[X] Close

தூறல் நின்னு போச்சு - அப்பவே அப்படி கதை


tural-ninnu-pochu-appve-appadi-kadhai

தூறல் நின்னு போச்சு - அப்பவே அப்படி கதை

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jan, 2019 11:48 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

காதலிப்பதால் பிரச்சினைகள் வரும். அதை சினிமாவாக்கியிருக்கிறார்கள். வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்வதால் சிக்கல்களும்  குழப்பங்களும் பிரிவுகளும் ஏற்படும். அதையும் படமாக்கியிருக்கிறார்கள். பெண்பார்க்கச் சென்றதும்  அந்தப் பெண்ணைக் காதலிப்பதும் அவளும் அவன் மீது உயிரையே வைத்திருப்பதும் ஆனால் வரதட்சணையால் பிரிவு வந்து சேராமாலேயே உறவும் நினைவும் உடைவதுமான கதையை வைத்துக்கொண்டு ஜாலம் காட்டியிருப்பார் பாக்யராஜ். அதுதான்... தூறல் நின்னு போச்சு!

முப்பது பவுன்  நகை, முப்பதாயிரம் ரொக்கம் என்று மாப்பிள்ளை வீடு கேட்க, விக்கித்துப் போகும் பெண்ணின் தகப்பன், 15 - 15 என்பார். 18 - 18 என்பார். அப்படி இப்படி என்று 25 - 25 என்று சொல்லுவார். ஆனால் இந்த ஏற்றங்களின் போது, மாப்பிள்ளையைப் பெற்றவர்கள், எகிடுதகிடான வார்த்தைகளை அள்ளி முகத்தில் வீச, அது மனசு வரை சென்று ஊடுருவ... அங்கே சேராமலேயே நிகழும் பிரிவும் அதன் வலியும் அதற்குப் பிறகான முயற்சிகளும் சேரத் தவிப்பதும்தான் தூறல் நின்னு போச்சு கதையின் சாராம்சம்.

1982ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று வெளியானது தூறல் நின்னுபோச்சு. சுவர் இல்லாத சித்திரங்கள், ஒருகை ஓசை, மெளனகீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு படங்களுக்குப் பிறகு இயக்குநர் கே.பாக்யராஜ் தூறல் நின்னு போச்சு எடுத்தார். மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தார்.

சுலக்‌ஷணா இந்தப் படத்தில்தான் அறிமுகம். மங்களம் எனும்  கேரக்டரில் மங்கலகரமான பாவாடை, தாவணியில் அழகு காட்சி அம்சமாய் நடித்திருந்தார். அவரின் அப்பா செந்தாமரை. அசாத்திய நடிகரான செந்தாமரையும் நடிப்புலக வாழ்வில், மறக்க முடியாத கிரீடம், இந்தப் படம். ‘என்னை பொண்ணு பாக்க வராங்க. இந்த முத மாப்பிள்ளையை எனக்குப் பிடிச்சுப் போயிடணும். என்னை மாப்பிள்ளைக்கு புடிச்சுப் போயிடணும்.. நீதான் காப்பாத்தணும் பிள்ளையாரப்பா’ என்கிற வேண்டுதலுடன்  அறிமுகமாவார் சுலக்‌ஷணா.  அதற்குக் காரணமும் சொல்லியிருப்பார் இயக்குநர் பாக்யராஜ்.

ஏழெட்டு பேர் பொண்ணு பார்த்துவிட்டு போயும் இன்னும் தகையாமல் இருக்கும் பெண்ணை, ஊரே பேசிக்கொண்டிருக்க, அந்த ஏச்சும் பேச்சும் வாங்கிவிடக்கூடாது என நினைப்பார் சுலக்‌ஷணா. அவர் நினைத்தது போலவே, மாப்பிள்ளைக்கு பிடித்துவிடுகிறது.  அவரின் குடும்பத்துக்கும்தான்!

அதன் பிறகு பார்த்த பெண்ணிடம் கொஞ்சம் பழகலாமே என்று 18 கி.மீ. சைக்கிள் மிதித்து, சுலக்‌ஷணாவின் ஊருக்கு வருவார். பார்ப்பார். தோப்பில் சந்தித்துக்கொள்வார்கள். அவர்களுக்குள் இணக்கமும் நெருக்கமும் கனிவும் காதலும் பெருகிக்கொண்டிருக்க,  மீண்டும் இருவீட்டாரும் சந்திப்பார்கள். அங்கே, மாப்பிள்ளையின் அம்மா (சித்தி), முப்பது பவுனும் முப்பதாயிரம் ரொக்கமும்  கேட்பார். இது ஒரு கட்டத்தில் பேரமாகும். கொதித்துப் போனவர், வாக்குவாதத்தில் களேபரப்படுத்த, பிரிவு ஏற்படும். இந்தப் பிரிவு கூடாது என நினைக்கும் மாப்பிள்ளை செல்லதுரை, செந்தாமரையை சந்திப்பார்.  ‘மீதமுள்ள பணத்தை தரேன். வாங்கிக்கோங்க. எங்களை சேர்த்துவையுங்க’ என்பார்.

