[X] Close

காமெடி நாயகி ஊர்வசிக்கு ஹேப்பி பர்த்டே!


oorvasi-birthday

மைக்கேல் மதன காமராஜன்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jan, 2019 20:09 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

முதல் படத்திலேயே மக்களின் மனங்களில் இடம் பிடிப்பது என்பது மிகக் கடினம். அபூர்வம். அப்படியொரு கடினமான விஷயத்தை, அபூர்வமானதொரு விஷயத்தை, மிக அழகாக நடித்து மனம் கவர்ந்தவர்கள் வெகு குறைவுதான். அந்தக் குறைவானவர்களில் நிறைவானவர்… ஊர்வசி.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஊர்வசி. அப்படியொரு வாய்ப்பு, அதுவும் முதல் வாய்ப்பு வரும் என ஊர்வசி, கனவு கூட கண்டிருக்கமாட்டார். ஏவிஎம் தயாரிக்கும் பிரமாண்டமான படம்தான் ஊர்வசியின் முதல் படம். அதுமட்டுமா? இவரின் கேரக்டர், அவ்வளவு கனம் கொண்ட, பார்ப்பவர்களையெல்லாம் ஈர்த்துவிடுகிற கனமான, கச்சிதமான கதாபாத்திரம்.

அவ்வளவுதானா?

தன்னுடைய கதையாலும் திரைக்கதையாலும் வசனங்களாலும் நேர்த்தியான இயக்கத்தாலும் மிகப்பெரியதொரு இடத்தை திரையுலகிலும் மக்கள் மனங்களிலும் இன்றளவும் பிடித்திருக்கிற, திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் நாயகி வேடம். பாக்யராஜ் அறிமுகம் செய்த நடிகை எனும் பெயரே… அவருக்கான ஐஎஸ்ஐ முத்திரையாகவும் விசிட்டிங் கார்டாகவும் இருந்தது. அந்தப் படத்தை யாராலும் மறக்கவே முடியாது. அது… முந்தானைமுடிச்சு.

ஊர்நாட்டாமையின் மகளாக, சுட்டித்தனம் பண்ணும் பெண்ணாக, கையில் குழந்தையிடம் இருக்கிற பாக்யராஜைக் காதலித்து, பொய்யெல்லாம் சொல்லி, பொய் சத்தியமே செய்து, குழந்தையையே தாண்டி, அவரிடம் இருந்து அன்பு கிடைக்காதா என்று ஏங்கி மருகும் பரிமளம் கேரக்டர்… ஊர்வசியின் லைஃப்டைம் கேரக்டர். மிகப்பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பெரும்பாலும் இயக்குநர்கள் முதல் படத்தில் இவ்வளவு அழுத்தம் கொண்ட கதாபாத்திரங்களைத் தருவதற்கு யோசிப்பார்கள். ஆனால் ஊர்வசி விஷயத்தில், பாக்யராஜ் போட்ட கணக்கு தப்பவில்லை. முந்தானை முடிச்சு பரிமளம், ரசிக உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அடுத்து வந்த படங்களும் அடுத்தடுத்து வந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன என்றோ நல்லதொரு வாய்ப்பாக அமைந்தன என்றோ சொல்லிவிட முடியாதுதான்.

மோகனுடன் நடித்தார். பல படங்கள். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் முந்தானை முடிச்சு அளவுக்கு பேர் சொல்லவில்லை. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், கமலுடன் ஊர்வசி நடித்த அந்த ஒரு நிமிடம், கமலுக்கே தோல்விப்படமாகத்தான் அமைந்தது. ஆனால் அது பின்னாளில் ஊர்வசியின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுவதற்கான அடித்தளமிட்டது.

இந்தப் படத்தில் ஊர்வசியின் நடிப்பைக் கண்ட கமல், பின்னாளில் பல வருடங்கள் கழித்து, ஊர்வசியை பயன்படுத்திக் கொண்டார். இப்போது அந்தக் கேரக்டருக்கு ஊர்வசியைத் தவிர யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் கூட, இன்னொரு நடிகை நம்முடைய கற்பனைக்குக் கூட வரமாட்டார். அந்த அளவுக்கு ராட்சஷத்தனமான நடிப்பை அசால்ட் பண்ணியிருந்தார் ஊர்வசி.

