[X] Close

’பேரன்பு’ - தாயுமானவன்! - விமர்சனம்


peranbu-vimarsanam

பேரன்பு - மம்முட்டி, சாதனா

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Feb, 2019 14:28 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மூளை முடக்குவாத பெண் குழந்தையுடன் தந்தையானவனை, இந்த வாழ்க்கை துரத்துவதை, வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மம்முட்டி, இந்தியா திரும்புகிறார். அங்கே, மூளை முடக்குவாதம் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளை, அதுவரை கவனித்து வந்த மனைவி, வேறொருவருடன் எங்கோ ஓடிவிடுகிறார். உறவுகள் கூட, மகளுடன் இருக்கமுடியாத நிலையில், மனிதர்களற்ற இடம் தேடி மகளுடன் வருகிறார். மகளைச் சுற்றிய உலகில் வாழும் மம்முட்டிக்கு, என்னென்ன சங்கடங்கள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், தவிப்புகள் என்று ஏற்பட்டதை அத்தியாயம் அத்தியாயமாகச் சொல்கிறது பேரன்பு.

தமிழ் சினிமாவில் இது தந்தை மகள் காலம். ஏற்கெனவே, தன்னுடைய ‘தங்க மீன்கள்’ படத்தில் தந்தைமையின் உணர்வுகளையும் மகளின் நெக்குருகிய பாசத்தையும் உணர்த்தினார். சமீபத்தில், கமர்ஷியல் சந்தையில், அப்பா - மகள் பாசத்தை வைத்துக்கொண்டு, சென்டிமென்ட் தூவிய அஜித்தின் விஸ்வாசம் பார்த்தே, பதறிக் கதறினார்கள் ரசிகர்கள். இப்போது அதே ராம்... அதே தந்தை - மகள் உறவு. ஆனால், பதைபதைக்கச் செய்துவிடுகிற வேறொரு களம்.

உடற்குறைபாடு, மூளைக்குறைபாடு கொண்ட குழந்தைகளை வைத்துக்கொண்டிருக்கும் குடும்பத்தையும் அவர்களையும் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். அவர்களின் வலியையும் வேதனையையும் அயர்ச்சியையும் துக்கத்தையும் இதுவரை, தமிழ் சினிமா பதிவு செய்ததே இல்லை. ராம், துணிந்தும் உணர்ந்தும் சொல்லியிருக்கிறார்.

’என் பொண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டா’ என்கிற அவமானம். ‘உங்க பொண்ணோட அலறல் எங்களுக்கு பிபி ஏத்துது. வீட்டை காலி பண்ணுங்க’ என்று விரட்டியடிக்காத குறையாகச் சொல்லும் போது ஏற்படுகிற இயலாமை, கொடைக்கானல் மலையில் தனியே ஒரு வீட்டை வாங்கி, மகளுடன் நிம்மதியாய் இருக்கலாம் என்றால், ‘கூட அஞ்சு தரோம். வீட்டை எழுதிக்கொடுத்திட்டுப் போ’ என்று அடிக்கவும் உதைக்கவும் செய்கிற ரியல் எஸ்டேட் திருடர்களால் நேருகிற நெருக்கடி. மகளைப் பாசத்துடன் பார்த்துக்கொள்கிற அஞ்சலி மீது உள்ளே நெகிழ்கிற காதல், பிறகான நயவஞ்சகம், பணம் சம்பாதிக்க சென்னை வரும் தருணம், லாட்ஜில் உள்ள சிக்கல்கள், ஹோம் செய்யும் குளறுபடிகள், இத்தனையும் தாண்டி மூளை முடக்குவாத மகளுக்குள் இருக்கிற இயல்பான ஆசைகள், உணர்ச்சிகள் என எல்லாப் பக்கமும் இருந்து சிந்தித்து படைத்து, நம்மையெல்லாம் சிந்திக்க வைத்திருக்கிற இயக்குநர் ராமின் கைகளுக்கு சிவக்கச் சிவக்க, வலிக்க வலிக்க கைகுலுக்கிக்கொண்டே இருக்கலாம்.

தந்தைமையைத் தாங்கியபடியே சுமந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை மம்முட்டியைத் தவிர வேறு எவருமே வாழ்ந்துகாட்டிவிட முடியாது. ஒரு அசைவு, ஓர் பார்வை, சின்னதான முகம் திருப்பல் என பக்கம்பக்கமாகச் சொல்லி வசனம் பேசி புரிய வைப்பதை, சின்னச் சின்ன அசைவுகளில் நம்மை அசைத்துப்பார்த்துவிடுகிறார் மம்முட்டி.