ஆவேசமாவார் செந்தாமரை. ‘உங்க அம்மா என்னை பிச்சைக்காரன்னு பேச்சுவார்த்தைல சொன்னாங்க. நீ செயல்லயே காட்றியா?’ என்பார். திட்டித் தீர்த்து அனுப்பிவிடுவார்.

அதன் பிறகு ஏரிக்கு அருகில் உள்ள தோப்பில்  வழக்கம் போல் சந்தித்துக்கொள்வார்கள் பாக்யராஜும் சுலக்‌ஷணாவும்.. சண்டை, அழுகை, அடி உதைக்குப் பிறகு மறுநாள் ஊரைவிட்டே ஓடிப்போவது என்று முடிவெடுப்பார்கள்.

அதன்படி நள்ளிரவில் பெட்டியுடன் ஊர் எல்லையில் வந்து சுலக்‌ஷணா நின்று காத்திருக்க, அங்கே  கிளம்பிக்கொண்டிருக்கும் பாக்யராஜை, அப்பாவும் சின்னம்மாவும்  அறைக்குள் வைத்து பூட்டிவிடுவார்கள். ஆனால் அறையில் இருந்து வெளியே வந்த பாக்யராஜ், தோட்டத்தின் வழியே  உள்ள முள்வேலியில் நுழைந்து அதில் கரண்ட் ஷாக்கில் மாட்டிக்கொண்டு மயங்கிச் சரிவார்.

விடிந்தும் வராத நிலையில், மீண்டும் வீட்டுக்கே வருவார் சுலக்‌ஷணா. செந்தாமரை தூக்கு போட்டுக்கொண்டு சாக யத்தனிக்க, காப்பாற்றப்படுவார்.  அங்கே, மருத்துவமனை, சிகிச்சை என்று கழியும். பிறகு பாக்யராஜ் சுலக்‌ஷணாவுடன் ஓடிப்போக வருவார். ஆனால் சுலக்‌ஷணா அதற்குத் தயாரில்லை இப்போது. ‘அப்பா முக்கியம். நான் ஓடிவந்தா, அப்பா செத்துருவாரு’ என்று மறுத்துவிடுவாள்.

சுலக்‌ஷணாவின் பெரியப்பா நம்பியார்தான் பாக்யராஜை தடுத்தாட்கொள்வார். தன் வீட்டிலேயே தங்கவைப்பார். ஊர்ப்பகைக்கு ஆளாவார். பிறகு செந்தாமரையிடம் ‘ரெண்டுபேரையும் சேர்த்துவைக்கிறேன் பார்’  என்றூ சபதம் போடுவார்.  

அந்த சபதம் என்னாச்சு, சுலக்‌ஷணா மனம் மாறினாரா, எப்படி மனம் மாறினார்,  சேர்ந்தார்களா, எப்படிச் சேர்ந்தார்களா என்பதையெல்லாம்  புயலின் சீற்றத்துடன்  ஆனால் தென்றலின் அமைதியுடன் சொல்லியிருப்பார் திரைக்கதையில்!

டிராக்டரில் பெண் பார்க்க வருவதும் கழுத்தில் மப்ளரும் கண்ணாடி இல்லாத பாக்யராஜும் என புத்தம் புதுசு எல்லாமே!  பெண் குழந்தை ஒன்று பாக்யராஜிடம் வந்து டிரஸ், பொட்டு என்றெல்லாம் கேட்க, அவர் சொல்லும்படியாகவே புடவையையும் பொட்டையும் மாற்றிக்கொள்வார் சுலக்‌ஷணா. ‘வேற.. என்ன... நல்லாருக்கு...’ என்று அந்தக் குழந்தை கேட்டுக்கொண்டே கவுனைத் தூக்கிக் கடித்துக்கொண்டே கேட்பாள்.

‘எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கவுனுக்குக் கீழே ஜட்டி போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்’ என்று பாக்யராஜ், குழந்தையிடம் சொல்ல, அதைக் கேட்டுவிட்டு, சுலக்‌ஷணா  இடுப்பை தொட்டுப் பார்த்துக்கொண்டு வெட்கப்படுவாரே... அது பாக்யராஜ் குசும்பு.