முந்தானை முடிச்சு போலவே அந்தப் பரிமளம் போலவே, இந்தப் படத்தின் கேரக்டரும் அந்தப் பெயரும் இன்றைக்கும் பிரபலம். அந்தப் பெயர்… திருபு… திரிபுரசுந்தரி. நான்கு கமலில் காமேஸ்வரன் கமல்தான் பட்டையைக் கிளப்பியிருப்பார். அந்த நான்கு கமலும் வாங்கிய மொத்த அப்ளாஸையும் திரிபுரசுந்தரி ஊர்வசி, நம்மிடம் இருந்து வாங்கிக்கொண்டிருப்பார்.

அச்சு அசல் பிராமணப் பெண்ணாக வளைய வந்திருப்பார். ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் திருட்டுப்பாட்டி என்று தவித்து மருகி காமெடியில் அதகளம் பண்ணியிருப்பார் ஊர்வசி. மைக்கேல் மதன காமராஜன் மூலம், தனக்கே தெரியாத இன்னொரு திறமையை கமல் மூலம் கண்டுகொண்டார் ஊர்வசி. ’என்னது…’ எது…’, ‘கட்டிண்டிருக்கோம்’ என்பாரே. தியேட்டரே வெடித்துச் சிரிக்கும்.

‘பல்செட்டைத் திருடிட்டுவந்துட்டா பாட்டி. அதை வைக்கப் போனேனே. தூங்கிண்டிருந்தவர் பக்கத்துல பல்லை வைச்சேனா. அவர் திரும்பினாரா. பல் பட்டு, ஒரே சத்தம்’ என்று சொல்லிவிட்டு, கெக்கேக்கெக்கே என ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பாரே… காமெடியின் உச்சம் தொட்ட நடிகை ஊர்வசிதான்!

மீண்டும் கமலின் மகளிர் மட்டும் படத்தில் இன்னொரு வாய்ப்பு. ஆணாதிக்க உலகில், ஜொள்ளு மேனேஜரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அந்தக் கேரக்டரெல்லாம் ஊர்வசிக்கு, மஸ்கோத் அல்வா சாப்பிடுவது மாதிரி!

படம் முழுக்கவே, மொத்த காமெடிப் படத்தையும் ஊர்வசிதான் தோளில் சுமந்துகொண்டே சென்றிருப்பார். சொல்லப்போனால், கமல் நடிக்கும் படங்களில், கமலின் வேலை அது. இங்கே… ஊர்வசியிடம் அந்த வேலையை ஒப்படைத்திருந்தார் கமல். வெளுத்தெடுத்திருந்தார் ஊர்வசி.

ஒரு காட்சியில் நகம் கடித்துக்கொண்டிருப்பார் ஊர்வசி. என்ன என்பார் ரேவதி. ‘இல்லப்பா, என் ப்ரெண்ட் ஒருத்தி யோசிக்கும் போதெல்லாம் நகம் கடிச்சிட்டிருப்பார். நான் நகம் கடிச்சா, எதுனா யோசனை வருதானு பாக்கறேன்’ என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லுவார் ஊர்வசி. அந்த முகபாவத்துக்கு நிகரான நடிகை இன்று வரைக்கும் கோடம்பாக்கத்தில் இல்லை.

இந்த மகளிர் மட்டும் காமெடி கலாட்டா. இப்போது வந்த மகளிர்மட்டும் உணர்ச்சிக்குவியல். அவ்வளவு உணர்வுபூர்வமாகவும் நடித்து, படம் பார்க்கிற பெண்களை, அவரவர் நினைவுகளில் மூழ்கச் செய்திருப்பார் ஊர்வசி. இன்றைக்கும் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையை பதித்துக்கொண்டே இருக்கிறார் ஊர்வசி. 

இப்படி பல படங்கள். பல கேரக்டர்கள். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் ஊதித்தள்ளிவிடுவார் ஊர்வசி. அப்பேர்ப்பட்ட உன்னத நடிகை ஊர்வசிக்கு, திருபு என்கிற திரிபுரசுந்தரிக்கு… இன்று (25.1.19) பிறந்தநாள்.

ஊர்வசி பட்டத்துக்குத் தகுதியான நடிகை ஊர்வசிக்கு மனம் கனிந்த வாழ்த்துகளைச் சொல்லுவோம். திருபு மேடம்… பரிமளம் மேடம்… ஊர்வசி மேடம்… ஹேப்பி பர்த்டே மேடம்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close