[X] Close

'தில்லுக்கு துட்டு 2’ - விமர்சனம்


thillukku-thuttu-2

தில்லுக்கு துட்டு 2

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Feb, 2019 11:24 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

’ஐ லவ் யூ’ என்று சொன்னாலே, அங்கே பேயாட்டம் போடும் பேயும், அந்தப் பேயின் தாண்டவத்தையெல்லாம் கடந்து நாயகியை சந்தானம் எப்படிக் கரம்பிடிக்கிறார் என்பதும்தான் ‘தில்லுக்கு துட்டு 2’.

சென்னை மருத்துவமனையில் பணிபுரிகிறார் நாயகி ஷிர்தா சிவதாஸ். ஆட்டோ டிரைவர் சந்தானம் சரக்கடித்துவிட்டால், ஏரியாவே அதகளமாகிவிடும். தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்துகொண்டு, குடித்துவிட்டு அடிக்கும் அலப்பறையைத் தாங்கமுடியாமல் புலம்புகிறார்கள் ஏரியாவாசிகள். அங்கே உள்ள மருத்துவரும் இந்த டார்ச்சரை அனுபவிக்கிறார்.

அந்த டாக்டருக்கு நாயகியின் மீது ஒரு கண். ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதுமே அங்கே பேய் வந்து, அவரைப் புரட்டிப் போடுகிறது. ‘இந்தப் பெண்ணுடன் சந்தானத்தைக் கோர்த்துவிட்டால், ‘ஐ லவ் யூ’ சொல்லி, சிக்கிக்கொள்வார் சந்தானம். அவர்களின் டார்ச்சரில் இருந்து ஏரியாவுக்கு விடுதலை’ என்று சிந்தித்து, திட்டமிட, அதன்படியே சந்தானம் தன் காதலைச் சொல்லுகிறார்.

அப்போதுதான், நாயகியின் தந்தை, கேரளாவில் மிகப்பெரிய மாந்த்ரீகம், பில்லி சூனியம் ஏவலெல்லாம் செய்பவர் என்று தெரிகிறது. நேராக கேரளா சென்று மாந்த்ரீகவாதியைப் பார்க்கிறார். பெண்ணை காதலிக்கும் விஷயத்தைச் சொல்லுகிறார்.

அதைக் கேட்டு மாந்த்ரீகவாதி என்ன செய்கிறார், அங்கே அடைக்கலம் தருபவர்கள் யார், ‘ஐ லவ் யூ’ என்று ஆண் சொன்னதும் பேய் வருவது எதற்காக என்பதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் திரைக்கதையுடன் அமைத்திருக்கிறார் இயக்குநர்.

ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருப்பதும் ‘இப்ப இப்படி இருக்கிற சந்தானம், மாலையைக் கழட்டினதும் எப்படி ஆவார்’ என்பதில் இருந்துதான் படம் தொடங்குகிறது. காமெடி கலந்த பேய்ப்படம்தான். ஆனால் வயிறு குலுங்கச் செய்யும் காமெடியும் இல்லை. பதைபதைக்கச் செய்யாமல் வெறுமனே பேய்கள் உலா வருகின்றன.

’தில்லுக்கு துட்டு’ தந்த குழுவினரை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சந்தானம். இயக்குநர் ராம்பாலா, முதல் படத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றபடி, ஈர்க்கும் வகையிலான காட்சிகள் இல்லாதது மைனஸ்தான்.

