[X] Close

''கிரீன்புக்'' கிற்கு ஆஸ்கர் விருது: இன்றும் மாறாத கறுப்பு வெள்ளை நிறபேதத்தை அழுத்தமாகப் பேசும் படம்


green-book-oscar-award-won-for-best-movie

கிரீன் புக் படத்தில் ஒரு காட்சி

  • பால்நிலவன்
  • Posted: 25 Feb, 2019 15:35 pm
  • அ+ அ-

2018ல் வெளியான ''கிரீன்புக்'' திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் 2019 விருது வழங்கியுள்ளதன்மூலம் அமெரிக்காவில் வேற்றுமை பாராட்டும் அதிகார உச்சத்தில் இருக்கும் யாருக்கோ இவ்விருதுமூலம் ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.

நிறபேதம் முடிந்துபோன ஒன்று என்று நினைக்கமுடியவில்லை. நம் மனங்களில் ஒரு வண்டலைப்போல அது படிந்துள்ளது.

வயிற்றுப்பிழைப்புக்காக அமெரிக்காவுக்குள் வரும் அண்டை நாட்டு மக்களை வரக்கூடாது என்றே சுவர் எழுப்பும் மனோபாவத்தின் உள் இழைகளோடு அது பின்னிப் பிணைந்துள்ளது. இந்த மாதிரி நேரத்தில்தான் அமெரிக்கா கடந்துவந்த நிறவெறி முறியடிப்பு வரலாறுகளை நாம் பேசவேண்டியுள்ளது. அதன் கசடுகளை நாம் நீக்க நல்ல கலைப்படைப்புகள் நமக்கு வேண்டியிருக்கிறது. 

ஆனால் நிறபேதம் என்ற அல்லது சமூக அக்கறை மிக்க ஒரு பிரச்சினையை திரைப்படமாக்கும்போது பெரும்பாலும் அதில் கோட்டைவிடுவதுதான் பலரது

கைவண்ணமாக இருக்கும். ஒன்று உணர்ச்சிக்குவியலாக அல்லது காமெடி தர்பாராக. ஆனால் இப்படம் நேரடித் தன்மையோடும் நுண்ணிய கலையம்சத்தோடும் வெளிப்பட்டுள்ளது.

ஐஎம்டிபி பரிந்துரை பட்டியலில் 18வது இடம்

இப்படம் பார்தத உடன் நிச்சயம் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வாய்பபுள்ளது என்று பலரிடமும் பேசினேன்.

சென்ற மாதம் வெளியிட்ட ஐஎம்டிபி படடியலில் ஆஸ்கர் பரிந்துரையில் 18வது இடத்தில் கிரீன் புக் படத்தை வைத்திருந்தார்கள். எனினும் இப்படமே ''சிறந்த படம்'' என்ற அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் நான் சொன்னேன் என்பதற்காக அல்ல, கருத்தாகவும் மட்டுமின்றி படமாக்கிய தேர்ந்த முயற்சிக்காகவும் ஒரு நல்ல படம் அங்கீகாரத்திலிருந்து தவறிவிடக்கூடாது என்றவகையில்தான் அந்த மகிழ்ச்சி.

இப்படத்தைப் பொறுத்தவரை ஒரு சிறுகதை போன்றதுதான். அல்லது நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு இசைக்கலைஞனின் சிற்சில நாட்களைப் பற்றிய டைரிக்குறிப்புகளிலிருந்து திரட்டி உருவாக்கப்பட்ட படைப்பு.

பயணத்திற்காக வழங்கப்படும் கிரீன்புக்

கிரீன் புக் என்பது அமெரிக்காவில் சாலைவழியே நெடுந்தூர பயணங்கள் செல்பவர்களுக்கு வழங்கப்படும் கைடு புக்தான். ஆனால் அதன்மூலம் வழங்கப்பட்டுள்ள செய்திகள் ஏராளம்.

டாக்டர் டான் ஷைர்லி எனும் புகழ்பெற்ற பியானிஸ்ட் தெற்கே வெகுதூரம் இசைப் பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு கார் டிரைவராகவும் பாதுகாவலராகவும் நியூயார்க்கின் நகர செக்யூரிட்டி ஒருவர் நியமிக்கப்படுகிறார். பயணத்தின்போது இவர்கள் இருவருக்கும் ஏற்படும் அற்புதமான நட்பையே இப்படம் சித்தரிக்கிறது.

பயணத்தின்ஊடே ஏற்படும் பல்வேறு சம்பவங்கள்தான் திரைப்படம். முதலில் கறுப்பின இசைக்கலைஞரை அலட்சியமாக நடத்துகிறார் நியூயார்க் வெள்ளையின கார் டிரைவர். பின்னர் இசைக்கலைஞனின் ஒழுங்குமுறைகள், மரியாதைமிக்க நடவடிக்கைகள், இசைநிகழ்வுகளில் திறமையால் பல்வேறு நகர மேயர்கள் உள்ளிட்டவர்களிடம் கிடைத்துள்ள செல்வாக்கு போன்றவற்றைக் கண்டு உடனே மாற்றிக்கொள்வதோடு அவருக்கு உற்றநண்பராக மாறுகிறார். பயணத்தின்போது ஓய்வெடுக்கும் சில இடங்களில் வெள்ளையின மக்கள் சிலர் ஆங்காங்கே இசைக்கலைஞனை கேவலப்படுத்தும்போது அவருக்காக துணைநிற்கிறார்.

