[X] Close

டிஜிட்டல் மேடை 21: நிர்பயா வழக்கு; ஒரு நெருக்கமான பதிவு


21

  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:30 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

2012 டிசம்பர் 16. அன்றைய இரவில் மருத்துவ மாணவியான ‘நிர்பயா’, தெற்கு டெல்லி பேருந்து ஒன்றில் தன் நண்பனுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஓடும் பேருந்தில் ஓட்டுநர் உட்பட 6 ஆண்கள் இருவரையும் தாக்கியதுடன், நிர்பயாவைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து குற்றுயிராய் சாலையோரம் வீசிச் சென்றனர். மருத்துவமனைகளில் 2 வாரம் உயிருக்குப் போராடி பின்னர் பரிதாபமாக நிர்பயா உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் குற்றம் நடந்தது முதல் தலைமறைவானோர் பிடிபடும் வரையிலான 6 நாட்களில், அதிகம் அறியப்படாத டெல்லி போலீசாரின் தீவிர விசாரணையைப் பதிவு செய்துள்ளது ‘டெல்லி கிரைம்’. தேசத்தைப் பதைபதைக்கச் செய்த குற்றச் சம்பவத்தின் முன்னும் பின்னுமான பல்வேறு தவிர்க்க முடியாத விவாதங்களைத் தன் போக்கில் தொடர் அலசவும் செய்கிறது.

உதவிக் காவல் ஆணையர் வர்திகா சதுர்வேதி நள்ளிரவில் விசாரணையை முடுக்குவதுடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. பதின்ம வயது பெண்ணின் தாயான அந்த உயரதிகாரி. இது வழக்கமான குற்றச் சம்பவம் அல்ல என்பதை உணர்கிறார். உடனடியாகத் தனக்கு நம்பிக்கையான போலீஸார் அடங்கிய தனிப்பட்ட குழு ஒன்றை நியமித்து விடியும் முன்னரே விசாரணையின் முதல் கட்டத்தை எட்டுகிறார். அடுத்து வரும் 6 அத்தியாயங்களும் குற்றவாளிகள் 6 பேரையும் புலனாய்வு போலீசார் வளைப்பதை விவரிக்கிறது.

நிர்பயா வழக்கை முன்வைத்து திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருந்த போதும் அவற்றிலிருந்து ‘டெல்லி கிரைம்’ தன்னளவில் வித்தியாசப்படுகிறது. சினிமாத்தனம் சற்றும் இன்றி இயல்புக்கு நெருக்கமாக ஒரு குற்ற வழக்கின் போக்கைக் காட்டுகிறார்கள்.

.இதில் வரும் காவலர்கள் சாகசத்தையோ ஆயுதத்தையோ நம்பாது மதியூகத்தால் குற்றவாளிகளைப் பின்தொடர்ந்து சென்று மடக்குவதும், விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்ளச் செய்வதுமாகச் சாதிக்கிறார்கள். கூடவே, காவல்துறையினரைப் பிழியும் அலுவல் நெருக்கடி, அவர்களில் சிலரின் அலட்சிய முகம், ஆள்வோருடனான உரசல் ஆகியவற்றுடன் பரபரப்புக்காக அலையும் ஊடக வெறியையும் சமரசமின்றிக் காட்சிப்படுத்துகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் ஜெய்சிங் கதாபாத்திரம் வாயிலாக, குற்றவாளிகள் தங்களின் பலாத்கார வெறியை நியாயப்படுத்த முன்வைக்கும் விளக்கம் பார்வையாளர்களைத் துணுக்குற செய்யும். அந்த வெறுப்புணர்வில் பொதிந்திருக்கும் அரசியல், சமூக, கலாச்சாரத் தடுமாற்றங்கள், சிறைக்கு வெளியே நம் மத்தியில் நடமாடும் ஏராளமான ஜெய்சிங்குகளை அடையாளம் காட்டும்.

நிர்பயாவின் நண்பராக வரும் இளைஞரின் இன்னொரு முகம், நாடே பற்றியெரியும் வழக்கை முன்வைத்து அதிகாரத்தில் இருப்போர் அடித்துக்கொள்வது, ஒரு வழிப்போக்கர் சுதாரித்திருந்தால் நிர்பயா துயர சம்பவமே நடந்திருக்காது என்பன போன்ற அதிகம் அறிந்திராத உள்விவரங்கள் மீதும் தொடர் ஒளி பாய்ச்சுகிறது.

நிர்பயாக்களும் அவர்களுக்கு நிராதரவான சூழலும் தொடரும் தேசத்தில் ’டெல்லி கிரைம்’ போன்ற கூராய்வுகளுக்கு அவசியம் இருக்கவே செய்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close