வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கும் பா.ரஞ்சித்: வெளியான புதுப்பட அப்டேட்


சென்னை: பப்புவா நியூ கினி நாட்டுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இந்தியா - பப்புவா நியூ கினி இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் ரஜினியை வைத்து ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றார். அண்மையில், ‘தங்கலான்’ படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இவர் அவ்வப்போது படங்களையும் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவரின் அடுத்த படத் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ‘Papa Buka’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் டாக்டர் பிஜூ இயக்குகிறார். ரிதாபரி சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் படத்தை தயாரிக்கிறார். அவருடன் சிலிக்கான் மீடியா நிறுவனமும் இணைகிறது. இந்த இந்திய நிறுவனங்களுடன் பப்புவா நியூ கினி நாட்டின் நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி (NAFA) இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.