[X] Close

ஒருதலை ராகம் - அப்பவே அப்படி கதை!


oru-thalai-raagam-appavee-appadi-kadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Apr, 2018 13:37 pm
  • அ+ அ-

இந்த வார வெள்ளிக்கிழமையோ அடுத்த வார வெள்ளிக்கிழமையோ... அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளிலோ... ரிலீசாகிற காதல் படங்களுக்கு முக்கியப்புள்ளியாகவும் பிள்ளையார் சுழியாகவும் அமைந்த 'ஒருதலை ராகம்’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும்?

1980ம் வருடம் மே மாதம் 2ம் தேதி ரிலீசான போது, முதல் காட்சிக்குக் கூட்டமே இல்லை. இரண்டாவது ஷோவில் ஓரளவுக் கூட்டம். மாலை ஆறு மணிக்காட்சிக்கு பரவாயில்லை ரகம். இன்னும் மூணு நாளோ நாலு நாளோ ஓடினாலே பெரியவிஷயம்யா... என்று புலம்பலும் பொருமலுமாகப் பேசிக்கொண்டார்கள், தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.

ஆனால், ஐந்தாம் நாள், ஆறாம் நாள், இரண்டாவது வாரத்தில் போட்ட டாப்கியர், சில்வர் ஜூப்ளி எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. வசூல் சாதனை புரிந்தது என்பதெல்லாம் வரலாறு.

அவுட்டோர் ஷூட்டிங் 16 வயதினிலே படத்திற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அதிகமானது. ஆனாலும் மைசூர் கிராமம், ஆந்திர கிராமம் என படமெடுத்து, தமிழக கிராமமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மயிலாடுதுறையைக் களமாக்கி, இந்த நிமிடம் வரை அப்படியான படம் எதுவும் வரவில்லை... ஒருதலை ராகம் தவிர!

மயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கே, இந்த இடங்கள் புதுசு.

கதை, திரைக்கதை தொடங்கி பாடல்கள், இசை வரைக்கும் எல்லாமே டி.ராஜேந்தர்தான். அவரின் முதல் எண்ட்ரி கார்டு, இந்தப் படம்தான். தயாரிப்பு, இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று டைட்டிலில் வந்தாலும், டி.ராஜேந்தரின் அடுத்தடுத்த படங்களைப் பார்க்கும்போது, இதுவும் அவர் படம்தான் என்று இன்றுவரை நடக்கிறது பட்டிமன்றம்.

ஒருதலை ராகம், கிட்டத்தட்ட மிகப்பெரிய புரட்சி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரும் புதிது. முக்கியமாக, கல்லூரிக் களம். இவ்வளவு விஸ்தாரமாக கல்லூரியை, கல்லூரி வாழ்க்கையை  காட்டியதே இல்லை.

சங்கர், ரூபா, உஷா, சந்திரசேகர், தியாகு, ரவீந்தர் என விரல்விட்டு எண்ணும் அளவிலான கதாபாத்திரங்கள். வில்லன் என்று பார்த்தால், தயக்கமும் கூச்சமும் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லமுடியாத காதல், சொல்லத் தவிக்கிற காதல், சொல்லமுடியாத காதல் வலி... இதுதான் படத்தில் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் நம் மனதை கனமாக்கிக் கொண்டே இருக்கும். இதயம், காதல்கோட்டை, சொல்லாமலே என்று வந்திருக்கிற கதைகளுக்கெல்லாம் தாத்தா என்றுதான் ஒருதலை ராகத்தைச் சொல்லவேண்டும்.

இன்னொரு சிறப்பு... இந்தப் படத்தின் பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காதவர்கள் என்று அப்போது எவரையும் சொல்லமுடியாது. மீனா, ரீனா பாடல், வாசமில்லா மலரிது, கூடையிலே கருவாடு, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே, நானொரு ராசியில்லா ராஜா என்று பாடல்களுக்காக ஓடிய படங்களில், ஒருதலை ராகத்துக்கு தனியிடம் உண்டு.

ரொம்ப துக்கமான படத்தை திரும்பப் பார்க்கமாட்டார்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்கள். துலாபாரம் படத்தின் தோல்விக்கு, படத்தின் அதீத சோகமே காரணம் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் துயரமான முடிவு கொண்ட ஒருதலை ராகம் படத்தை, அப்போதைய இளைஞர்கள், பத்துஇருபது முறைக்கும் மேலே பார்த்தார்கள்.

பணக்கார சங்கர், ஏழை ரூபா. ஆனால் இதெல்லாம் பிரச்சினை இல்லை. ‘மூடி’டைப் ரூபாவுக்கு, தாழ்வுமனப்பான்மை ரூபாவுக்கு எப்போது எது பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அவருக்கே தெரியாது. காதலை நோக்கியும் சங்கரை நோக்கியும் ரெண்டடி வருவார். தடாலென்று பத்தடி பின்னே செல்வார்.

எப்போதும் எல்லோரையும் கலாய்த்துக் கதறடிக்கும் ரவீந்தரை நாலு அறை அறையலாம் என்று ஆடியன்ஸூக்கு தோன்றும். எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைத்தட்டி, கண்ணீர் விட்டு, கண்ணீரைத் துடைக்க மனமின்றி பிரமையற்றிருக்கும்.

மெளன மொழியில் தொடங்கிய தமிழ் சினிமாவில், மெளனமாகவே காதலைச் சொல்லியும் சொல்லாமலும் இருந்த ஒருதலைராகத்திற்கு சரித்திரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது.

ஒருதலை ராகத்தால் நமக்கு டி.ராஜேந்தர் கிடைத்தார். டி.ஆருக்கு சினிமாவுடன் சேர்ந்து, அவரின் மனைவியான உஷாவும் கிடைத்தார்.

கதை, சொல்லப்படுகிற திரைக்கதை, வசனம், நாலு நாலு நிமிஷப் பாடல்கள், முகபாவனைகள் என்று எந்த விதத்திலும் சோடை போகாமல், நம்மை உலுக்கியெடுக்கிற ஒருதலைராகத்தில்... அந்த ரயிலே கூட நம்மை என்னவோ செய்யும்!

அதை இப்போது பார்த்தாலும் உணரமுடியும்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close