[X] Close

நடிகையர் திலகம் சாவித்திரி!


nadikaiyar-thilagam-savithri

  • வி.ராம்ஜி
  • Posted: 10 May, 2018 13:08 pm
  • அ+ அ-

ஜெமினி சினிமாக் கம்பெனி. நடிப்பதற்கு அந்தப் பெண் சான்ஸ் கேட்டுச் சென்றார். அங்கே இருந்த ஊழியர், ‘’ஏம்மா, நீயெல்லாம் எதுக்கு நடிக்க வர்றே? போம்மா எங்களுக்கு நிறைய வேலை இருக்கு’’ என்று அவரை அடிக்காத குறையாக விரட்டியடித்தார். ஆனால் காலம் மிக சுவாரஸ்யமானது. மிக மிக சுவாரஸ்யங்கள் கொண்டது. பின்னாளில், அந்தப் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அந்த ஜெமினி படக்கம்பெனியில், ‘நீயெல்லாம் ஏம்மா நடிக்க வர்றே?’ என்று கேட்ட ஊழியரே நாயகனானார். அந்த நடிகை... சாவித்திரி. நடிகையர் திலகம் சாவித்திரி.

காலம் இன்னும் இன்னும் விசித்திரங்களைக் கொட்டிக்கொண்டே இருக்கும். அந்த நாயகனே, பிறகு அவருக்கு மணாளனாகவும் ஆனார். அவர்... ஜெமினி கணேசன். அந்தப் படம் மிஸ்ஸியம்மா. கொம்மாரெட்டி சாவித்திரி, சாவித்திரியாகி, நடிகையர் திலகமானது என்பதெல்லாம் சினிமாவில் வருகிற மிராக்கிள் மாதிரியெல்லாம் நிகழ்ந்துவிடவில்லை. அந்தப் பெயருக்கும் பெருமைக்கும் பின்னே இருக்கிறது அவரின் அசாத்தியத் திறமையும் கடினமான உழைப்பும்!

மிஸ்ஸியம்மாவிலும் காலம் தன் விளையாட்டை குதூகலமாக நடத்தியது. குதூகலத்தையும் தந்தது. படத்தில் 2வது நாயகிதான் சாவித்திரி. ஆனால் இயக்குநர் எல்.வி.பிரசாத்துக்கும் முதல் ஹீரோயினுக்கும் இரண்டாவது நாளிலேயே முட்டிக்கொண்டது. மூன்றாவது நாள், படப்பிடிப்பு நடத்துவதில் குளறுபடியானது. நான்காம் நாள், அந்த நடிகை வேண்டாம் என்று முடிவெடுத்தார். ஐந்தாம் நாளிலிருந்து, முதல் ஹீரோயினாக நடித்தார் சாவித்திரி.

‘’ஒருவகையில் அந்த நடிகைக்கு நன்றி சொல்லணும். இல்லேன்னா, சாவித்திரிகிட்ட இருக்கிற அபாரத் திறமை எனக்குத் தெரியாமலயே போயிருக்கும்’’ என்று பிறகு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் எல்வி.பிரசாத்.

மிஸ்ஸியம்மா, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் கதையும் கேரக்டரும் பாடல்களுமாகச் சேர்ந்து சாவித்திரி, எல்லோர் வீடுகளிலும் ஓர் உறுப்பினரானார்.

அடுத்தடுத்து இவரின் படங்களில், நடிப்பில் தனித்துவத்துடன் வலம் வந்ததுதான் சாவித்திரியின் பலம். குண்டுக்கன்னங்களும் ஜிலீர் கண்களும் எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய தமிழ் உச்சரிப்பும், சாவித்திரியை கொண்டாடச் செய்தன.

அந்த சமயத்தில் வந்த பாசமலர்... ‘இது எங்க வீட்டுப் பொண்ணு’ என்று எல்லோரும் நெருங்கிவந்து, அரவணைத்துக் கொண்டார்கள். சிவாஜிக்கு மட்டுமின்றி, படம் பார்த்த அண்ணன்கள் எல்லோரும் தங்களின் தங்கையாகவே பாவித்தார்கள். தங்கை இல்லாதவர்கள், ‘நமக்கு சாவித்திரி மாதிரி ஒரு தங்கை இருக்கக்கூடாதா’ என்று ஏங்கினார்கள். ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் மொழி தெரியாமல் ஒருபகுதியும் விழிகள் தெரியாமல் இன்னொரு பகுதியுமாக கமலுக்கு அன்னையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

பாசமலரில் தங்கையாக, பார்த்தாலே பசி தீருமில் நண்பனின் மனைவியாக, படித்தால் மட்டும் போதுமாவில் அண்ணியாக என்று சிவாஜிக்கு நிகராக நடித்ததால்தான் அவருக்கு நடிகர் திலகம் கிடைத்தது போல், சாவித்திரிக்கு நடிகையர் திலகம் எனும் பட்டம் கிடைத்தது.