தமிழ் சினிமா இலக்கணப்படி ஹீரோவுக்கு ஓர் ஓபனிங். அதேபோல்தான் சந்தானத்துக்கும். ஹீரோவின் சட்டை கசங்காத சண்டையைத்தான் சந்தானமும் செய்கிறார். வழக்கமாக பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் வாய்க்கு வாய், வார்த்தைக்கு வார்த்தை கலாய்த்தெடுப்பவர், இந்த முறை பேய்களை கலாய்க்கிறார் என்பதை ஓரளவு ரசிக்கலாம். அதேசமயம், தடக்தடக்கென்று வருகிற இரட்டை அர்த்த வசனங்களும் அருவெறுக்கத்தக்க காட்சிகளும், ‘இது வேறமாதிரி படமோ. குழந்தைகளைக் கூட்டி வந்திருக்கக் கூடாதோ’ என்று அடிவயிற்றைக் கலவரப்படுத்தி பிறகு ‘அப்பாடா’ போடவைக்கின்றன. ஆனாலும் அந்த டபுள்மீனிங் சமாச்சார காட்சி அமைப்புகளையெல்லாம் பேய்கள் கூட ஒத்துக்கொள்ளாது.

சந்தானம், ’ஹீரோ குதிரை’யில் இருந்து இறங்கி, காமெடி குதிரையில் ஏறவேண்டிய உண்மையை புரிந்துகொண்டால் நல்லது. ஹீரோயிஸத்தைக் காட்டியாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், எல்லோருக்கும் காமெடி சந்தானம், திடீர்திடீரென்று கட்டாய விடுப்பில் சென்றுவிடுகிறார்.

‘படத்துல ஹீரோயின் அப்பப்ப வந்துட்டுப் போனா போதும்’ என முடிவு செய்து, நாயகியை களமிறக்கியிருக்கிறார்கள். அவரும் வந்துவந்து போகிறார். மலையாள மாந்த்ரீகவாதி, பெண் சாமியார் ஊர்வசி என வைத்துக்கொண்டு மிகப்பெரிய காமெடிப் பட்டாசை புஸ்வாணமாக்கிவிட்டார்கள். தன் நடிப்பால், ஊர்வசி கொஞ்சம் பேலன்ஸ் செய்துவிடுகிறார்.

மற்றபடி சந்தானத்துக்கு இணையாக ஸ்கோர் செய்பவர் நான்கடவுள் ராஜேந்திரன் தான். ரொம்ப நாளைக்குப் பிறகு அவருக்கு நல்ல கேரக்டர். நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஐயப்ப விரதம், பிறகு சரக்கு, தடாலடி என காட்டியிருப்பதும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏரியாவில் செய்யும் அட்டூழியங்கள், நமக்கே எரிச்சலாகிறது. அந்தக் காட்சிகள், காமெடிக்காகவா, கேரக்டரைஸேஷன் சொல்லவா? ரெண்டுமே என்றாலும் சகிக்கவில்லை.

அந்த ஆங்கிலேயர் காலத்து ப்ளாஷ்பேக், ஓலைச்சுவடி, மந்திரம், ஐ லவ் யூ... இவை எதுவுமே எதுவும் செய்யவில்லை. துண்டுதுண்டாக சில காட்சிகள், சில வசனங்கள். மற்றபடி, ’இது எதுமாதிரியான படம்’ என்பதில் எல்லாமே கம்மியாக இருக்கிறது. பாயசத்துக்கு சர்க்கரையும் கம்மி. காரத்துக்கு மிளகாயும் குறைவு என்பது போல், காமெடியும் இல்லாமல், பேய் பயமும் இல்லாமல் அவ்வளவு ஏன்... கதையும் இல்லாமல் ரொம்பவே தவித்து தள்ளாடி அல்லாடுகிறது தில்லுக்கு துட்டு.

படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் தீபக்குமார். மற்றபடி பேயைப் போலவே இசையும் மிரட்டியெடுக்கவில்லை. ஷபீர் இசை ஏனோதானோ ரகம். படத்தை சின்னப்படமாக அளவு கம்மியாக எடுத்திருப்பதும் பொசுக்பொசுக்கென்று பாட்டு, டூயட் என்று இல்லாமல் வைத்திருப்பதும் இயக்குநர் ராம்பாலாவுக்கு நன்றியைச் சொல்லியே ஆகவேண்டும்.

அடுத்த முறையாவது, பேயை நம்பாமல்,தில்லான கதையை நம்புவார்கள் என்று நம்புவோமாக!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close