[X] Close

’இப்பவும் விஷாலை ஆதரிக்கிறேன். ’இளையராஜா 75’ மறக்கமுடியாத அனுபவம்’; - பார்த்திபனின் வருத்தங்கள்


parthiban-ilayaraaja75

பார்த்திபன் - விஷால்

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Feb, 2019 13:00 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எனக்கும் விஷாலுக்கும் சண்டையோ வருத்தமோ எதுவுமே இல்லை. எதுஎப்படியோ, ‘இளையராஜா 75’ எனக்கு மறக்கமுடியாத அனுபவமாகிவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்த சமயத்தில், அவரின் புகழைப் போற்றும் விதமாகவும் அவரின் குடும்பத்தாருக்கு உதவும் விதமாகவும் இளையராஜா சார் நிகழ்ச்சி ஒன்றைச் செய்தார்.

அந்த நிகழ்ச்சி தந்த தாக்கம் எனக்குள் இருந்தது. ஒருவர் உயிருடன் இருக்கும்போதே இப்படியான பாராட்டு விழாக்களை நடத்தினால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

அப்போது ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘ராஜா சாருக்கு இப்படியான விழாவை நடத்தணும். நீங்கதான் தலைமை வகிக்கணும்’ என்று சொன்னேன். ரஹ்மானுக்கும் இளையராஜா சார் மேல அவ்வளவும் மரியாதையும் அன்பும் உண்டு. ஆகவே ஒப்புக்கொண்டார். இதெல்லாம் எம்.எஸ்.வி. நிகழ்ச்சி நடந்த சமயத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று!

எனக்கும் ரஹ்மானுக்கும் உள்ள பழக்கம் ‘ஏலேலோ’ படம் சேர்ந்து செய்வதில் தொடங்கியது. ஆனால் படம் பண்ணவில்லை. அதேசமயம் 18 வருடங்களாக அவருடனான நட்பை வளர்த்துவந்திருக்கிறேன்.

இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா சாருக்கு விழா நடத்தும் போது விஷால் என்னை நடத்தித்தரும்படி கேட்டுக்கொண்டார்.

ஒரு சாதாரண விஷயத்தையே அசாதாரண விஷயமாகச் செய்ய நினைப்பவன் நான். அப்படியிருக்கும் இப்படியான அசாதாரணமான விழாவை, இன்னும் எப்படியெல்லாம் சிறப்பாகச் செய்யலாம் என்று யோசித்தேன்.

500 ஆர்மோனியப் பெட்டிகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வரிசையாக வைத்திருக்க, நடுவே ராஜா சார் நடந்து வரச் செய்தால் என்ன என்று யோசித்தேன். ஆர்மோனியப் பெட்டிகளெல்லாம் கூட ஏற்பாடு பண்ணிவிட்டேன்.

ஆனால், ரமணாவும் நந்தாவும் நான் சொல்லுகிற எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். கொஞ்சம்கொஞ்சமாக, அவமரியாதையின் வலிகளை உணரத் தொடங்கினேன்.

ரஹ்மானை அழைப்பது குறித்து ராஜா சாரிடம் கேட்டு சம்மதம் வாங்கினேன். ‘அவர் பாடினால் நன்றாக இருக்கும் சார். பாட வைக்கலாமா?’ என்று கேட்டேன். சரியென்றார் ராஜா சார். ‘எந்தப் பாட்டை பாடச் சொல்லணும் சார்’ என்று கேட்டேன். அதற்கு ராஜா சார், ‘அவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

அப்பாடா என்றானது. ரஹ்மானுக்கு எல்லா விஷயமும் சொன்னேன். தேதியை மாற்ற முடியாதா என்று கேட்டார். பிறகு 3ம் தேதி வருவதற்கு ஒத்துக்கொண்டார். அப்புறம் 2ம் தேதி நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் யாருமே இல்லை என்று ரஹ்மானை 2ம் தேதியே வரச்சொன்னேன். அதற்கும் அவர் ஒத்துக்கொண்டார்.

விழா நாளில், ரஹ்மானை வீட்டுக்குச் சென்று அழைத்துவரவேண்டும் என்பதுதானே மரியாதை. ‘வாங்க கார்ல ஏறுங்க’ என்றார் ரஹ்மான். ‘பின்னாடியே வரேன் சார்’ என்று சமாளித்தேன். என்னுடைய வலிகளை, எனக்கு நேர்ந்த அவமானத்தை யாருக்கும் தெரியப்படுத்த நான் விரும்பவில்லை.

ரஹ்மான், மேடையில் இருந்து, ‘எங்கே காணோம்?’ என்று எனக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். என்ன பதில் சொல்வது என்று பேசாமல் இருந்துவிட்டேன். எனக்கு இளையராஜா சாரின் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவேண்டும். அடுத்து, விஷாலின் முயற்சி வெற்றிபெறவேண்டும்.

இந்த விஷயத்தில் விஷால் யார் பக்கம் நிற்பது என்பதில் தவித்துக் குழம்பியிருக்கிறார். அதில் கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதேநேரத்தில், ‘இளையராஜா 75 விழாவின் கிரியேட்டிவ் விஷயங்களை அவர் பண்ணட்டும் என்றுதான் பார்த்திபனைக் கூப்பிட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். ஏனோ சொல்லவில்லை.

ஆனால் என்ன... இப்பவும் கூட விஷால் பக்கம்தான் நிற்கிறேன். தொடர்ந்து அவருக்கு ஆதரவு தந்துகொண்டுதான் இருப்பேன். அவர் மீது கோபமோ வருத்தமோ இல்லை. இளையராஜா 75 நிகழ்ச்சி, எனக்கு மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்துவிட்டது.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close