[X] Close

கண்ணே கலைமானே - விமர்சனம்


kanne-kalaimaane-review

  • நாகப்பன்
  • Posted: 22 Feb, 2019 18:08 pm
  • அ+ அ-

காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. 

அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை சோழவந்தானில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று மக்களின் நண்பனாகத் திகழ்கிறார். மதுரை கிராம வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார் பாரதி (தமன்னா). உதயநிதி மாடு வாங்குவதற்காக பெற்ற வங்கிக் கடனை அடைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் எச்சரிக்கிறார் தமன்னா. அதற்குப் பிறகான பல சந்தர்ப்பங்களில் உதயநிதியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்கிறார். இவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது. 

மகனின் காதலை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட அப்பா 'பூ' ராம் அவசரப்படாமல் இருக்கச் சொல்கிறார். அப்பத்தா வடிவுக்கரசி தமன்னாவின் வீட்டுக்குச் சென்று அவர்களின் வரலாற்றை அறிந்துகொள்கிறார். இருவருக்கும் ஒத்துவராது என்று வடிவுக்கரசி முடிவெடுக்க, உதயநிதியின் பிடிவாதத்தால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் இனிதாக நடைபெறுகிறது. 

சில நாட்கள் மகிழ்ச்சியாகச் செல்லும் உதயநிதி- தமன்னா வாழ்வில் ஒரு தீராத நோய் வந்து இடியாக இறங்குகிறது. அதிர்ந்து பேசாத உதயநிதி அடிவாங்குகிறார். தமன்னாவின் நிலை என்ன, அவரை உதயநிதியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா? தமன்னாவுக்கு எப்படி என்ன நோய் போன்ற கேள்விகள் என்பது திரைக்கதையில் பதில்களாக விரிகின்றன. 

மனிதர்களுக்கிடையே நடக்கும் உறவுப் போராட்டங்களை, பாசப் பிணைப்பை தனக்கே உரிய பாணியில் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்திலும் அதை நிவர்த்தி செய்திருக்கிறார். இயக்குநர் பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை' படத்தில் வரும் பாடல் வரி கண்ணே கலைமானே. அதையே படத்தின் தலைப்பாக்கி குருவுக்கு மரியாதை செய்திருக்கும் இயக்குநர் சீனு டைட்டிலுக்கான காரணத்தையும் தர்க்க ரீதியாக படத்தில் சொல்லியிருக்கும் விதம் பொருத்தமானது. 

'மனிதன்' படத்திற்குப் பிறகு உதயநிதிக்கு இது முக்கியமான படம். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தையும், தமன்னா மீதான காதலையும் மிக நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். பயம், பதற்றம், பதைபதைப்பு, தயக்கம் ஆகிய உணர்வுகளைக் கடத்தும் விதத்திலும் நடிப்பில் முன்னேறி இருக்கிறார். 

தமன்னாவின் பார்வையில்தான் படம் பயணிக்கிறது.  தமன்னாவும் நடிப்பின் வழியே அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சின்னச் சின்ன அசைவுகளில், எதிர்பார்ப்பில், தவிப்பில், காதலின் லயிப்பில் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். 

குடும்பம் உடைந்துவிடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் காட்டும் 'பூ' ராமு, ஈகோவால் எகத்தாளமாகப் பார்த்து பின் பிரச்சினையின் வேர் புரிந்து பாசம் காட்டும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் மிகச்சிறந்த உறுதுணை கதாபாத்திரங்கள். இருவரும் அநாயசமான நடிப்பில் மனதில் நிறைகிறார்கள். 

நண்பனுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் வசுந்தராவும், வங்கியின் மேலாளராக உயரும் ஷாஜியும் தத்தம் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். 

மதுரை மண்ணையும், வயல்களின் செழிப்பையும், மனித மனங்களில் சுமக்கும் அன்பையும் ஜலந்தர் வாசன் தன் கேமராவில் அழகாகப் படம் பிடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் செவ்வந்திப் பூவே, நீண்ட மலரே பாடல்கள் வசீகரிக்கின்றன. எந்தன் கண்களைப் பாடல் நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் கொட்டுகிறது. பின்னணி இசையில் கதையோட்டத்துக்குத் தேவையான ஒத்திசைவைக் கொடுத்திருக்கிறார் யுவன். காசி விஸ்வநாதனின் முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். 

''எங்கே நேர்மை இருக்கோ அங்கே மூர்க்கம் கோபம் ரெண்டுமே இருக்கும்'', ''ஒரு சேலை நெய்ய ஒரு நெசவாளி 20 ஆயிரம் முறை கையைக் காலை ஆட்டணும், அவங்களுக்காகத்தான் இந்த சேலையை உடுத்துறேன், இந்தப் பேச்சுல நம்ம பேச்சை மறந்துடாதீங்க'' போன்ற எளிமையான வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. 

விவசாயக் கடன், விவசாயி தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம், கல்விக் கடன், மாட்டு அரசியல் என்று முதல் பாதி முழுக்க கருத்துகளால் நிறைத்திருக்கிறார் சீனு ராமசாமி. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வின் பாதகம், கர்ண மகாராஜா வேடம் போடுபவர் வட்டி கொடுக்க முடியாமல் அவஸ்தைப்படுவது என பல நீளும் சம்பவங்களின் நீட்சியைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். 

மற்றபடி மனித வாழ்வின் அனுபவங்களை, அன்பை ஒரே நேர்க்கோட்டில் பதிவு செய்திருக்கும் திரைக்கதை உத்தி மனசுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. கெட்டதை நினைக்காத, கெட்டதைச் செய்யாத மனிதர்கள் சூழ் உலகை அருகிருந்து பார்ப்பது போன்ற உணர்வையும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அன்பு அத்தனை குறைகளையும் மறக்கடிகும் என்பதையும் அழுத்தமாகச் சொன்ன விதத்தில் சீனு ராமசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close