[X] Close

கேப்டன் பத்தி மீம்ஸ் போடாதீங்க... மீம் கிரியேட்டர்ஸ்க்கு சத்யராஜ் அட்வைஸ்


vijayakanth-sathyaraj-40-year-meams-advice

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Apr, 2018 14:31 pm
  • அ+ அ-

படத்தில் உட்கார்ந்த ஐந்தாவது நிமிடமே மீம்ஸ் போடத் தொடங்கிவிடுகின்றனர். அந்த அளவுக்கு செம ஹாட் ஹிட் கொடுக்கிறார்கள், இளைஞர்கள்.

தமிழிசை, ஹெச். ராஜா, மோடி என இன்றைக்கு இவர்கள்தான் மீம்ஸூக்கு தீனி போடுகிறவர்கள் எனச் சொல்லிச் சொல்லிக் கலாய்க்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். தமிழிசையும் ராஜாவும் ஏதாவது பேசி, மீம்ஸுக்குள் விழுவார்கள் என்றால், மோடியின் நிலை அப்படியே நேரெதிர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதுவும் சொல்லாததாலேயே மீம்ஸ் நாயகனாக்கி இருக்கிறார் இன்றைக்கு!

கடந்த வருடங்களில், இதேபோல் மீம்ஸில் அதிகம் அடிபட்டவர்கள் விஜயகாந்த், வைகோவாகத்தான் இருக்கும். இதில் விஜயகாந்துக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதை வைத்தும், ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என்ற வசனத்தை வைத்துமே ஹேஷ்டேக் உருவாக்கினார்கள். மீம்ஸ் தயாரித்து வைரலாக்கினார்கள்.

இந்தநிலையில், விஜயகாந்த் திரையுலகுக்கு வந்து 40வது வருடத்தை, இப்போது கொண்டாடினார்கள். சென்னைக்கு அருகே நடந்த விழாவில், தேமுதிக உறுப்பினர்கள், திரையுலகப் பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் வந்து வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் சத்யராஜ் பேசும்போது, ’அள்ளிக்கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதையெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இந்தியாவில் எந்த மூலையில் ஏதாவது உதவி தேவை என்றாலும் அதற்கு முதல் ஆளாய் நன்கொடை கொடுப்பவர் விஜயகாந்த். 25 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த ஒரு விஷயத்துக்காக நன்கொடை கொடுத்தார். எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் ரூபாய். இப்போதையக் கணக்குப்படி பார்த்தால், அன்றைக்கு கோடி ரூபாய்க்குச் சமம்.

கேட்டால்தான் உதவி செய்வார்கள் எல்லோரும். ஆனால் கேட்காமலேயே உதவி செய்பவர் விஜயகாந்த். அவருடைய குணத்துக்குத் தகுந்தது போலவே அவருக்கு மனைவி கிடைத்திருக்கிறார். அவரும் ‘இன்னும் கொடுங்க’ என்று சொல்கிற குணம் கொண்டவர். அதனால்தான் அந்த நல்ல குணம் கொண்ட விஜி, ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்தக் காலத்திலேயே ஈழப்போர் தீவிரமடைந்திருந்தது. பெரியார் திடலில், இயக்குநர் மணிவண்ணன் ஒரு நாடகம் எழுத, அதில் விஜயகாந்த் நடித்தார். நானும் நடித்திருந்தேன். அதன் மூலம் கிடைத்தது மிகப்பெரிய தொகை. தமிழகத்தில் திரைத்துறையிலிருந்து ஈழத்துக்கு நிதி கொடுத்த முதல் கலைஞன் விஜயகாந்த். அதுமட்டுமா? தன் மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர்சூட்டினார். அதுதான் கெத்து... அதுதான் தில்லு... அதுதான் தூளு!

அந்த அளவுக்கு தைரியசாலி அவர். அன்பானவர். மனிதாபிமானி. இந்த இரண்டும் சேர்ந்து இருப்பதால்தான், வாழ்க்கை, தொழில், அரசியல் என மூன்று இடங்களிலும் அவரால் ஜெயிக்கமுடிந்தது.

நடிகர் சங்கக் கடன் அடைப்பது சம்பந்தமாக, எல்லா நடிகர்நடிகைகளின் வீட்டுக்கும் சென்றார் விஜயகாந்த். ஆச்சி மனோரமா வீட்டுக்கும் சென்றவர், வெளியே வந்தால், அந்தத் தெருவில் யாரோ ஒரு திருடன், ஒருபெண்ணின் கழுத்தில் இருந்து செயினைப் பறித்துக் கொண்டு ஓடினான். உடனே காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த், தடதடவென ஓடி, அவனைப் பிடித்து நாலு சார்த்து சார்த்தி, செயினை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தார். உண்மையிலேயே அவர்தான் ரியல் ஹீரோ. அந்த அளவுக்கு துணிச்சல்காரர் அவர்.

கார்கில் நிவாரண நிதிக்காக, மதுரையில் கலைவிழா. முடித்துவிட்டு, ரயிலேறி வருகிறோம். ஆனால் எல்லோருக்கும் பசி. சாப்பிட எதுவுமே இல்லை. கொடை ரோட்டில் வண்டி நின்றதும், வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு விறுவிறுவென ஓடி, கொத்துபரோட்டாவும் சிக்கன் குருமாவும் எல்லோருக்கும் வாங்கிக் கொண்டு வந்தார்.

என் நண்பர் தயாரித்த என்னுடைய படம் வள்ளல். அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் சின்ன சிக்கல். இதை அறிந்த விஜயகாந்த், ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு போன் செய்து, ‘வீட்டுக்குதான் வரேன். வள்ளல் பட பிரச்சினையை இன்னிக்கி முடிக்கிறோம்’ என்றார்.

ஈட்டி படத்தில் விஜி ஹீரோ. நான் வில்லன். நுங்கம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் சில காட்சிகள் எடுக்கவேண்டும். அப்போது அங்கே போனபோது, சேட் மாதிரி ஒருவரைப் பார்த்தோம். அவரும் பார்த்தார். ‘சத்யராஜ்... அவரு ஏதோ நல்லாப் படிச்சவரு மாதிரி இருக்காரு. இங்கிலீஷ்ல எதுனா கேப்பாரு போல. அதனால நீங்களே பேசிருங்க’ என்றார். உடனே நான்... ‘’ஏன் விஜி. எனக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியுமா. நீங்க மதுரைலேருந்து வந்தீங்க. நான் கோயம்புத்தூர்லேருந்து வந்தேன். அவ்ளோதான் என்று சொன்னேன்.

இந்த மீம்ஸ் போடுகிறவர்கள், விஜியைப் பற்றி ஏகத்துக்கும் கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள். அவருக்கு இங்கிலீஷ் தெரியாதுதான். ஹாலிவுட்ல நடிக்கிறவருக்கு தமிழ் தெரியாதுதானே. ஷாரூக்கானுக்கும் சல்மான்கானுக்கும் தமிழ் தெரியாதுதானே. அவ்வளவு ஏன்... மீம்ஸ் போடுகிற உங்களுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது.

மீம்ஸ் போடுகிற பையன்கள், விஜயகாந்தோட நல்ல குணங்களையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு மீம்ஸ் போடலாமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல், மீம்ஸ் போடாதீர்கள்’ என்று சத்யராஜ் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close