சுலக்‌ஷணாவின் அடாவடி பெரியப்பா நம்பியார். குஸ்தி பயில்வான்.  ஆட்டுப்பால் திருடி அலப்பறையைக் கொடுப்பவர். அமாவாசை தோறும் மவுன விரதம் இருப்பவர். தோல்வியில் முடிந்த காதலாலும்  தூக்கில் தொங்கிய காதலின் நினைவாலும்  இப்படியொரு விரதம். தன் காதலிக்கு நேர்ந்தது போல் சுலக்‌ஷணாவும் ஆகிவிடக்கூடாது எனும் பதட்டம். நம்மைப் போலவே  பாக்யராஜும் பிரிவால் கஷ்டப்படக்கூடாது எனும் கலக்கம்.  அவர்களின் காதலுக்கு துணை நிற்பார்.

நம்பியார் என்றாலே வில்லன். கொடூர வில்லன். ஆனால் நம்பியாரை, இப்படி எவருமே பயன்படுத்தவில்லை. பாக்யராஜ் அளவுக்கு இதுவரை எவருமே பயன்படுத்தியதும் இல்லை. காமெடியும் குணச்சித்திரமும் கலந்து ரகளை பண்ணியிருப்பார் நம்பியார்.  எம்ஜிஆர் காலத்து நம்பியாரை, மிக அழகாகவும் உயிர்ப்புடனும்  கேரக்டர் கொடுத்திருப்பார் பாக்யராஜ். அநேகமாக இந்தப் படத்துக்கு பிறகுதான்  தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தீபா, கலைஞானம், ஷோபனா என மீட்டெடுத்து வந்து கொடுத்திருப்பார்.

அடுத்து மீனாட்சிப் பாட்டி. சுலக்‌ஷணாவின்  பாட்டியம்மா. அதற்கு முன்னதாக, எத்தனையோ படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தப் படம் பாட்டியை மனதில் பதியச் செய்தது. வரும் சீன்களிலெல்லாம் கைத்தட்டல்களை  அள்ளவைத்தது.

 கணேசபாண்டியனின் கேமிரா  அழகு காட்டியிருக்கும். இளையராஜாவின் அத்தனை பாடல்களும் மனசை அள்ளிக்கொள்ளும். தாலாட்ட நான் பொறந்தேன் என்றொரு பாடல். பூபாளம் இசைக்கும் என்றொரு பாடல். தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி என்றொரு பாடல். ஏரிக்கரைப் பூங்காத்தே என்றொரு பாடல். மிக முக்கியமாக, பட்டிதொட்டியெங்கும், பாட்டுக்கச்சேரியெங்கும் மிகப்பெரிய ஹிட்டடித்த  பாட்டும் உண்டு. அதுதான், ‘என் சோகக்கதைய கேளு தாய்க்குலமே’ பாட்டு.

‘துணை மாப்புள்ளையா வர்றதுக்கு ஒரு லட்சணம் வேணாம். திருட்டு முழியைப் பாரு. இதுல இவர் கெட்டகேட்டுக்கு கழுத்துல மப்புளர் வேற’ என்று கிராமத்து பாட்டியம்மா சொல்ல, குறுகிப்போவார் ஹீரோ. அப்போதுதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், கே.பாக்யராஜ்  என்று டைட்டில் போடுவார் பாக்யராஜ்.

‘முதலிரவுக் காட்சின்னு ஒண்ணு சினிமால காமிப்பாங்களே. அதைப் பாத்ததே இல்லியா?’ என்று கேட்க, அதை விவரித்து சுலக்‌ஷணா சொல்லும் இடம் ஏ க்ளாஸ். இதை விரசமாக இல்லாமல், காதலாகவும் காமெடியாகவும் சொல்ல பாக்யராஜால் மட்டுமே  முடியும். அல்லது இப்படியெல்லாம் பாக்யராஜ் சொன்னால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

சுலக்‌ஷணாவின் காலில் முள் குத்திவிட்டதால், அடுத்த நாள் அந்த ஏரியாவை பூக்களால் தரையெங்கும் பாய் விரித்திருக்கும் காட்சி கவிதை. ஏதோ ஒரு கோபத்தில், ‘நீ மட்டும் வரலேன்னா, நாளைக்கே உங்க ஊருக்கு வருவேன். பொண்ணு பாக்க வருவேன்’ என்று பாக்யராஜ் சொல்லுவார். உடனே சுலக்‌ஷணா, ‘நீங்க ஆம்பள, எத்தினி பொண்ணை வேணாலும் பாப்பீங்க. நாளைக்கி நீங்க எங்க ஊருக்கு வாங்க. எத்தினி பொண்ணை வேணாலும் பாருங்க. அப்படியே நான் செத்துக்கிடப்பேன். பாத்துட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டு கதறுவார். நம்மையும் கதறச்செய்துவிடுவார்.

