[X] Close

’வந்தா அத்தையோடதான் வருவேன்’ - விமர்சனம்


vandha-rajavadhan-varuven

வந்தா ராஜாவாதான் வருவேன்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Feb, 2019 11:05 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

’வந்தா ராஜாவாதான் வருவேன்’ - விமர்சனம்

காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டதால் பிரிந்து சென்ற மகளின் ஏக்கத்தில் வாடுகிறார் நாசர். தன் தாத்தாவின் ஆசையை நிறிவேற்றக் கிளம்பும் பேரன் சிம்பு, அத்தையை அழைத்து வந்தாரா என்பதுதான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்.

வெளிநாட்டில் உள்ள மிக முக்கியமான, பிரமாண்டமான நிறுவனத்தின் முதலாளி நாசர். தன் மகள் ரம்யாகிருஷ்ணன், பிரபுவைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டதால் பிரிகிறார்கள். ’எனக்கு 80வது பிறந்தநாள் வரப்போகுது. அதுக்கு நீ தரும் பரிசு, உன் அத்தையை இங்கே கூட்டிக்கிட்டு வரணும். அவளை நான் பாக்கணும். செய்வியா?’ என்று தாத்தா நாசர், பேரன் சிம்புவிடம் கேட்கிறார்.

இதையடுத்து தன் பரிவாரங்களுடன் சென்னைக்கு வருகிறார். அத்தையின் வீட்டுக்குள் கார் டிரைவராக உள்ளே நுழைகிறார். அத்தைக்கு இரண்டு மகள்கள். இவர்களில் யாரைக் காதலிக்கிறார். அத்தையின் மனதில் இடம் பிடித்தாரா, அத்தைக்கு இந்த விஷயமெல்லாம் தெரிகிறதா, அத்தைக்கு இருக்கிற சிக்கல்களும் பிரச்சினைகளும் என்னென்ன, அதையெல்லாம் சிம்பு தீர்த்து வைப்பது எப்படி, அப்பாவைப் பார்க்க மனம் மாறினாரா ரம்யாகிருஷ்ணன் என்பதையெல்லாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் திரைக்கதை.

’அத்தாரண்டிகி தாரேதி’ எனும் தெலுங்குப் படத்தை ரீமேக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து, கூடுமானவரை சுவைகூட்ட முயன்றிருக்கிறார். அதேசமயம், ‘நீங்களே ஒரு கதை பண்ணுங்க’ என்று சொல்லியிருந்தால், புகுந்து விளையாடியிருப்பார் சுந்தர்.சி. மேலும் சிம்புவுடன் சேருகிற முதல் படம் என்பதால், இன்னும் வெளுத்துக்கட்டியிருப்பார்.

சுந்தர்.சி. படம் போலவே, இதிலும் ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள். பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், சுமன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், ராதாரவி, யோகி பாபு, மஹத், கெளதம், அபிஷேக், நான் கடவுள் ராஜேந்திரன், ராஜ்கபூர் என்று கல்யாண வீடு போல் ஏகப்பட்ட உறவுகள், எக்கச்சக்க கூட்டங்கள். கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் என இரண்டு நாயகிகள். படம் முழுக்கவே ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிரம்பி வழிகிறார்கள் நடிகர்கள்.

இந்தக் கூட்டத்தில் தப்பித் தெரிபவரும் நம்மைச் சிரிக்க வைப்பவரும் ரோபோ சங்கர்தான். வில்லன்களே இல்லாத இந்தப் படத்தை, காமெடியாலும் செண்டிமெண்ட்டாலும் தூக்கி நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் செய்த காமெடியும் சுமார்தான். சொல்லவந்த சென்டிமெண்ட் காட்சிகளும் நெகிழப்பண்ணவில்லை என்பதுதான் படத்தின் மைனஸ்.

படத்தில் சிம்புதான் எல்லாமே. மனிதர் தன் கேரக்டரை அசால்ட்டாக செய்து அப்ளாஸை அள்ளுகிறார். தானே தன்னை கலாய்த்துக்கொள்வது என்பது ஒருவகை. அதிலும் அவரின் வாழ்வியல் நடைமுறைகளையெல்லாம் வைத்து, டயலாக் வருவதும், அவரே தன்னை கலாய்த்துக்கொள்வதும் செம. ‘பேசாம நான் நடிக்கப் போயிடட்டுமா?’ என்று சிம்பு கேட்பார். ‘போலாம். ஆனா ஷூட்டிங்குக்கு கரெக்ட் டயத்துக்குப் போகணும்” என்று விடிவி கணேஷ் சொல்ல, ‘அது நம்மளால முடியாது’ என்பார்.

