[X] Close

 ரெண்டு பொண்ணுங்களுக்கு லவ்லெட்டர்; மெஹந்தி சர்க்கஸ் விழாவில் பாக்யராஜ் ருசிகரம்


mehandhi-circus-bhagyaraj

கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jan, 2019 19:06 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஒரே சமயத்துல ரெண்டு பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் எழுதி வைச்சுக் கொடுத்தேன் என்று தன்னுடைய கோயம்புத்தூர் அனுபவங்களை, இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெஹந்தி சர்க்கஸ். இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் ராஜூமுருகன் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசியதாவது:

நான் எப்பவுமே மனம் விட்டுப் பேசிருவேன். லவ் பண்றதுங்கறது எப்பவுமே உண்டு. ஒரு அழகான பொண்ணைப் பாத்தா, சின்னதா ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்யும்.

முந்தானை முடிச்சு மாதிரி படத்துக்கோ அந்த 7 நாட்கள் மாதிரி படத்துக்கோ, மெளனகீதங்கள் மாதிரி படத்துக்கோ ஸ்டோரி டிஸ்கஷன்ல ஏதாவது சீன் சொல்லுங்கய்யான்னு சொன்னா, அஸிஸ்டெண்ட்டெல்லாம் மோட்டுவளையைப் பாத்து யோசிப்பாங்க. ஆனா இன்று போய் நாளை வா படத்துக்கு சீன் சொல்லச் சொன்னப்போ, ஒவ்வொருத்தனும் சீன்சீனா கொட்டினாங்க. அனுபவம்.

அந்த அனுபவம் எனக்கும் உண்டு. அப்படித்தான், கோயம்புத்தூர்ல இருந்தப்ப, அதாவது குறிப்பிட்ட ஒரு ஏரியாவுக்குப் போய், சைட் அடிக்கப் போவோம். அந்த ஏரியால இருக்கற ஒரு பொண்ணைப் பாக்கப் போனேன். டக்குன்னெல்லாம் வந்துடாது பொண்ணுங்க. காத்திருக்கணும்.

அவங்க வீட்டுக்கு எதிர்ல இருந்த பெட்டிக்கடைல போய் நின்னுக்கிட்டேன். பாத்தா, அந்தக் கடைல ஒருபொண்ணு. ‘ஒரு அசோகா பாக்கு’ன்னு காசை நீட்டினேன். அங்கே இருக்கற ஒரு கட்டைல வைக்கச் சொல்லுச்சு அந்தப் பொண்ணு.

இப்படி அசோகா கேக்கறது வழக்கமாச்சு. ஒருகட்டத்துல ரெண்டுபொண்ணுங்களுக்கும் லவ் லெட்டர் கொடுப்போம்னு முடிவு பண்ணினேன். அந்த சமயத்துல ஒருநாள், நான் கடைக்குப் போய் நின்னு, காசை நீட்டினதுமே, அந்தப் பொண்ணு அசோகா பாக்கு எடுத்துக் கொடுத்துச்சு. எனக்கு அசோகா வேணாம், புகையிலைதான் வேணும்னு சொன்னேன். உடனே புகையிலையைக் கொடுத்துச்சு. ‘இல்ல, புகையிலைப் பழக்கமெல்லாம் இல்ல. எதுனா ஆகிடப்போவுது. அசோகா பாக்கே கொடுங்க’ன்னு சொன்னேன்.

அந்த சமயம் பாத்து, ரெடியா வைச்சிருந்த லவ்லெட்டரை எட்டா, நாலா, ரெண்டா மடிச்சு, இத்துனூண்டு சைஸ்ல வைச்சு, அந்தக் கட்டைல வைச்சேன். லெட்டரைப் பாத்துட்டு டக்குன்னு அந்தப் பொண்ணு கையை எடுத்துருச்சு.

அப்போ, உள்ளேருந்து அவங்க அம்மா குரல் கொடுத்துக்கிட்டே வந்தாங்க. வசமா மாட்டினோம்டான்னு நினைச்சு பதறிட்டேன். உடனே அந்தப் பொண்ணு, கட்டைல இருந்த லெட்டரை எடுத்து, சட்டுன்னு தன்னோட ஜாக்கெட்டுக்குள்ளே வைச்சிக்கிச்சு.

அந்தப் பொண்ணு, அப்படிச் செஞ்சதுலயே, அந்தப் பொண்ணும் நம்மளை லவ் பண்ணுதுன்னு தெரிஞ்சிருச்சு’’

இவ்வாறு பாக்யராஜ் சொல்ல, விழாவுக்கு வந்திருந்த எல்லோருமே கைத்தட்டி ரசித்துச் சிரித்தார்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close