[X] Close

’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டும் கண்ணதாசனும்! - இளையராஜா ப்ளாஷ்பேக்


ilayaraaja-chidambaram

இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jan, 2019 11:20 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

நிறம் மாறாத பூக்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலை கவியரசு கண்ணதாசன் எப்படி எழுதினார், எந்த நேரத்தில் எழுதினார் என்பதையெல்லாம் இளையராஜா பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், சுதாகர், ராதிகா, விஜயன், ரதி முதலானோர் நடித்த படம் நிறம் மாறாத பூக்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எல்லாப் பாடல்களுமே இந்தப் படத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இன்றைக்கும் இந்தப் பாடல்களை இரவுகளில் கேட்கும் ரசிகர்கள் ஏராளம்.

இளையராஜா 75 எனும் பெயரில் அவரின் பிறந்தநாள், கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், சமீபத்தில் இளையராஜா 75 பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்டு இளையராஜா பேசும்போது கவியரசு கண்ணதாசன் குறித்து தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பொதுவாகவே., கவியரசு கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் காலையில் பத்துமணிக்கு மேல்தான் எழுந்திருப்பார். அவர் எழுந்திருக்கும் நேரம் எல்லோரும் அறிந்துவைத்திருப்பார்கள்.

ஒருமுறை, நிறம் மாறாத பூக்களுக்கு பாடல் கம்போஸிங் செய்து, ரிக்கார்டிங் செய்யவேண்டியிருந்தது. நான் எப்போதுமே காலை 7 மணிக்கெல்லாம் ரிக்கார்டிங் தியேட்டரில் இருப்பது வழக்கம்.

9 மணிக்கு மேல் எனக்கு பேக்கிரவுண்ட் ஸ்கோர் செய்யும் வேலைகள் இருந்தன. எனவே முதல்நாள் கவிஞரிடம், ‘அண்ணே, நாளைக்கி காலைல ஏழு மணிக்கெல்லாம் பாட்டு வேணும்ணே’ என்று கேட்டேன். ‘என்னய்யா... ஏழு மணிக்கு வரச்சொல்றே? அந்த டயத்துல நான் எந்திரிச்சிதே இல்லியேய்யா’ன்னு சொன்னார் கவிஞர்.

‘சரி, ஒரு ஒன்பது மணிக்கு பாட்டு தரலாமா?’ன்னு கேட்டார். ‘இல்லண்ணே. 9 மணிக்கு பேக்கிரவுண்ட் ஸ்கோர் ஒர்க் இருக்குண்ணே. அதான்... 7 மணிக்கு கொடுத்தா, பாட்டை முடிச்சிட்டு, அடுத்த ஒர்க்குக்குப் போயிருவேண்ணே’ன்னு தயங்கித்தயங்கி, சொன்னேன். ’சரிய்யா, 7 மணிக்கு வந்துடுறேன்’னு சொன்னார் கண்ணதாசன்.

மறுநாள். வழக்கம் போல, 7 மணிக்கெல்லாம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வந்துட்டேன். அது பாரதிராஜாவோட நிறம் மாறாத பூக்கள் படம். கொஞ்ச நேரத்துல கவிஞரும் வந்தார். பாரதிராஜா என்ன ஸீன்ங்கறதை கவிஞர்கிட்ட, விளக்கினார். ‘ராஜா, என்னப்பா டியூன்’னு கவிஞர் கேட்டார்.

‘தானன்னா... தனனன்னா...’ அப்படின்னு பாடிக்காட்டினேன்.

ஒருநிமிஷம் கூட யோசிக்கலை கவிஞர். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’னு சொன்னார். அடுத்த வரியா, ‘தானனான தானனே தானனே தானனே...’ன்னு முழுசா பாடினேன். ‘அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம்... நீங்களோ நாங்களோ... நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்’னு ஒவ்வொரு லைனா சொல்லச் சொல்ல, ஒவ்வொரு வார்த்தையா மளமளன்னு சொல்லிட்டே போனார் கவிஞர்.

பாத்தா, டியூனுக்கு தகுந்த மாதிரியும், கதைக்கு தகுந்தது மாதிரியும் அப்படியொரு பொருத்தத்துல இருக்கு, பாட்டு வரிகள். அதான் கவிஞர்.

‘என்ன, ஓகேயா. நான் கிளம்பலாமா?’ன்னு கேட்டு ஓகேண்ணேன்னு சொன்னதும் வரேன்யான்னு சொல்லிட்டு போனார் கவிஞர். அப்படி எழுதுற கவிஞரை, உலகத்துலயே பாக்கமுடியாது. அதான் கவிஞர் கண்ணதாசன்.

 என்று சொல்லிவிட்டு, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என அந்தப் பாடலின் நான்குவரிகளையும் பாடிக்காட்டினார் இளையராஜா.

மாணவர்கள், ஆர்ப்பரித்து கைத்தட்டிக் கொண்டாடினார்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close