[X] Close

மகாநதி - அப்பவே அப்படி கதை


mahanadhi-appave-appadi-kadhai

மகாநதி கமல்

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Jan, 2019 12:24 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மகாநதிக்கு 25 வயசு! 

மேல்தட்டு மக்கள் தொடமுடியாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். நடுத்தர மக்கள், மேல்தட்டு சிந்தனைகளுடனும் ஏக்கங்களுடனும் தவித்து மருகுகிறார்கள். பொருளாதாரத்தில் மேலிருப்பவர்களும் கீழிருப்பவர்களும் மனம் அலைபாயாமல் இருந்துவிடுகிறார்கள். இந்த நடுத்தர வர்க்கத்தினர்தான், அத்தனை அல்லாட்டங்களுடனும் இருக்கிறார்கள். அப்படியொரு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனின் ஆசையைப் புரிந்துகொண்டு, அவனை நம்பவைத்து கழுத்தறுக்க, அவன் படுகிற படாதபாடுகள்தான் மகாநதி.

ஜெயிலுக்குள்ளே வரும் கிருஷ்ணசுவாமியில் இருந்து கதை தொடங்குகிறது. அவரின் அறையில் இருக்கும் பஞ்சாபகேசனின் கேள்விதான் நமக்கும். ’ஏன் ஜெயில்? என்ன தவறு?’. கோபத்துடன் பதில் சொல்லுவார் கிருஷ்ணசுவாமி கமல். ‘நான் திருடன் இல்லீங்க. முட்டாள்’ என்று சொல்லுவார்.

அடுத்து, ‘ஆமாம், நீ நாஸ்திகனா? கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?’ என்று கேட்க, ‘உண்டு இல்லை’ என்பார் கமல்.

ப்ளாஷ்பேக். கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர். காவிரிக் கரையோரத்தில், சீவல் கம்பெனி, வயல், விவசாயம் என மாமியார், மகன், மகள் என்று வாழ்ந்துகொண்டிருக்கிற கிருஷ்ணசுவாமிக்குள் இருக்கும் அந்த மேல்தட்டு ஆசை, வெளிநாட்டில் இருந்து வருகிற நண்பன் குடும்பத்தார் மூலமாக தூபமிடப்படுகிறது. நண்பன் லண்டனில் இருப்பவன். அவன் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கண்டு தன்னுடைய குழந்தைகள் மலங்க மலங்க முழிக்கிறார்கள். அப்படியொரு தரத்துடன் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க உள்ளுக்குள் ஏங்குகிறான்.

அடுத்து, அந்த லண்டன் நண்பரின் கார். அதைப் பார்த்து கமலின் பையன் ஆசைப்படுகிறான். அதன் பிறகு சிலபல நாட்கள் கழித்து கோயிலுக்குப் போய்விட்டு வரும் போது, வழியில் அந்தக் கார் தென்படுகிறது. அந்தக் கார் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம். அது லண்டன் நண்பன் வைத்திருந்த கார். நண்பன் செல்வதாக காரை மடக்குகிறார் கமல். ஆனால், காரை விற்றுவிட்டதால், இப்போது வாடகைக்கு ஓடும் தகவல் சொல்லப்படுகிறது. உள்ளே சென்னையில் இருந்து வந்த வி.எம்.சி.ஹனீபாவும் துளசியும்! மோதலுடன் கூடிய சந்திப்பு, கனிவுடன் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வைக்கிறது.

கமலின் வெள்ளந்தித்தனத்தையும் அவரிடம் இருக்கும் நிலபுலன்களையும் கணக்கிட்டு, ‘சென்னைக்கு வாங்க சார். பிஸ்னஸ் பண்ணுங்க சார். எல்லா உதவியும் செய்றேன். பசங்க ரொம்ப பிரில்லியண்ட். அவங்களுக்கு சென்னைலதான் நல்ல நல்ல ஸ்கூல் இருக்கு’ என்று சொல்ல, அவ்வளவுதான். இருப்பதை விற்றுவிட்டு, சென்னையில் ஒரு சிட்பண்ட்ஸ் அலுவலகம் திறக்கிறார் கமல். அதுதான் ஒரு புயல் போல் மொத்த வாழ்வையும் குலைத்துப்போடுகிறது.

