'ஆர்ஆர்ஆர்’ வசூல் மகிழ்ச்சி: சுற்றுலா செல்கிறார் ராஜமவுலி


’ஆர்ஆர் ஆர்’ படம் ரிலீஸ் ஆனதை அடுத்து இயக்குநர் ராஜமவுலி, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல இருக்கிறார்.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒலிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை திரைத் துறையினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தப் படத்தின் பணிகள், கடந்த 2017-ல் தொடங்கின. தொடர்ந்து கரோனாவால் 2 வருடம் வீணானதால், படம் உருவாகி ரிலீஸ் ஆக மொத்தம் ஐந்து வருடம் ஆகிவிட்டது.

ஒவ்வொரு படம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் செல்லும் ராஜமவுலி, இந்தப் படத்துக்குப் பின்னரும் பயணத்துக்குத் தயாராகிறார். இன்னும் சில நாட்களில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு டூர் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் பின் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கான கதையை உருவாக்குவார் என்கின்றன டோலிவுட் வட்டாரங்கள்!

x