’எனக்கா ரெட் கார்டு போடுறீங்க’ என்பார். அந்த ஒத்தை வசனம் போதாது என்று ரெட்கார்டை வைத்து ஒரு பாடலே போட்டுவிடுகிறார்கள். ‘எல்லாரோட லவ்வையும் சேர்த்துவைக்கறேன். நம்ம லவ்வை சேர்த்து வைக்க யாருமே இல்லை’ என்றொரு டயலாக். ‘நம்பிக் கெட்டவங்க யாருமே இல்ல, நம்பாம கெட்டவங்க நிறைய பேரு’ என்று இன்னொரு வசனம். ‘நீங்க விரல்வித்தைக்காரர்னு தெரியும்’ என்றும் ‘எவ்ளோ நாளாச்சு இப்படி பஞ்ச் டயலாக் பேசி...’ என்றும் வசனங்கள், கைத்தட்ட வைக்கின்றன. சிம்புவின் ரசிகர்களை, செம குஷியாக்கிவிட்டார் இயக்குநர் சுந்தர்.சி.

தமிழ் சினிமா இலக்கணப்படி கேத்ரின் தெரசாவும் மேகா ஆகாஷும் வந்துபோகிறார்கள். பிரபுவுக்கு ஒரு போஸ்ட்கார்டு அளவு வசனங்கள்தான். இரண்டு நிமிட விளம்பரம் போல காட்சிகள்தான். ரம்யாகிருஷ்ணன் தான் சிம்புவின் அத்தை. அவரை அழைத்துச் செல்லத்தான், அவரே இங்கு வந்திருக்கிறார். எனவே, அத்தைக்கும் மருமகப்பிள்ளைக்குமான காட்சிகள் இன்னும் சுவையாகவும் கனமாகவும் இருந்திருக்கலாம்.

வழக்கம் போல், கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு (கோபி அமர்நாத்) கைகொடுத்திருக்கிறது. ஹிப் பாப் தமிழாவின் பாடல்கள் பரவாயில்லை. ஆனால்... தடக்தடக்கென பாடல்கள் என்பதைத் தவிர்த்திருக்கலாம்.  யோகிபாபுவின் வழக்கமான டைமிங் வசனங்கள்  நன்றாகத்தான் இருக்கின்றன. அந்த அகலிகை, இந்திரன் டிராமா ஒத்திகைக் காட்சிகள், ஏகத்துக்கும் ஸ்பீடு பிரேக்கர் வேலையைப் பார்க்கிறது. ‘அது ஒர்க் அவுட்டாகும்’ என நினைத்திருக்கிறார்கள். எடுபடவில்லை.

அதேபோல், ராதாரவி வீட்டுக்குச் சென்று மாப்பிள்ளை மஹத்தை தூக்கிக்கொண்டு வரவேண்டும். கல்யாண வீடு என்றதும் சுந்தர்.சி.க்கே உண்டான கல்யாண வீடு களேபரங்களும் காமெடிகளும் நம் நினைவுக்கு வந்து, நாம் சிரிப்பதற்குத் தயாராகும் போது, அந்தக் காட்சி வேறுவிதமாக முடிந்துவிடுவது பெரிய ஏமாற்றம்தான் ரசிகர்களுக்கு! செல்வபாரதியின் வசனங்கள், பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றன.  

படத்தில், அத்தை ரம்யாகிருஷ்ணனும் மருமகன் சிம்புவும் சந்தித்துக்கொள்ளும் போது பேசவே செய்யாமல் அமைதி காக்கிறார் சிம்பு. இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து, க்ளைமாக்ஸ் காட்சியில், பக்கம்பக்கமாக வசனம் பேசுகிறார். கொஞ்சம் சுந்தர்.சி பாணி, கொஞ்சம் சிம்பு ஸ்டைல் என கலந்துகட்டி வந்திருந்தால், வந்தா அத்தையோடுதான் வருவேன் என்கிற கான்செப்ட், நம் மனதில் ராஜா மாதிரி சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும்.

எதுஎப்படியோ... சிம்புவுக்கு இதுவொரு ஜாலிகேலியான காமெடிப் படம். கொஞ்சம் உடம்பைக் குறைங்க பாஸு!

.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close