1997-ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘மின்சார கனவு’. அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளிவந்த முக்கோண காதல் கதைகளில் ஒரு சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி இணைந்து தோன்றும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். இவர்கள் கூட்டணி இத்திரைப்படத்துக்கு பெரும் பலமாக இருந்தது. தற்போது இந்த வெற்றிக் கூட்டணி, 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் தோன்றவுள்ளது.
தற்போது சிம்புவை வைத்து ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு, அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் அரவிந்த்சாமியும் பிரபுதேவாவும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கத் தெலுங்கில் பிரபலமான கிச்சா சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
பிரபுதேவா, 1990-களின் இறுதியில் பிரபலமான கதாநாயகனாக இருந்தாலும், மற்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். 1998-ல் கமலுடன் இணைந்து ‘காதலா காதலா’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்று பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி. நடிப்பில் தற்போது இருவரும் தங்களது 2-வது இன்னிங்க்ஸில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணையவுள்ள படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.