[X] Close

பாரதி கண்ணம்மா - அப்பவே அப்படி கதை


bharathi-kannamma-appave-appadi-kadhai

சேரனின் பாரதி கண்ணம்மா

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Jan, 2019 11:52 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

எத்தனையோ படங்கள் ஜாதி வெறியை பொளேரெனச் சொல்லியிருக்கின்றன. அதேபோல் எவ்வளவோ படங்களில், காதலும் சொல்லியிருக்கிறார்கள். காதலுடன் ஜாதியையும் சேர்த்துச் சொல்லி வந்த படங்களும் ஏராளம். பிரிக்கமுடியாத காதலையும் சொல்லமுடியாத அதன் வலிகளையும் ஜாதிவெறியைக் கொண்டு சொன்ன படங்களில், பாரதிகண்ணம்மா தனித்துவம் வாய்ந்தது; மகத்துவம் கொண்டது!

பாரதியையும் அவன் பாடிய கண்ணம்மாவையும் யாரால்தான் மறக்கமுடியும்? அப்படி நம்மால் மறக்கவே முடியாதவர்கள்தான் இந்த பாரதியும் கண்ணம்மாவும். நாயகனின் பெயர் பாரதி. நாயகி கண்ணம்மா. பாரதி கண்ணம்மா. சேரனின் பாரதி கண்ணம்மா.

முடி திருத்தும் தொழிலாளி வீட்டுக்கு வழக்கம்போல் நெல்மூடைகளை அனுப்புகிறார் ஊரின் அம்பலகாரர். ஆனால் அவரே முடி திருத்திக்கொள்கிறார். துணி வெளுக்கும் தொழிலாளியின் வீட்டுக்கு நெல் அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனால் அவரே தன் துணியை துவைத்துக்கொள்கிறார்.

இப்படியாகக் கிளம்புகிறவர், ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலின் வருகைக்குக் காத்திருக்கிறார். அந்த ரயிலில் இருந்து வருவது யார் என்பது ஒருபக்கம் இருக்க, அப்படியே விரிகிறது ப்ளாஷ்பேக்.

அந்த அம்பலகாரர் விஜயகுமார். அவரின் மகள் மீனா. அவர்தான் கண்ணம்மா. அவர் வீட்டுப் பணியாட்களில் ஒருவர் பார்த்திபன். அவர்தான் பாரதி. தன் ஜாதியைச் சேர்ந்த ஒருவன், தலித் இன பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள, அதன் பஞ்சாயத்து. ‘அந்தப் பெண்ணோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேளுடா’ என்று தீர்ப்பு சொல்கிறார் விஜயகுமார்.

வழியில் பள்ளி சென்ற மகள் மீனா, வீடு திரும்பிக் கொண்டிருக்க, கூட வந்தவர்கள், பெரியவளாகிவிட்டதைச் சொல்லுகிறார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக மீனாவின் மனதை அடுத்தடுத்த காட்சிகள் வழியே நமக்குக் கடத்துகிறார் இயக்குநர். அம்பலகாரரின் மகள் மீது வைத்திருக்கும் அன்பை, அவள் காதலாக்கிக்கொண்டாளே என்று மருகித்தவிக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபனுக்கு ஓர் தங்கச்சி. பெயர் பேச்சி. தங்கச்சி பேச்சியாக இந்து. வயலில் வேலை பார்க்கும் இந்து, அங்கே ஆய்வுக்காக வந்திருக்கும் ராஜாவை விரும்புகிறார். ராஜாவும்தான்.

இங்கே, தன் காதலை பார்த்திபனிடம் சொல்லுகிறார் மீனா. இதெல்லாம் தப்பு. கூடாது. சேரவும் முடியாது என மறுக்கிறார். இப்படி ஒவ்வொரு தருணங்களிலும் தன் காதலை அவரிடம் உணர்த்துவதும், பார்த்திபன் அதை ஒவ்வொரு விதமாகச் சொல்லி கெஞ்சிக்கூத்தாடி மறுப்பதும் என்பதுமாகவே தொடர்கிறது.

நடுவே, ஒரு கூட்டம் ஊருக்குள் புகுந்து ஒரு வீட்டுக்கு தீவைக்கிறது. அது ரஞ்சித் மற்றும் வகையறா. சிலபல வருடங்களுக்கு முன்பு, தலித் ரஞ்சித், உயர் சாதிப் பெண்ணைக் காதலிக்க, இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட, அவர்களைப் பிடித்து இழுத்து வந்து, பஞ்சாயத்தில் வெளுத்தெடுக்கிறார்கள் ரஞ்சித்தை. பிறகு ஊருக்குள்ளேயே வரக்கூடாது என அடித்து அனுப்புகிறார்கள். அந்த ரஞ்சித், ஊரையும் மேல்ஜாதி வர்க்கத்தையும் பழி தீர்க்க தருணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

