[X] Close

கமல் அண்ணாச்சி! - எழுத்தாளர் சுகா நெகிழ்ச்சி


kamal-annachi

பாபநாசம் படப்பிடிப்பில் கமலுடன் சுகா

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Jan, 2019 12:22 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கமலை சார் என்று கூப்பிட்டாலும் கூட, என் மனதில் அவர் அண்ணாச்சியாகத்தான் அவரைப் பார்க்கிறேன் என எழுத்தாளர் சுகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எழுத்தாளரும் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளருமான சுகா, தனியா இணையதளச் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

கமல்ஹாசன் இருக்குமிடம், நகைச்சுவையால் சிரித்து மகிழும் இடமாக இருக்கும். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவர் கமல். நானும் அவருடன் ஓரிடத்தில் இருந்துவிட்டால், அந்த இடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமே இருக்காது. எவ்வளவு டென்ஷனாக வேலைகள் போய்க்கொண்டிருந்தாலும் அங்கே எல்லோரையும் தன் நகைச்சுவைத்திறனால், சிரிக்கவைத்துவிடுவார். டென்ஷனே இல்லாமல் வேலை பார்க்க வைத்துவிடுவார் கமல்.

கமல்ஹாசனை, நான் சார் என்றுதான் அழைப்பேன். ஆனால் என் மனதுக்குள் வேறு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அது கமல் அண்ணாச்சி. ஆமாம். என்னைப் பொருத்தவரை, கமல் சார் எனக்கு அண்ணாச்சி. என்னுடைய சகோதரராகத்தான் நான் நினைக்கிறேன். பழகிக் கொண்டிருக்கிறேன்.

அப்படி சகோதரராக நினைப்பதற்கு அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்கிற வயது மட்டும் காரணம் அல்ல. இன்னொரு காரணமும் இருக்கிறது.

நான் பாலுமகேந்திராவின் மாணவன். பாலுமகேந்திராவின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இயக்குநர் பாலுமகேந்திரா குடும்பத்தின் முதல் சகோதரர் கமல்ஹாசன். பாலுமகேந்திரா, முதன்முதலில் இயக்கிய கன்னடப் படமான கோகிலா படத்தின் நாயகன் கமல்தான்.

அதேபோல், மிகச்சிறந்த நடிகரான கமலுக்கு, முதன் முதலில் தேசிய விருது கிடைத்தது பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறைதான். அதனால்தான் பாலுமகேந்திரா குடும்பத்தின் மூத்த சகோதரர் என்று கமலைச் சொன்னேன்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் நடித்த சதிலீலாவதி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு பாபநாசம் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் வசனத்தை எழுதியிருந்தாலும் நெல்லை வட்டார பேச்சு வழக்கிறகு நான் உதவினேன். அதனால் முழு படப்பிடிப்பின் போதும் நான் உடனிருந்தேன்.

அதன் பிறகு கமல் தயாரித்து நடித்த தூங்காவனம் படத்துக்கு வசனம் எழுதினேன். இப்போது மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக இருக்கிறேன். ஆக, ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமாகவும் கமல் அண்ணாச்சியுடன் பயணித்துக்கொண்டே இருக்கிறேன்.

இவ்வாறு எழுத்தாளர் சுகா தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close