குழந்தைகளின் கல்வி, பொருளாதார ஏற்றம் என்று ஆசைப்படும் அதேவேளையில் மனைவியை இழந்து நிற்கும் நமக்கு இவள் நல்லதொரு வாழ்க்கைத்துணையாவாள் என்று துளசியிடம் மயங்க, அடுத்தடுத்த கட்டத்தில், அவள் ஏமாற்றுகிறாள். ஹனீபா மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொள்கிறார். பணம் கட்டியவர்கள் அடித்து உதைக்க, பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் கமல். அவரின் கதையைக் கேட்டு கலங்கிப்போகிறார் பஞ்சாபகேசன் பூர்ணம் விஸ்வநாதன்.

நடுவே, மணமகள் தேவை என்று கமல் கொடுத்த விளம்பரத்துக்கு யமுனா எனும் பெண் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் நொறுங்கிவிட்டதே! சென்னையில் வாங்கிய வீட்டையும் ஹனீபா அபகரித்துக்கொள்கிறார். பாட்டியுடன் குழந்தைகள் வாடகைவீட்டில் இருக்கிறார்.

பூர்ணம் விஸ்வநாதனைப் பார்க்க மகள் வருகிறார். அவர்தான் யமுனா. கமலை மணந்துகொள்ள சம்மதம் சொல்லி கடிதம் எழுதிய சுகன்யா. நாயகனும் நாயகியும் இப்படி ஜெயிலுக்குள் சந்தித்துக்கொள்கிறார்கள். நசிந்து குலைந்த வாழ்க்கையில், யமுனாவின் அறிமுகம் சின்னதான மெழுகு வெளிச்சம்.

ஆனால் ஒருகட்டத்தில், வயதுக்கு வந்த கமலின் மகள், ஹனீபாவால் காமுகன் மோகன் நடராஜனுக்கு இரையாக்கப்பட, அடுத்து கோல்கத்தாவில் விபச்சார விடுதிக்கு விற்கப்படுகிறாள். கமலின் மகன் காணாமல் போகிறான். மாமியார் இறந்துவிடுகிறாள்.

வெளியே இவ்வளவு இழப்புகளும் கொடுமைகளுமென்றால், உள்ளே ஜெயிலுக்குள் நடக்கிற அரசியல். இதில் உதைபடுகிறார். ஒருகட்டத்தில் உதைகொடுக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்துவிட்டு வெளியே வரும் கமல், தன் மகனை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் கண்டுபிடிக்கிறார். மகளைத் தேடி தனுஷ் என்கிற ஹனீபாவிடம் செல்ல, அவருக்கு கோல்கத்தா சோனாகஞ்ச் இடம் சொல்லி அனுப்பப்படுகிறது.

‘நானும் துணைக்கு வரேன்’ என்று வருங்கால மாமனார் பூர்ணம் விஸ்வநாதனும் உடன் வருகிறார். ‘சோனாகாஞ்சுக்கு மாமனாரும் மாப்பிள்ளையும் வர்றதை இப்பதான் பாக்கறேன்’ என்கிறான் கார் டிரைவர் ஒருவன். அங்கே, அந்த இடத்தில், விபச்சார விடுதியில் மகளைக் கண்டு மீட்டெடுக்கிறார்.

பையன் கிடைச்சிட்டான், பொண்ணு கிடைச்சிட்டா. இத்தனைக்கும் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிற கிருஷ்ணசுவாமி அவர்களை எப்படிப் பழிவாங்கினார் என்பதை வலிக்க வலிக்கச் சொன்னதுதான் மகாநதி.

முதல் விஷயம்... மகாநதி எனும் டைட்டில். அடுத்து... காவிரிக்கரையில் பிறந்து, கூவம் ஓடுகிற சென்னையில் சிக்கிச்சின்னாபின்னமாகி, கங்கைக்கரையில் விபச்சார விடுதியில் இருக்கும் மகளை மீட்டு வந்து என நதிக்கரையினூடே தன் வாழ்க்கையைச் சொல்லியிருப்பார் கமல்.