கைகொடுத்த தெய்வம், களத்தூர் கண்ணம்மா, பாதகாணிக்கை, நவராத்திரி, பாவமன்னிப்பு, வேட்டைக்காரன், பரிசு, திருவிளையாடல், கந்தன்கருணை என்று பல படங்களில், இவரின் மிகச்சிறந்த நடிப்பாற்றலையும் கேரக்டரில் ஈடுபாட்டுடன் ஒன்றி நடித்த உழைப்பையும் பார்க்கலாம்.

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிற உலகம் இது. அப்போதே, சினிமாவில் முதல் படத்திலேயே காதல்மன்னன் ஜெமினியின் மீது, காதல் மலர்ந்தது சாவித்திரிக்கு. இத்தனைக்கும் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது தெரிந்தும் அவரை விரும்பினார். மணந்தார். அதற்குப் பின்னரும் ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடி சக்கைப்போடு போட்டது. ‘ஜெமினி கணவர், சாவித்திரி மனைவி என்பதையெல்லாம் தாண்டி, அந்தக் கேரக்டர்கள் நமக்கு முன்னே வந்து நிற்கும்படி இருவருமே போட்டிபோட்டுக் கொண்டு நடித்ததுதான் அந்த ஜோடியின் வெற்றி’ என்று சிலாகிக்காதவர்களே இல்லை.

பணமா பாசமா படத்தில், மாமியாராக வரலக்ஷ்மி நடித்திருப்பார். ஆரம்பத்தில், அவரின் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்கவில்லை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு. ‘அம்மாடி... நீ மாமியாரா நடிச்சா ஏ கிளாஸா இருக்கும்’ என்று சாவித்திரியிடம் சொல்ல... ’வாத்யாரே. ஜெமினிகணேசனுக்கு நான் மாமியாரா. நல்லாவா இருக்கும். வேணும்னா ஜெமினியைத் தூக்கிட்டு வேற யாரையாவது போடுங்க. நான் மாமியாரா நடிக்கிறேன் வாத்யாரே...’ என்றாராம் சாவித்திரி.

‘ஜெமினிதான் இதுக்கு சரியா இருக்கும்’ என்று இழுத்தாராம் கே.எஸ்.ஜி.

‘ரெண்டுநாள் டைம் கொடுங்க வாத்யாரே’ என்ற சாவித்திரி, வரலக்ஷ்மியிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. என்ன சொன்னாரோ தெரியாது. அடுத்த நாளில் இருந்து, வரலக்ஷ்மி வெளுத்து வாங்கியிருப்பார். அவரின் நடிப்பு கண்டு மிரண்டுபோனார் கே.எஸ்.ஜி.

ஆனால், இரண்டு விஷயங்களில் அவர் ஸ்லிப்பானார். ‘பிராப்தம்’ படத்தின் கதையைச் சொல்லி, ‘அண்ணே, தமிழ்ல நான் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீங்கதான் நடிச்சுக்கொடுக்கணும்ணே’ என்று சிவாஜியிடம் சாவித்திரி கேட்க, ‘இந்தக் கதை தப்பான கதைம்மா. நிச்சயம் ஓடவே ஓடாது. வேற எதுனா படம் பண்ணு. நான் நடிச்சுக் கொடுக்கறேன்’ என்று சிவாஜி எவ்வளவோ சொல்லியும் சாவித்திரி கேட்கவே இல்லை. அவர் ஆசைப்பட்டபடியே சிவாஜி நடித்துக் கொடுத்தார். ஆனால் சொன்னது போலவே மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார் சாவித்திரி.

இன்னொரு விஷயம்... மொத்த வாழ்க்கையையுமே தோல்வியாக்கிக் கொண்ட துயரம். அந்தக் காயத்தில் இருந்தும் வலியிலிருந்தும் இன்னும் மீளவில்லை ரசிகர்கள்.

அதுதான் சாவித்திரி எனும் நடிப்பு ராட்சஷியின் ஆழமான அஸ்திவாரம்!

இத்தனை வலிகளைக் கடந்த சாவித்திரி ரசிகர்களின் ஆகப்பெரிய அப்பாடா நிம்மதி... எந்த நடிகை புதிதாக வந்தாலும்  அவர்கள் டெம்ப்ளேட்டாகச் சொல்லும் வார்த்தை... ‘சாவித்திரி மேடம் மாதிரி நடிக்கணும்’ என்பதுதான்!

சாவித்திரியைப் பெருமைப்படுத்தும் வகையில், அவரின் சரிதம் நடிகையர் திலகம் என்று படமாகி, ரிலீசாகிறது. அந்தப் பட யூனிட்டாருக்கும் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷூக்கும் சாவித்திரியின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். இந்தப் படம் வெற்றிகளைக் குவிக்கட்டும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close