மனைவிக்கு எழுதும் கடிதங்கள்

வெள்ளையின கார் டிரைவர், தன் மனைவிக்கு எழுதும் காதல் கடிதங்களில் உள்ள ஆங்கிலப் பிழைகளை சரிசெய்வதோடு முற்றிலும் நல்ல ஆங்கில கடிதங்களை இசைக்கலைஞன் எழுதித் தர கார் டிரைவர் வீட்டில் அக்கடிதங்களை படித்து அனைவரும் வியக்கின்றனர். அதிலும் கார் டிரைவரின் மனைவியின் தங்கை அக்காதல் கடிதங்களின் ஊடே கையாளப்பட்ட அழகிய சொற்பிரயோகங்களில் மனம் லயிக்கிறாள். வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும் இக்கடிதங்கள் டிரைவரால் எழுதப்படவில்லை என்று.

வயலில் வேலை செய்யும் கறுப்பினத்தவர்கள்

இப்படத்தில் ஒரு அற்புதமான காட்சி... ஒரு இடத்தில் கார் நின்றுவிடுகிறது. டிரைவர் என்ஜின் சரிசெய்யும்வரை இசைக்கலைஞன் காருக்குவெளியே நின்று அருகே வயல்வெளிகளில் நடக்கும் வேலைகளைப் பார்க்க முற்படுவான். அப்போது அங்கே வேலைசெய்பவர்கள் இவனை பார்ப்பார்கள்.

சரியான வெயிலில் நிலத்தில் வேலைசெய்துகொண்டிருப்பவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்களே. அட நம் இனத்தவனுக்கு அந்த வெள்ளையினத்தவர் கார் ஓட்டுகிறாரே என்று நினைப்பார்கள். இவனும் அவர்களைப் பார்த்து அட இன்னும்கூடவே நம் மக்களுக்கு விடிவு பிறக்கவில்லை என்று கருதுவான்.

இயக்குநர் பீட்டர் பெர்ரேலி சற்றே நீடித்த மணித்துளிகளில் இக்காட்சி இடம்பெற்றுள்ள இக்காட்சியை அர்த்தம்பொதிந்த வகையில் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

இசைக்கலைஞனாக மஹேர்ஷலா அலியின் நடிப்பு கவுரவமிக்கது என்றால், கார் ஓட்டுநராக நடித்துள்ள விக்கோ மார்டென்சனின் நடிப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் இடம்பெற்ற கிரின் போவர்ஸின் பியானோ ராகங்களும் பின்னணி இசையும் என்றென்றும் நம் நினைவை மீட்டிக்கொண்டிருப்பவை. சீன் போர்ட்டரின் உறுத்தாத ஒளிப்பதிவில் ஒரு பயண அனுபவத்தை நாம் பெறுவதுபோன்ற உணர்வு..

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

படத்தின் கிளைமாக்ஸைப் பற்றியும் அவசியம் பேசவேண்டியிருக்கிறது...

பயணம் முடிந்து திரும்பிக்கொண்டிருக்கும்போதே எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கி களைகட்டுகிறது. டிரைவர் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டுக்குச் செல்லும்போது டிரைவர் வீட்டுக்கு வாங்களேன்...கிறிஸ்துமஸ் எங்க வீட்டுல கொண்டாடலாம் என்கிறார். வேண்டாம் என்றுவிட்டு வீடு திரும்புகிறான் இசைக்கலைஞன்.

அவ்வளவு பெரிய பங்களாவில் இவன் மட்டும் தனியாக வேலைக்காரருக்கும் கிறிஸ்துமஸ் விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு தனிமையில்

இருக்கிறான். அப்போது என்னவோ தோன்ற திடீரென புறப்பட்டு டிரைவர் வீட்டுக்கு செல்ல அங்குள்ள விருந்தினர்கள் இவனைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள்.

மாறாக டிரைவரும் அவனது மனைவியும் வேறொரு அறையிலிருந்து வாசலுக்கு வந்தவர்கள் இவனை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்.

இக்காட்சியோடு படம் நிறைந்தவுடன் இரு கதாபாத்திரங்களின் உண்மைப் நிழற்படங்கள் ஒவ்வொன்றாக திரையில் வெளிப்படுகிறது. அவர்கள் இருவரது உண்மை வாழ்க்கைக் குறிப்புகள் திரையில் வெவ்வேறு புகைப்படங்களோடு தோன்றிக்கொண்டேயிருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close