அடுத்து, மகாநதியின் கேரக்டர் பெயர்கள். கமலின் பெயர் கிருஷ்ணா. அவரின் மனைவியாக புகைப்படத்தில் இருக்கும் ஜெயசுதாவின் பெயர் நர்மதா. மகளின் பெயர் காவேரி. பையனின் பெயர் பரணீதரன். மாமியார் பெயர் சரஸ்வதி. வில்லன் நம்பர் 2 வி.எம்.சி.ஹனீபாவின் பெயர் தனுஷ் (தனுஷ்கோடி). வில்லன் நம்பர் 1 வெங்கடாசலம். பூர்ணம் விஸ்வநாதனின் பெயர் பஞ்சாபகேசன். அவரின் மகள் சுகன்யாவின் பெயர் யமுனா. இப்படி படத்தில் பலரின் கேரக்டர் பெயர்கள் எல்லாமே நதிகளின் நீர்களின் பெயர்கள். அவ்வளவு ஏன்... ஒரேயொரு காட்சியில் வரும் விபச்சார விடுதி தலைவியின் மகள் பெயர் ஜலஜா.

வெளிநாட்டு சாக்லெட்டை உடனே எடுக்கும் மகனை, பார்வையால் கட்டிப் போடும் கமல், பொண்ணு பேசும் இங்கிலீஷில் மெய்மறக்கும் கமல், ‘சர்ச்பார்க்ல சேக்கலாம். ஜெயலலிதா படிச்ச ஸ்கூலும்மா’ என்று பெருமிதப்படும் கமல், ‘வசதியா வாழநினைச்சேன். அது தப்பா?’ என்று கேள்வி கேட்கும் கமல், ‘இந்த நாய்க்குட்டியை நாம எடுத்துட்டுப் போகலாம்பா. அம்மா இல்லாம நான் கஷ்டமா படுறேன். அதேபோல இதையும் நாம பத்திரமா பாத்துக்கலாம்பா’ என்று சொல்லும்போது நெக்குருகிப் போகிற கமல், ஜெயிலில் உதைபடுகிற போதும் பிறகு கிளர்ந்தெழுந்து வறுத்தெடுக்கிற போதும் உள்ள கமல், சுகன்யாவைக் கண்டதும் அப்படியொரு நிம்மதி படர்வதை முகத்தில் காட்டுகிற கமல், விபச்சார விடுதியில் பெண்ணைப் பார்த்ததும் கதறுகிற கமல், அவளைத் தூக்கிக்கொண்டு வந்து வரும் போது அடியும் உதையும் வாங்கி அப்படியே இயலாமையால் உட்கார்ந்துவிடுகிற கமல், மகளை அழைத்துச் செல்ல, விபச்சார விடுதியின் பெண்கள் உதவும் போது பிரமிப்பும் நன்றியுமாய் பார்க்கிற கமல், அந்த விடுதி தலைவியின் மகள் ஓடிப்போய் குங்குமம் எடுத்து வந்து மகள் காவேரியின் நெற்றியில் இட்டுவிட, கலங்கி செய்வதறியாது கைகூப்பி நன்றியைச் சொல்லாமல் சொல்லுகிற கமல், விடுதியின் வேதனைகளை தூக்கத்தில் உளறும் மகளைக் கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறித் துடிக்கிற தகப்பனாக கமல், ‘ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற மரியாதை கெட்டவனுக்குக் கிடைக்குதே ஏன்?’, ‘உண்மையா இரு உண்மையா இருன்னு ஏன் அடிச்சு அடிச்சு வளர்த்தாங்க?’, ‘நல்லவேளை நீ அங்கே வரலை. நல்லவேளை என் மாமியார் இப்போ உயிரோட இல்ல’ என்று எல்லாருக்காகவும் துக்கிக்கிற கமல், ‘நீங்க சொன்னதுதாம்மா கரெக்ட்டு. பட்டணத்துல மரியாதையே இல்லம்மா’ என்று அடிபட்டு அவமானப்பட்டு புரிந்து கொண்ட கமல்... என மகாநதியில் கமல் எடுத்திருக்கும் மகா அவதாரம் கொஞ்சநஞ்சமல்ல!