ராஜா நம்ம ஜாதி. எனவே படித்த ராஜாவை, தன் மகள் மீனாவுக்கு மணம் முடிக்க நினைக்கிறார் விஜயகுமார். அவரிடம் விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் ராஜாவோ, ‘பாரதியின் தங்கை பேச்சியை விரும்புகிறேன். நீங்கதான் கல்யாணம் பண்ணிவைக்கணும்’ என்கிறார். அதைக் கேட்டு கொந்தளிக்கிறார் விஜயகுமார். ‘அவங்க என்ன சாதி, நாம என்ன சாதி’ என்கிறார். இதையெல்லாம் வாசலில் இருந்து பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கும் பார்த்திபன், அப்படியே வீட்டுக்குள் இருந்து பார்த்தபடி இருக்கிற மீனாவை, ஒரு பார்வை பார்க்கிறார்.

அதன் பிறகு, இன்னொரு மாப்பிள்ளைத் தேர்வு. பெண் பார்க்கும் படலம். அப்போது புடவைத்தலைப்பை எடுத்து அடுப்பில் பற்றவைத்துக்கொண்டு கையைச் சுட்டுக்கொள்கிறார் மீனா. அபசகுனம் என்று மாப்பிள்ளை வீடு கிளம்பிவிடுகிறது.

அதையடுத்து, போராடிப் போராடித் தோற்றுக்கொண்டே இருக்கும் மீனா, மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதுகிறாள். அப்படி அழுதபடியே எழுதும்போது, பாரதியின் பெயர் கண்ணீரில் கரைந்து, அழிகிறது. ஆனால் மீதமுள்ள காதல் வரிகள் அப்படியே இருக்கின்றன. அந்த சமயம் பார்த்து, அந்த நோட்டுப்புத்தகத்தை விஜயகுமார் கேட்க, பயந்து தவித்து நடுங்கியபடி கொடுக்கிறார் மீனா. அந்தக் கடிதத்தைப் பார்த்துவிடுகிறார் விஜயகுமார்.

கோபத்தின் உச்சிக்கே சென்று, ஜாதிவெறியின் உச்சிக்கே சென்று பூமிக்கும் வானுக்குமாக கூத்தாடுகிறார். அப்போது அங்கே வந்த பார்த்திபனிடம், ‘நம்ம கண்ணம்மாவோட மனசை எவனோ கலைச்சிருக்கான். அவன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டு, அவனை வெட்டுடா’ என்று அரிவாளைத் தூக்கிப் போடுகிறார்.

இப்படியான போராட்டங்களின் இறுதியில், வேறொரு திருமணம். இந்த முறை விடிந்தால் திருமணம் எனும் நிலை. முதல்நாளின் இரவில் கூட பார்த்திபனிடம் கெஞ்சுகிறார் மீனா. எங்கியாவது போயிடலாம் என்கிறார்.

ஆனால் விடிவதற்குள்ளாகவே ஊரே விழித்துக்கொள்கிறது. ‘அம்பலம் வீட்டுல சாவு’ என்று விஜயகுமார் வீடு நோக்கி ஊர்மக்கள் ஓடிவருகிறார்கள். அங்கே மீனா இறந்துகிடக்கிறார். கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

ஊரே சோகம் கவிந்திருக்க, மீனாவின் சடலத்துக்கு கொள்ளி வைக்கிறார் விஜயகுமார். எல்லோரும் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றிருக்க, கண்ணம்மா.... என்றொரு குரல். கத்திக்கொண்டும் அழுதுகொண்டும், ஆவேசத்துடன் எரிந்துகொண்டிருக்கும் சிதையை நோக்கி ஓடுகிறார் பார்த்திபன். அதுவரை மறைத்தும் ஒளித்தும் வைத்திருந்த காதலை, அங்கே மீனாவின் சிதையில் தான் விழுந்து எரிகிறார். சாவில் இருவரும் எரிந்து கரைகிறார்கள். ஒன்றுசேருகிறார்கள், மரணத்துக்குப் பின்!

தன் வீட்டு வேலையாளும் தலித்துமான பார்த்திபனை நினைத்து உருகிக்கொண்டிருந்த மீனா, தன் மீது மரியாதையும் அன்பும் கொண்டு இதைச் சொல்லாமலேயே பூட்டி வைத்திருந்த பார்த்திபன்... ஜாதிவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது அந்த மரணம்.

ப்ளாஷ்பேக் முடிகிறது. ரயில்நிலையம். காத்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். ரயில் வருகிறது. நிற்கிறது. அதில் இருந்து தன் இனத்தைச் சேர்ந்த ராஜாவும் அவர் மனைவியான பார்த்திபனின் தங்கை இந்துவும் குழந்தைகளுடன் வந்து இறங்குகிறார்கள். முன்பு ஐயா என்று விஜயகுமாரை அழைத்த இந்து, இப்போது அப்பா என்று அழைக்கிறார்.

