படம்பிடிக்கும்போது அழுதேவிட்டாராம் சாருஹாசன். ஆனால், ஒரு கால் சரியில்லாமல், ஒரு கையும் சரியில்லாமல், அப்படி நடந்த சப்பாணிதான்... இன்றைய உலக நாயகனுக்கான முதல் படி, முதல் அடி, முதல் நடை என்று சொல்லவேண்டும்.

திருவிழாவில், தாவணியுடன் மயிலைப் பார்த்துவிட்டு, ‘இவ ஆத்தாவுக்கு தாவணி போட்டாக் கூட நல்லாத்தாண்டா இருக்கும்... இதெப்படி இருக்கு’ என்பார் ரஜினி. இந்த ‘இதெப்படி இருக்கு’தான், திரையுலகில் ரஜினி பேசிய முதல் பஞ்ச் டயலாக் என்று நினைக்கிறேன். ‘சீப்பு கொடுத்துவிட்டாளே... டீ குடிக்க சில்லறை குடுத்துவிட்டாளா?’, ‘உங்க கோகுலாபுரத்துல வத்திப்பெட்டி இல்லீங்களா..”, ‘நானே பத்தவைக்கிறேன்’, ‘பத்த வைச்சிட்டியே பரட்டை’, ‘ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு. நாய் வளர்க்கலை. இந்தச் சப்பாணியைத்தானே மயிலு வளர்த்துச்சு’, ‘இது ரத்தம் இல்ல மயிலு... ஆத்தா எனக்குப் போட்ட சோறு,’ ’உயிரைவிடுங்கறேன். விட்டுறுவியா’, ‘அதுமட்டும் மாட்டேன். நான் போயிட்டா உன்னைப் பாத்துக்கறதுக்கு யாரும் இல்லியே. அதனால நீ இருக்கறவரைக்கும் நானும் இருப்பேன். அப்புறம் நானும் செத்துப்போயிருவேன் மயிலு...’, ‘செத்துப்போன்னு வேணா சொல்லு, செத்துப் போறேன். ஆனா விட்டுட்டுப் போன்னு சொல்லாதே மயிலு.. எங்கே மயிலு போவேன்...’, ‘சந்தைக்கு போ, தாலி வாங்கிட்டு வா. என்னையே நினைச்சுக்கிட்டிருக்கிற உனக்கு, நான் என்னையே கொடுக்கப்போறேன்’... என்று படம் முழுவதும் இப்படியான வசனங்களால் கதாபாத்திரங்களையும் கதைத் தன்மையையும் அவர்களின் மெல்லிய உணர்வுகளையும் நமக்குள் கடத்தியிருக்கிற 16 வயதினிலே... எல்லோரும் கொண்டாடுவதற்கான துளித்துளியான காரணங்கள் இவையெல்லாம்! பி.கலைமணியின் வசனங்கள்.

கிராமத்தையும் அங்கே உள்ள புல்பூண்டையும் கூட, கவிதையெனக் காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் நிவாஸ். காந்திமதி, குருவம்மாவாக அதகளம் பண்ணியிருப்பார். பரட்டை ரஜினியின் சேட்டைகள் ரசிக்கவும் சிலசமயம் கோபப்படவும் வைக்கும். மெர்சலாக்கியிருப்பார். அவருடனேயே வரும் கவுண்டமணியும் டாக்டராக வரும் சத்யஜித்தும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.

மஞ்சக்குளிச்சு அள்ளி முடிஞ்சு... பாடலில் யாரோ ஒருவராகவும் மயிலு ஜுரத்தில் இருக்கும்போது, கஷாயம் கொடுக்கிற வயதான மருத்துவராகவும் வந்த பாக்யராஜ், படத்தின் உதவி இயக்குநர். பின்னாளில் பாக்யராஜைத் தெரியும்போதுதான், இந்த இடங்களில், இப்படி இவர் வந்ததை அறிந்து வியந்தோம். கன்னிப்பருவத்திலே இயக்குநர் பி.வி.பாலகுரு அஸோஸியேட் இயக்குநர்.

