[X] Close

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ’குலமகள் ராதை’ பாடல்!


iravukku-aaiyiram-kangal-kulamagal-raadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 10 May, 2018 15:54 pm
  • அ+ அ-

சிவாஜி, ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவன், கண்ணதாசன் கூட்டணி என்றால், அங்கே நமக்கான விருந்து என்று அர்த்தம். அப்படியான விருந்துகளில் ஒன்றுதான் குலமகள் ராதை. அந்தக் குலமகள் ராதையில் உள்ள பாடலில் இருந்துதான் இப்போது படத்துக்கு தலைப்புப் பிடித்திருக்கிறார்கள். அது... இரவுக்கு ஆயிரம் கண்கள்! 

1963ம் வருடம் வெளியான படம் குலமகள் ராதை. சிவாஜியுடன், சரோஜாதேவியும் தேவிகாவும் நடித்திருப்பார்கள். மூவரின் நடிப்பும் முத்துக்கள்தான். கதையும் சர்க்கஸ் களமும் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ். பாடல்கள் ஒவ்வொன்றும் பலாச்சுளை. ‘உலகம் எதிலே அடங்குது’ பாடலை டி.எம்.எஸ். அவ்வளவு பிரமாதமாகப் பாடியிருப்பார்.

’ஆருயிரே மன்னவரே’ பாடலில் பி.சுசீலா அன்பையும் காதலையும் குழைத்துக் கொடுத்திருப்பார். ’பகலிலே சந்திரனை...’ என்றொரு பாடலும் அற்புதமான பாடல். ’ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...’ என்ற பாடலும் பாடலின் வரிகளும் அந்த வரிகளை அழகுதமிழில் டி.எம்.எஸ். உச்சரித்த விதமும் எல்லாவற்றுக்கும் மேலாக, சிவாஜிகணேசனின் சிரித்த முகம் கொண்ட நடிப்பும்... அந்தக் காட்சியை எங்கோ கொண்டு சென்றுவிடும்.

அதிலும் குறிப்பாக, அறையின் கண்ணாடியில் எதிரே உட்கார்ந்திருப்பார் சிவாஜி. அதில் மூன்று சிவாஜி தெரிவார். கண்ணாடிக்கு அருகில் சரோஜாதேவி நின்றிருப்பார். அந்தக் காலத்தில், இந்தப் பாடல் வரும் போதெல்லாம், இந்தக் காட்சியின் போதெல்லாம் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள்.

அதேபோல், ’உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. என்னைச் சொல்லிக் குற்றமில்லை. காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி...’ என்ற பாடல் ஆரம்பிக்கும்போதே, ஆர்ப்பரித்து அடங்குவார்கள் ரசிகர்கள். அத்துடன் பாடலுடன் சேர்ந்து பல ரசிகர்கள், பாடிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சில எமோஷனல் ரசிகர்கள், தடக்கென்று எழுந்து, சிவாஜியைப் போலவே இரண்டு கைகளையும் அகல விரித்து, தலையை அசைத்து அபிநயம் பண்ணுவார்கள்.

படத்தில் இன்னொரு முக்கியமான பாடல்... இரவுக்கு ஆயிரம் கண்கள் பாட்டு. தேவிகா நடித்திருப்பார். சர்க்கஸ் பேக்டிராப்பில், அந்தப் பாடலை வித்தியாசமாக படம்பிடித்திருப்பார் இயக்குநர்.

அந்தப் பாடலில் இரண்டையும் ஒன்றையும் வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார் கவியரசு கண்ணதாசன்.

அந்தப் பாடல் இதுதான்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

பாடல் வரியில் இருந்து படத்துக்குத் தலைப்பு வைப்பது ஒன்றும் முந்தாநேத்து சமாச்சாரமில்லை. அந்தக் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதுதான். அந்த வகையில், குலமகள் ராதையின் ஆல்டைம் பேவரிட்டான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்” பாட்டின் முதல்வரியை, அருள்நிதி நடிக்கும் படத்துக்கு அழகாக டைட்டில் பிடித்திருக்கிறார், ரசனைக்கார இயக்குநர்   மு.மாறன். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close