’தங்கமீன்கள்’ சாதனா, இதில் பாய்ந்திருப்பது பன்னெடும் தொலைவுப் பாய்ச்சல். பெண்ணுக்கான உணர்ச்சிகள் வரும்போது, அப்பாவைப் புறக்கணிப்பதும் மாதாந்திர உதவிக்கு வரும் அப்பாவை, தள்ளிப்போகச் சொல்வதும் கொன்றே போட்டுவிடும் நம்மை!

மம்முட்டி, தன் வாழ்க்கையை, மகளின் நிலையை கதையாக, அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்துச் சொல்லுகிறார். ஒவ்வொரு அத்தியாயமும் உணர்த்துவதாக திரைக்கதை நகர்த்துவதும் அதனூடே மனிதர்களுக்கான விஷயங்களையும் அன்புடனும் நேசிப்புடனும் சொல்வது... பேரன்பின் உயிர்!

வர்த்தக சமரசம் இல்லை. கதைக்கு மம்முட்டியும் சாதனாவும் தவிர, எவரும் அவசியமில்லை. ஆகவே, தான் சொல்ல நினைத்ததை, சுருக்கென்றும் நறுக்கென்றும் ஜிகினாக்கள் சொன்னதில்தான், பேரன்பின் பிரமாண்டம் வியாபித்திருக்கிறது.

மம்முட்டியை ஏமாற்றிய அஞ்சலி, ‘இப்பவாவது நாங்க ஏன் ஏமாத்தினோம்னு தெரிஞ்சிக்கங்களேன்’ என்று கெஞ்சுவதும், ‘உங்க குழந்தை நல்லா இருக்கு. ஆனாலும் என்னை ஏமாத்தி பணம் சம்பாதிக்கற அளவுக்கு உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. பரவாயில்ல’ என்று சொல்லிவிட்டு மம்முட்டி நகர்வது அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் உயர்த்திவிடுகிறது.

ஒருகட்டத்தில், முன்னாள் மனைவியைப் பார்த்து ‘குழந்தையப் பாத்துக்க திரும்ப வந்துரு’ என்று கேட்கச் செல்கிறார் மம்முட்டி. ‘ஸ்டெல்லா, சீக்கிரமா ஒரு டீ’ என்கிறார் இந்நாள் கணவர். ‘தங்கம் பேரை ஸ்டெல்லான்னு மாத்திட்டோம்’ என்கிறார். உள்ளே குழந்தையின் சத்தம். ‘எங்க குழந்தைதான். பெண் குழந்தை. எந்தக் குறையும் இல்லாம பொறந்திருக்கு. போன வருஷம்தான் பொறந்துச்சு’ என்கிறார். மம்முட்டி கிளம்புகிறார். ‘டீ சாப்பிட்டுப் போங்க’ என்று கணவர் சொல்ல, விருட்டென்று எடுத்து தடக்கென்று குடித்துவிட்டு நகருகிற காட்சி, மனதே கனக்கும்.

தாய் என்பவள், கருணையே உருவானவள், அன்பே வடிவானவள் என்கிற விஷயத்தையெல்லாம் உடைத்து, உண்மையை பொளேரெனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம். அஞ்சலியின் நடிப்பும் அழகு. திருநங்கைகளின் உணர்வுகளை துல்லியமாகப் பதிவு செய்திருப்பது அந்த அன்பும் கவிதை.

படத்தை பலமாக்கி, இயக்குநர் ராம் தந்திருக்க, மம்முட்டியும் சாதனாவும் அதை செவ்வனே தோளில் சுமந்திருக்கிறார்கள். மொத்தப் படத்தையும், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தன்னுடைய கேமிராவிலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா தன் பின்னணி இசையாலும் படத்தைத் தாங்கிப் பிடித்து, நமக்குள் கடத்திவிடுகின்றனர். அப்பா இளையராஜாவைப் போலவே, பல இடங்களில் நிசப்தத்ததையே இசையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இயற்கை அதிசயமானது, அற்புதமானது, புதிரானது, கொடூரமானது, பேரன்பு கொண்டது என்று ஒவ்வொரு அத்தியாயங்களாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம். எல்லா அத்தியாயங்களிலும் பேரன்பு கொண்ட தந்தையாய் ஒளிர்ந்திருக்கும் மம்முட்டி, தாயுமானவனாகத் திகழ்ந்து, நமக்குள் வியாபித்துவிடுகிறார்.

ராம், மம்முட்டி, சாதனா... விருதுகளுக்குத் தயாராகுங்கள்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close