கமலின் நடிப்பாற்றலை முதன்முதலாக, வேறொரு பரிமாணத்தில் காட்டிய சப்பாணியை, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகமும் மறக்காது. மனிதர், சப்பாணியாகவே வாழ்ந்திருப்பார். ‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா’ என்ற வார்த்தைக்கு இணையாக, ‘பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா’ என்று எல்லோரும் சொல்லத் தொடங்கியது, இந்தப் படத்தில் இருந்துதான்! தாவணியில் கொள்ளை அழகுடன் ஒயில் காட்டியிருப்பார் மயில் ஸ்ரீதேவி. நடிப்பிலும்தான். தாவணியில் இருந்து கொசுவம் வைத்த புடவைக்கு மாறுகிற போது, அவரின் நடிப்பும் வளர்ந்திருக்கும். இந்த வேறுபாட்டை தன் முகபாவனைகளால் வெகு அழகாகக் காட்டியிருப்பார்.

’சோளம் வெதைக்கையிலே... நம்மைக் கைப்பிடித்து கிராமத்துக்குக் கூட்டிச் செல்லும். செந்தூரப்பூவே... பாட்டு, மயிலின் ஊஞ்சலை நம்மையும் ஆட்டச்செய்யும். மஞ்சக்குளிச்சு அள்ளிமுடிச்சு... பாட்டு, நம் சட்டையில் மஞ்சத்தண்ணி பட்டுவிட்டதாகவே நினைக்கவைக்கும். செவ்வந்தி பூமுடிச்ச சின்னாக்கா... பாட்டு, நம்மை தாளம் போட வைக்கும். குறிப்பாக, அந்த ‘தன்னானே தானன்னே தன்னேனா... சொல்லவைக்கும். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலைக் கேட்டு, மயிலு மட்டுமா சிரித்தாள். நாமும்தான் வெடித்துச் சிரித்தோம். இளையராஜா தன் நண்பன் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கிய பரிசுகளின் ஆரம்பம் இந்தப் பாட்டு.

இளையராஜா புதுமாதிரி இசை கொடுப்பவர். பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கும் என்பதைத் தாண்டி, பிஜிஎம் என்று சொல்லப்படும் பின்னணி இசையை, இளையராஜா அளவுக்கு யாரும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது 16 வயதினிலே.

எல்லோரும் பார்த்திருப்போம். எத்தனையோ முறை பார்த்திருப்போம். இளையராஜாவுக்காக, அவரின் இசைக்காக, இன்னொரு முறை பாருங்கள். ஒவ்வொரு காட்சியையும் இசையின் மூலமாகவும் நமக்குள் கடத்தியிருக்கும், அவரின் ஜால இசையைக் கேட்டு கிறுகிறுத்துப் போவீர்கள்.

ரயில், சூரியோதயம், வயல்வெளி, விளைந்த கதிர்கள், அழுக்குத் தெரு, அழகு நாயகி, தண்டவாளங்கள், ஒரு சின்னப்பையன் இலையை மடித்து பீப்பியாக்கி ஊதிக்கொண்டிருக்க, இசை இளையராஜா என்று போடுகிற அந்த கவிதைத்தனம், மயிலைத் தொட்டு, உசுப்பிவிடுகிற டாக்டர்... அந்தக் காட்சியில், ஓர் இளநீரை எடுத்து சீவி, இறுதியில் விலகி ஓடுகிற ஸ்ரீதேவியையும் கையில் இருந்து நழுவு உருள்கிற இளநீரையும் காட்டியிருக்கிற டச்... எல்லாமே பாரதிராஜா எனும் மகாகலைஞனின் மெகா டச். பல விருதுகளை அள்ளிக் கொண்டது 16 வயதினிலே.

படம் வந்து 41 வருடங்களாகி விட்டன. ‘நூறாயுசு’ என்போமே. பல நூறாயுசுகள் கொண்டது 16 வயதினிலே.

முந்தைய அப்பவே அப்படி கதை படிக்க...

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close