[X] Close

’காதோடுதான் நான் பாடுவேன்...’ - வி.குமாரின் மறக்கவே முடியாத பாடல்கள்


v-kumar-musuc-director

  • வி.ராம்ஜி
  • Posted: 08 May, 2018 14:39 pm
  • அ+ அ-

எம்.எஸ்.வி. மறைந்த அன்று அஞ்சலி செலுத்துவதற்காக எல்.ஆர்.ஈஸ்வரி வந்திருந்தார். அவரிடம் மைக்கை நீட்டிய ஊடகவியலாளர், ‘எம்.எஸ்.வி. இசையில் எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். குறிப்பாக, ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்கிற பாட்டையெல்லாம் பாடியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்’ என்று கேட்டதும், கோபமாகிவிட்டார். ‘எம்.எஸ்.வி.அண்ணா பத்தி சொல்லுங்கன்னு சொல்லி நிப்பாட்டிருக்கணும். ‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாட்டு, வி.குமார் மியூஸிக். தவிர, இப்ப சொல்ற மனநிலைல நான் இல்ல...’’ என்று சொல்லிச் சென்றார்.

கவிஞர் வாலியின் பாடல்கள் அப்படித்தான். அந்தக் காலத்தில், கவிஞர் வாலியின் பாடல்கள் ஹிட்டாகின. எல்லோராலும் முணுமுணுக்கப்பட்டன. ஆனால், அந்தப் பாடல்கள், கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றே எல்லோரும் நினைத்தார்கள். அப்படித்தான் வி.குமார் எனும் இசையமைப்பாளரின் இசையும் பாடல்களும்... எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் பாடல்கள் என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால், இவர்கள் பாணியில் இருந்து விலகி நின்று, இசையமைத்து தனி பாணியை தனக்கென்று உருவாக்கிவைத்திருந்தார் வி.குமார். இத்தனைக்கும் அந்தக் கால ரசிகர்களுக்கே கூட, வி.குமாரின் முகம் பரிச்சயமில்லை.

அப்போது எம்.எஸ்.வி, கேவி.மகாதேவன் காலம். இவர்கள் இருவரும்தான் மாறிமாறி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில், நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் வி.குமார்.

தொலைபேசித் துறையில் வேலை ஒரு பக்கம், நாடகங்களுக்கு இசை இன்னொரு பக்கம் என்றிருந்த குமார், கே.பாலசந்தரின் நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். அங்கே துளிர்த்த நட்பு, சினிமாவிலும் தொடர்ந்தது.

கே.பி.யின் அந்த நாடகத்தால் கவரப்பட்ட ஏ.கே.வேலன், அதைப் படமாக்குவதற்கான உரிமையை வாங்கி வைத்துக் கொண்டார். கே.பி. இயக்குநராக அறிமுகமான படம் அது.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகளின் காலம் அது. எம்.எஸ்.வி., கேவி.மகாதேவன்கள் கொடி நாட்டி கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால், தன் முதல் படத்தில், வி.குமாரை அறிமுகப்படுத்திய கே.பி., நாகேஷை நாயகனாக்கினார். 1965ம் ஆண்டு நீர்க்குமிழி ரிலீசானது. படத்தில் மூன்று பாடல்கள். மூன்றும் மூன்று வகை. அதில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல்... என்னவோ செய்யும் நம்மை!

அதையடுத்து வி.குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தந்துகொண்டே இருந்தார் கே.பாலசந்தர். டைட்டிலில் ‘மெல்லிசைச்சக்ரவர்த்தி’ வி.குமார் என்று அடைமொழியோடு பெயர் வரும் அளவுக்கு உயர்ந்தார். ’மெல்லிசை மாமணி’ என்றும் டைட்டிலில் இடம்பெற்றது.

அதேவருடம் வெளியான நாணல் படத்துக்கும் வி.குமார்தான் இசை. ’சேதி கேட்டோ...’, ‘அடுத்தாத்து அம்புஜம்...’ ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா...’, ‘தாமரைக்கன்னங்கள்...’ என்று எல்லாமே ஹிட் கொடுத்த எதிர்நீச்சல் என வரிசையாக வாய்ப்புகள் வந்தன குமாருக்கு. அனைத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், ஒவ்வொரு படத்திற்கும் கதைக்குத் தகுந்தாற் போல் பாடல்களையும் பாடல்களுக்குத் தகுந்தது மாதிரியான வாத்தியக் கருவிகளையும் பயன்படுத்தி, கேட்கும் ரசிகர்களையெல்லாம் அந்தப் பாடல்களை அடிக்கடி முணுமுணுக்கச் செய்ததில் இருக்கிறது, வி.குமாரின் தனித்த இசை! இந்திய இசையுடன் மேற்கத்திய இசைக்கருவிகளையும் வெகு லாகவமாகப் பயன்படுத்தியிருப்பார் வி.குமார்.

‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலை இப்போது கேட்டாலும் காதலில் கிறுகிறுத்துப் போவோம். ‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’ என்று தொடங்கும் பாடலில், இடையே வேகமாக வந்த இசை, நடுவே நின்று, மணியோசை கேட்க... ‘மாதாக்கோயில் மணியோசை’ என்று பாடல் ஆரம்பமாகும். ரசிகர்கள் இந்த ஜாலத்தில் சொக்கிப் போனார்கள்.

மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள் என வரிசையாக படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தார். ’சிகப்புக்கல்லு மூக்குத்தி’ என்று டப்பாங்குத்துப் பாடலையும் தந்திருக்கிறார். ‘கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்’ எனும் அழகிய மெலடி ப்ளஸ் காதல் பாட்டில், நம்மை அந்த மூடுக்குக் கொண்டு வந்துவிடுவார் வி.குமார். ’வா வாத்யாரே வூட்டாண்டே...’ பாடலும் போட்டிருக்கிறார். 96ம் வருடம் இறந்தாலும் அவரின் இசையால், இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் வி.குமார்.

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் வி.குமார். ‘பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு’ பாடல் இவருடையதுதான்.

வி.குமாரின் பாடல்களை கேட்டுப்பாருங்கள். சொக்கிப்போவீர்கள். அல்லது நீங்கள் சொக்கிப்போகிற பாடல்களில், வி.குமாரின் பாடல்களும் இருக்கும்!

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close