தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் களமிறங்கின. இதில், தலைவர், துணைத் தலைவர்கள் 2 பேர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றன. நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக குழுவில் இருந்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோரும், பொதுக்குழுவில் இருந்து கமல்ஹாசன், பூச்சி முருகன், சச்சு ஆகியோரும், செயற்குழுவிலிருந்து ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா ஆகியோரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.