[X] Close
 

கேப்டன் 40... வாழ்க விஜயகாந்த்! சினிமாவின் 40 வருடப் பயணத்துக்கு சல்யூட்


captain-40-vijayakanth

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Apr, 2018 16:52 pm
  • அ+ அ-

இப்போது அவர் கட்சித் தலைவர். ஆனாலும் எல்லோரும் கேப்டன் என்றுதான் அழைக்கிறார்கள். அதற்கு முன்னதாக புரட்சிக்கலைஞர். திரையில், புரட்சிக்கலைஞர் என்று அடைமொழியுடன் பெயர் வரும்போதே, விசில் எகிறியடிக்கும். கைத்தட்டலில் தியேட்டரே அதிரும். இதற்கும் முன்பு அவர் நமக்கெல்லாம் அறிமுகமானது அந்தப் பெயரில்தான். நிஜப்பெயரில் சின்ன மாற்றம் செய்து வந்தவர், நம்மையெல்லாம் காந்தம் போல் ஈர்த்து இழுத்துக் கொண்டார். அவர் விஜயகாந்த். சொல்லப்போனால், விஜயகாந்துக்கு முன்பாக விஜயராஜ். விஜயகாந்துக்குப் பிறகான திரைப் பயணத்தில் கேப்டன். அரசியல் களத்தில் தேமுதிக தலைவர்.

எழுபதுகளின் இறுதியில் திரையுலகில் அறிமுகமானார். இனிக்கும் இளமையில் இருந்து இனிமையான பயணம் தொடங்கியது. மதுரையில் இருந்து சினிமா ஆசையுடன் வந்தவரை, இயக்குநர் எம்.ஏ.காஜா, கைப்பிடித்து தூக்கிவிட்டு, கேமிராவின் முன்னே நிற்கச் செய்தார். அன்று தொடங்கிய கேமிரா வெளிச்சம்... இன்று வரை விஜயகாந்த் பக்கம் ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது. விஜயகாந்தின் திரைப் பிரவேசத்திற்கும் அவர் மீதான கேமிரா வெளிச்சத்திற்கும் நாற்பது வயது ஆகிவிட்டது.

1979ல் இனிக்கும் இளமை ரிலீசானது.  அவர் கேமிராவின் முன்னே நின்றதையொட்டி, இந்த 2018ல் கொண்டாடப்படுகிறது 40வது ஆண்டு விழா. இது கேப்டன் 40.

முதல் படம் பெரிதாகப் போகவில்லை. அடுத்தடுத்தும் அப்படித்தான். ஆனால், அகல்விளக்கு படத்தில், ஒரேயொரு பாடல் அவரை சினிமா ரசிகர்களின் பக்கம் கொண்டுசென்றது. அது இளையராஜாவின் ‘ஏதோ நினைவுகள்...’ பாடல்.

கிட்டத்தட்ட இப்படியேயான சினிமாப் பிரவேசத்தில் சட்டென்று ஓர் வெளிச்சம் கிடைத்தது... சட்டம் ஒரு இருட்டறையில்தான். இனிக்கும் இளமையில் அறிமுகப்படுத்திய எம்.ஏ.காஜா, தூரத்து இடி முழக்கத்தில் நடிக்க வைத்த கே.விஜயன், சட்டம் ஒரு இருட்டறை எனும் முதல் வெற்றிப்படத்தைத் தந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் என இவரின் நன்றிக்குரிய பட்டியல்களை இன்றைக்கும் அசைபோட்டபடி இருக்கிறார். அதுதான் விஜயகாந்த் எனும் அற்புதமான மனிதரின் மனசு.

எண்பதுகள், கமல் ரஜினியின் காலம். அந்த சமயத்தில், அவர்களுக்கு அடுத்ததாக, மெல்ல மெல்ல வந்து, சிவப்புமல்லி ஹிட் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது, விஜயகாந்தின் க்ராஃப். அதன் பிறகு சாட்சி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம் என்று வந்தாலும் அடுத்த ஏற்றம்... நூறாவது நாளில், இயக்குநர் மணிவண்ணன் மூலமாகக் கிடைத்தது.

இதனிடையே விஜயகாந்த் சந்தித்த அவமானங்களும் தோல்விகளும் நக்கல் நையாண்டிகளும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால்... விஜயகாந்தின் இன்னொரு குணம்... உழைப்பு, உழைப்பு, கடும் உழைப்பு. அந்த உழைப்பின் பரிசு... ஊமைவிழிகள். ஒருவகையில் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த பரிசு இது! இதற்குப் பிறகுதான் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு அங்கீகாரமே கிடைத்தது. விஜயகாந்தின் ஐ.எஸ்.ஐ.முத்திரை என்று கொண்டாடினார்கள் அவர்கள்.

இப்படித்தான்... இதுமாதிரிதான் என்றில்லாமல், எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்தார். ராதாவை வம்புக்கு இழுக்கும் அம்மன்கோவில் கிழக்காலே, ராதாவின் மரண தருணத்தை வருந்தும் நினைவே ஒரு சங்கீதம், ஏகப்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக தழுவாத கைகள், ஊருக்கே பெரியதலைகட்டாக சின்னக்கவுண்டர் என வந்தாலும் போலீஸ் கெட்டப் சினிமாவில் அத்தனை அழகாகப் பொருந்தியது விஜயகாந்திற்குத்தான்! புலன்விசாரணைக்குப் பிறகு, மழைக்குப் போடுகிற கோட்டுக்குக் கூட விஜயகாந்த் கோட் என்றே பெயர் வந்தது.