படம் முடிகிறது. படம் விட்டு வெளியே வந்த பிறகும் கூட, பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதலும் காதலுக்குத் தடையாக இருக்கிற ஜாதிவெறியும், ஜாதிவெறியால், மரணித்துப் போன காதலர்களும் மனதை என்னவோ செய்துகொண்டிருப்பார்கள்.

பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ் ஹென்றியின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் இயக்கிய படம் இது. சேரனின் முதல் படைப்பு. ஒட்டுமொத்த திரையுலகினரும் சினிமா ரசிகர்களும் பாரதி கண்ணம்மாவைப் பார்த்து வியந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து, கொண்டாடினார்கள். தன் முதல் படத்திலேயே உச்சம் தொட்டார் சேரன். பார்த்திபனின் பண்பட்ட நடிப்பு நெகிழவைத்துவிடும். மீனாவின் குரலும் குரல் வழியே உடைந்து வழிகிற காதலும் நம்மைக் கலங்கடித்துவிடும். 

கதையும் திரைக்கதையும் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கதைக்குள் காதல் மிக அழகாகச் சொல்லப்பட்டிருந்தது. இடையிடையே வடிவேலு, மிகப்பெரிய ரிலாக்ஸ் படுத்தியிருந்தார். அந்த பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷன் ஒர்க் அவுட்டான முதல் படமும் இதுதான். குண்டக்கமண்டக்க, குத்துமதிப்பு என்று வார்த்தைகளில் மடக்கி மடக்கி, காமெடி செய்தது மிகப்பெரிய ஹிட்டடித்தது. நடுவே, வடிவேலுவுக்கு தனிப்பாடலும் இதில் உண்டு.

கிராமத்தின் ரம்மியத்தை, மொத்தமாய் அள்ளியெடுத்து குழைத்துக் கொடுத்திருந்த கிச்சாஸின் ஒளிப்பதிவு ரொம்பவே பேசப்பட்டது. தேவாவின் இசையில் எல்லாப் பாடல்களுமே முணுமுணுக்கப்பட்டன.

’யாரவன்’ என்று மீனாவை உதைத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, பாரதியைக் கூப்புடுடா என்பார். பார்த்திபன் வந்து நிற்பார். ஆவேசத்துடன் அரிவாளை எடுப்பார் விஜயகுமார். விஷயம் தெரிந்துவிட்டதோ என்று படம் பார்ப்பவர்களின் லப்டப் எகிறிக்கொண்டிருக்கும். ‘யாரோ நம்ம கண்ணம்மா மனசைக் கலைச்சிருக்கான். அவனை வெட்டுடா’ என்பார்.

இன்னொரு முறை, பாறை ஒன்றில் பார்த்திபனும் மீனாவும் பேசிக்கொண்டிருக்க, வழக்கம் போல் காதலில் பிடிவாதமாக இருப்பார் மீனா. வழக்கம் போல் மறுத்துக்கொண்டே இருப்பார் பார்த்திபன். அங்கே விஜயகுமார் வருவார். அவர்கள் கலங்கி குறுகிப் போவார்கள். நாமும்தான்! ‘கேட்டேன். பேசினதையெல்லாம் கேட்டேன். அவ என் பொண்ணாச்சே. பிடிவாதக்காரி. சொல்லமாட்டா. உனக்கு எம்மேல இருக்கற பாசம் கூட அவளுக்கு இல்லியே பாரதி’ என்பார். தியேட்டரே அழுதுகொண்டு கைத்தட்டும்.

சாமில கூட பேதம் பாக்கற உலகம் இது. அய்யனார், கருப்பண்ணசாமின்னு கோயிலுக்கு வெளியே வைச்சிருக்காங்க என்பார். வசனங்களை நறுக்நறுக்கென, சுருக்சுருக்கென தைக்கும்படி எழுதியிருப்பார் சேரன்.

இன்றைக்கு ஜாதிவெறி குறித்தும் ஆணவக்கொலை குறித்தும் ஆணவத்தால் காதல் மரித்தது குறித்தும் எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. ஆனாலும் ஜாதி, ஜாதி வெறி, ஆணவம், விஸ்வாசம், அன்பு, மரியாதை, கூடவே காதல் என சகலத்தையும் உணர்த்தியதில், சேரனும் பாரதியும் கண்ணம்மாவும் இன்னும் நீண்டகாலம், நம் மனதில் நூற்றாண்டுகள் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்!

1997ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாளில் வந்த பாரதி கண்ணம்மா, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 22 வருடங்களாகிவிட்டன. அந்த வெற்றிதான், மிகச்சிறந்த படைப்பாளியான சேரனுக்கு தனி சிம்மாசனத்தையும் போட்டுக்கொடுத்திருக்கிறது.

அந்த சிம்மாசனம் சேரனுக்கானது. சேரனுடையது!  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close