[X] Close

கே.பாலாஜிக்குப் பிடித்த ஜனவரி 26ம் தேதி!


kbalaji

கே.பாலாஜி

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jan, 2019 11:43 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

திரையுலகில் தன்னுடைய வாழ்க்கையை ஒரு புரொடக்‌ஷன் மேனேஜராகத் தொடங்கி, பிறகு நடிப்பில் இறங்கி, தயாரிப்பாளராக வளர்ந்து உயர்ந்தவர் கே.பாலாஜி. அந்தக் காலத்தில் நரசு ஸ்டூடியோவில் புரொடக்‌ஷன் மேனேஜர் வேலை. அதுதான், பின்னாளில், மிகச்சிறந்த தயாரிப்பாளராக்கியது அவரை.

கம்பீரச் சிங்கம், ஈஸ்ட்மென் கலர், மிகப்பெரிய சுழல் நாற்காலியில் இருந்து பைப் சிகரெட் பிடித்துக்கொண்டே திரும்பும் கே.பாலாஜியையும் அவரின் படங்களையும் மறந்துவிடமுடியுமா என்ன?

அதேபோல், ராஜா, ராதா என்று ஹீரோ ஹீரோயின்களுக்குப் பெயர் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கே.பாலாஜி.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன் என பலருடன் நடித்திருந்தார். ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகப்பெருமானாக, சிறுவனாக அறிமுகமானார். அடுத்தடுத்து, புரொடக்‌ஷன் வேலை, நடிப்பு என பலதும் கற்றார்.

சிவாஜியின் நடிப்பின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு பாலாஜிக்கு. மேலும் நல்ல நண்பரும் கூட! சிவாஜியும் பாலாஜியும் வாடாபோடா நண்பர்கள் என்று சொல்லுவார்கள்.  

கே.பாலாஜி நடிக்க வருவதற்கு ஜெமினி கணேசனும் தயாரிப்பாளராக வருவதற்கு சிவாஜி கணேசனும் காரணமாக இருந்தார்கள். 66ம் வருடம் ஜெமினியை வைத்து அண்ணாவின் ஆசை என்று முதல் படத்தைத் தயாரித்தார். ஆனாலும் அடுத்தடுத்து சிவாஜியை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக அமைந்தது.

சிவாஜியை வைத்து 15க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கும் கே.பாலாஜி, கமல், ரஜினியை வைத்தும் தயாரித்திருக்கிறார். ரஜினிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்த பில்லா படம், கே.பாலாஜியின் தயாரிப்பில் ரஜினி நடித்த முதல் படம். அதேபோல் கமலின் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய முக்கிய படங்களின் பட்டியலில் வாழ்வே மாயம் உண்டு. இதுதான் கே.பாலாஜியின் தயாரிப்பில், கமல் நடித்த முதல் படம்.

சிவாஜியும் கே.பாலாஜியும் இணைந்த ராஜா, உனக்காக நான், தீபம், நீதிபதி, பந்தம், மருமகள், குடும்பம் ஒரு கோவில், ரஜினி நடித்த பில்லா, கமல் நடித்த வாழ்வேமாயம் என பல படங்கள், ஜனவரி 26ம் தேதி அன்றே ரிலீசாகியுள்ளன.

80ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரஜினியின் பில்லா படம் வெளியானது. ஸ்ரீப்ரியா, மனோகர், தேங்காய் சீனிவாசன், பிரவீணா முதலானோர் நடித்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அடுத்த ஆண்டான 81ம் ஆண்டில், ஜனவரி 26ம் தேதி ரஜினி நடித்த தீ வெளியானது. ரஜினி, சுமன், ஸ்ரீப்ரியா, செளகார்ஜானகி, ஏவி.எம்.ராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள். இதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதேபோல், கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர், மனோரமா, அம்பிகா என பலரும் நடித்த வாழ்வேமாயம் ஜனவரி 26ம் தேதி 82ம் ஆண்டில் வெளியானது. 250 நாட்களைக் கடந்து ஓடிய இந்தப் படத்துக்கு கங்கைஅமரன் இசையமைத்திருந்தார்.

திருவிளையாடல், தங்கப்பதக்கம், ஞானஒளி முதலான படங்கள் ஒலிச்சித்திரத்துக்குப் பெயர் பெற்ற படங்கள். அந்தப் பட்டியலில் இடம்பிடித்த, அந்த அளவுக்கு வசனங்களால் நிறைந்த மறக்கவே முடியாத படமாக அமைந்தது விதி திரைப்படம். மோகன், பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா, ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன் முதலானோர் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இந்தப் படம், வசனத்துக்காகவே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்தப் படம் 84ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியானது.

சரி... அதென்ன ஜனவரி 26 ரிலீஸ் தேதி?

கே.பாலாஜியின் திருமண நாள் அது. கே.பாலாஜிக்கும் அவரின் மனைவியான ஆனந்தவல்லி பாலாஜிக்கும் மறக்கமுடியாத நாள். தன் வாழ்வில் ரொம்பவே ராசியான நாள் என்று ஜனவரி 26ம் தேதியைச் சொல்லிக்கொண்டே இருப்பாராம் பாலாஜி.

அதனால், ஜனவரி 26ம் தேதியன்று, படத்தை ரிலிஸ் செய்ய வேண்டும் என்கிற திட்டமிடலுடன் படத்தை ஆரம்பித்து, அதன்படியே ரிலீஸ் செய்வாராம்.

பெரும்பாலும் ரீமேக் படங்கள்தான். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ரோல்மாடலாகச் சொல்லுவது தேவர்பிலிம்ஸ் சின்னப்பா தேவரைத்தான். படத்தை ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் தேதியை சொல்வது முதல், படத்தின் ஊழியர்களுக்கு பத்துபைசா கூட சம்பள பாக்கி வைக்காமல் இருப்பது வரை, சின்னப்பா தேவரின் வழியில், சிறந்த தயாரிப்பாளர் என்று எல்லோரிடமும் நல்லபெயர் பெற்றார் கே.பாலாஜி.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close