சினிமாவைப் பொருத்தவரை, நூறாவது படத்துக்கு ராசியே இல்லை என்பார்கள். எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு, சிவாஜியின் நவராத்திரி, கமலின் ராஜபார்வை, ரஜினியின் ராகவேந்திரர், பிரபுவின் ராஜகுமாரன் என்று சரியாகவே போகவில்லை. ஆனால் சிவகுமாரின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி போலவே விஜயகாந்திற்கு நூறாவது படமான கேப்டன் பிரபாகரன், இருநூறு நாட்களைக் கடந்து ஓடி, மிகப்பெரிய வசூல் சாதனையைத் தந்தது. அந்த சாதனைக்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் கிடைத்ததுதான் கேப்டன் பட்டம்.

ஆரம்ப காலத்தில் கைதூக்கிவிட்டவர்களை ஒருபோதும்  மறந்ததே இல்லை இவர். அவர்களுக்காக குறைந்த சம்பளத்திலும் சம்பளமே வாங்கிக் கொள்ளாமலும் அவர் நடித்த பல படங்கள், செகண்ட் ரிலீஸ், தேர்டு ரிலீஸ் சமயங்களில் கூட, வசூலைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்ததெல்லாம் வரலாறு.

இருபது வருடங்களுக்கு முன்பு நண்பரொருவர், விஜயகாந்துக்கு நண்பரானார். அவர் வீட்டுக்கு நிறையபேர் வந்து, கஷ்டங்களைச் சொல்ல, அவரவருக்குத் தக்கபடி பண உதவிகளை வழங்கினாராம். ‘யாரு, என்ன, எதுக்குன்னு விசாரிச்சிட்டு பணம் கொடுக்கலாமே’ என்று உதவியாளர் சொல்ல, சுள்ளென்று கோபமாகிவிட்டாராம் விஜயகாந்த். ‘அவங்ககிட்ட இல்ல... கேக்கறாங்க. எங்கிட்ட இருக்கு. கொடுக்கறேன். இதுலல்லாம் போய் ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தா, அதுக்குள்ளே உதவி கேட்டவன் செத்தே போயிருவான். இல்லியா... உதவணும்னு நெனைக்கற நான் செத்துப் போனாலும் போயிருவேன். இந்த வாழ்க்கை ரொம்ப சின்னூண்டுடா’ என்று சொல்ல... நெகிழ்ந்ததை நண்பர் என்னிடம் சொல்லிப் பாராட்டியது நினைவுக்கு வருகிறது.

திருச்சியின் புறநகர்ப் பகுதியில் உள்ள அந்தத் தியேட்டர், இப்போது இல்லை. ஆனால் தியேட்டர் முதலாளி அண்ணனிடம்... ‘ஏண்ணே... திடீர்னு திடீர்னு பழைய விஜயகாந்த் படங்களா தேடிப்புடிச்சுப் போடுறீங்களே... விஜயகாந்த்னா பிடிக்குமாண்ணே’ என்று கேட்டேன். ‘விஜயகாந்தை புடிக்குமா புடிக்காதாங்கறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். அவர்தான் நம்மளைப் போல சின்ன தியேட்டருங்களை வாழ வைக்கிற ஆபத்பாந்தவன். இ.பி.க்கு பணம் கட்ற நாளுக்கு ஒருவாரம் முன்னாடி, விஜயகாந்த் படம் போட்டாப் போதும். அது ரிலீஸ்ல பெயிலியரான படமாவே இருந்தாலும் மூணு நாலு நாள் செம கலெக்‌ஷனாயிரும். எம்.ஜி.ஆர். படங்களுக்கு அப்புறம் இப்படி கைகொடுக்கறது விஜயகாந்த் படங்கள்தாண்டா’ என்று சொன்ன போது, முண்டியடித்து டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்ற கூட்டம் அதை உறுதி செய்தது.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் பணியாற்றியதும் செயலாற்றியதும் செம்மைப்படுத்தியதும் அவரின் நிர்வாகத்திறனைச் சொல்லும். மிகப்பெரிய ஆளுமையும் கடைக்கோடி கிராமங்களுக்குள்ளும் அவர் புகுந்து, ரசிக மனங்களைக் கொள்ளை கொண்ட ஈர்க்கிற சிரிப்பும் தேமுதிகவை தொடங்கி தலைவராகவும் உயர்ந்து வளர்ந்து சாதித்தும் காட்டி, சறுக்கலையும் சந்தித்து... என விஜயகாந்தின் பயணம்... அபரிமிதமானது. கடும் உழைப்பும் பரோபகார குணமும் நன்றியுணர்வும் கொண்ட கலவை அது.

நாளை ஞாயிற்றுக்கிழமை 15ம் தேதி (15.4.18) சென்னைக்கு அருகே, திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறார்கள்.

விஜயராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், கேப்டனின் படை பட்டாளங்கள், தேமுதிக தலைவரின் உறுப்பினர் பரிவாரங்கள் எல்லோரும் வாழ்த்துகிற இந்த வேளையில்... அந்த உன்னத மனிதனை, விஜயகாந்தை வாழ்த்துவோம். நோயின்றி, ஆரோக்கியத்துடன், ஆனந்தமாய், ஆயுள் பலத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் கேப்டன்!

 

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


[X] Close