படம் பார்க்கிற 20 வயது இளைஞன் கூட கல்யாணமாகி, குழந்தைகளைப் பெற்ற தகப்பனைப் போல் துடித்துக் கதறிவிடுவான். ஒரு தந்தையின் நிலையை, ஏமாந்து போனவனின் வலியை, தோற்றுப்போனவனின் குறுகிப் போன வேதனையை அப்படியே நமக்குக் கடத்தியிருக்கும் மகாநதி, காலத்தால் அழிக்க முடியாத படங்களில் ஒன்று. ‘அப்பா, இப்பலாம் டைகர் சைவமே சாப்பிடுதுப்பா’ எனும் ஒற்றைவரியில் ஏழ்மை அறைந்து சொல்லப்படும். ‘வழுக்கி விழுந்துட்டேன்’ என்கிற வசனம், அதிகார வர்க்கத்தின் மீது கோபம் கொள்ளச் செய்யும். ‘எம்புள்ள ரெண்டு வருசம் சாப்பிட்ட சாப்பாடு. நான் சாப்பிடமாட்டேனா?’ என்று கழைக்கூத்தாடி தலைவாசல் விஜய்யிடம் கமல் சொல்லும் போது, சகலத்தையும் தவிடுபொடியாக்கும் காலச்சூழலை உணர்த்திவிடுவார். 

கமல், சுகன்யா, மகாநதி ஷோபனா, சின்னப்பையன் தினேஷ், பூர்ணம் விஸ்வநாதன், வி.எம்.சி.ஹனீபா, மோகன் நடராஜன், எஸ்.என்.லட்சுமி, ராஜேஷ், துலுக்காணம் மகாநதி சங்கர் என மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள்.

முக்கியமாக, மகாநதியில் எஸ்.என்.லட்சுமிக்கு இதுவரை கிடைக்காத கனமான வேடம். அதேபோல், பூர்ணம் விஸ்வநாதன் பின்னியெடுத்திருப்பார். துலுக்காணம் கேரக்டரில் நடித்த சிவசங்கர், இந்தப் படத்தில் அறிமுகமாகி மகாநதி சங்கரானார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கும்பகோணம், சென்னை, சிறைச்சாலை, கோல்கத்தா, கங்கை, கூவம், காவிரி என அனைத்தையும் அழகியலாகவும் துன்பச்சலனமாகவும் காட்டியிருக்கும். இந்தப் படம்தான் அறிமுகம் இவருக்கு!

அதேபோல், ஜெயிலுக்குள் நடக்கிற அட்டூழியங்களை, அப்பட்டமாகக் காட்டிய முதல் தமிழ் சினிமா மகாநதியாகத்தான் இருக்கும்.

படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுதியிருந்தார். கமலும் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதியிருந்தனர். சந்தானபாரதி இயக்கியிருந்த இந்தப் படத்தை அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்தார்.

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், பேய்களை நீ நம்பாதே, தைப்பொங்கலும் வந்தது, எங்கேயோ திக்குதிசை, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, தேடியது கிடைச்சாலே சந்தோஷப்படும் மனசு... என்று பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி.

மகாநதி, தமிழ் சினிமாவின் முக்கியான படங்களின் பட்டியலில், முக்கியமானதொரு இடத்தில் இப்போதும் எப்போதும் இருக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு என்றால் இளையராஜா, கமலின் சகலகலாவல்லவன் படத்தின் ஹேப்பி நியூ இயர் பாடல் என்பது போல், பொங்கல் என்றாலும் கமல், இளையராஜா கூட்டணியின் ’தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச் சொல்லடியோ...’ பாடல் என்றாகிவிட்டது.

துலாபாரம் பார்த்து அழாதவர்களே இல்லை என்பார்கள். பாசமலர் பார்த்துவிட்டு உருகிவிடுவார்கள் என்பார்கள். அதுபோல் எப்போது பார்த்தாலும் எப்பேர்ப்பட்டவர் பார்த்தாலும் எத்தனைமுறை பார்த்தாலும் மனம் கனத்து, அழுதுவிடுவோம்.

94ம் வருடம் ஜனவரி 14ம் தேதி, அதாவது தைத்திருநாளின் போது கமலின் மகாநதி வெளியானது. கணக்குப் பண்ணிப் பார்த்தால், இன்றுதான் மகாநதி ரிலீசான நாள். கிட்டத்தட்ட இன்றுடன் மகாநதி திரைப்படத்துக்கு 25 வயது.

மகாநதி குழுவினருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close