‘உம் பொண்ணு வாசப்படியை மட்டும்தான் தாண்டுனாளா? இல்ல, வயித்தையும் ரொப்பிட்டு வந்து நிக்கிறாளான்னு கேளுடி’ என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, கொள்ளிக்கட்டையை எடுத்து அதன் மேல் கால்களை வைத்து, சுட்டுக்கொள்ளும் சுலக்‌ஷணாவும் அதன் பிறகு, ‘வீட்டை விட்டுப் போனதைத் தவிர, எந்தத் தப்பும் பண்ணலப்பா. என் கூட பேசுங்கப்பா’ என்று அவர் கதறுவதும் கலங்கடித்துவிடும்.

‘ஒண்டிக்கட்டை. இந்தப் பயலுக்காக ஊரைப் பகைச்சுக்காதீங்க குஸ்தி வாத்யாரே’ என்று ஊர்மக்கள் சொல்ல, ‘அடப்போடா... நாளைக்கி எனக்கு என் புள்ள மாதிரி இருந்து மாப்ளே கொள்ளிபோடுவாண்டா’ என்று சொல்லுவதும் பிறகு ஓரிடத்தில் நெகிழ்வதும் பாக்யராஜ், - நம்பியாருக்கு இடையேயான உறவையும் அன்பையும் சொன்னவிதத்தில் அவ்வளவு அடர்த்தி.

சுலக்‌ஷணாவைப் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டை, பொரணி பேசி காலிசெய்துவிடுவார் நம்பியார்.  அதற்கு வசனமே இல்லாமல் ஒரு விஷயம் செய்திருப்பார். பஸ்சில், 16 வயதினிலே படத்தின் ஒலிச்சித்திரம் . ‘ஏங்க வத்திப்பொட்டி இருக்குதுங்களா?” என்று ஆரம்பித்து ரஜினி மயிலு பற்றி கொளுத்திப் போடுவார். அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பஸ்சில் உள்ள ஸ்பீக்கர் மீது கேமிரா இருக்கும். அப்படியே கேமிரா இறங்கும் . சீட்டில் உட்கார்ந்துகொண்டு நம்பியார் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை விதம்விதமாக, ரகம் ரகமாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ்.

படத்தின் ஆகச்சிறந்த பலம் இளையராஜா. பின்னணி இசையில் நெகிழவைத்திருப்பார் ராஜா. கம்புச்சண்டையும் பிரமிப்பு கூட்டும். பாக்யராஜ், சுலக்‌ஷணா, செந்தாமரை, மீனாட்சிப் பாட்டி, நம்பியார், செந்தில், சூரியகாந்த்... என படத்தில் அவ்வளவுதான் முக்கிய மாந்தர்கள். இவர்களைக் கொண்டுதான் இரண்டரை மணி நேரத்தை எடுத்து, 200 நாட்களுக்கும் மேல் ஓடச் செய்திருந்தார். அதுதான் பாக்யராஜின் கதைத் திறன். திரைக்கதை ஜாலம். வசன பலம். இயக்கத்தின் தெளிவு.

மதுரையின் தங்கம் என்றொரு தியேட்டர் இருந்தது. இந்தத் தியேட்டர்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர். அதாவது ஒரே ஷோவில் அதிகம்பேர் படம் பார்க்கலாம். ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான தங்கம் தியேட்டரில் , முப்பது நாள்  ஓடினாலே பெரிய விஷயம். 50 நாள் ஓடினால், நூறுநாள் ஓடியதுமாதிரி. நூறு நாள் ஓடினால், சில்வர் ஜூப்ளி ரேஞ்ச்  என்று சிலிர்ப்பார்கள் ரசிகர்கள்.

இந்த மதுரை தங்கம் தியேட்டரில், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், 98 நாளோ அல்லது 102 நாளோ ஓடியதாகச் சொல்லுவார்கள். அதன் பிறகு  அதிக நாட்கள் ஓடியது என்றால் அது தூறல் நின்னு போச்சுதான் என்பார்கள். அதாவது 118 நாட்கள் ஓடியதாம்!

1982ம் அண்டு ஏப்ரல் 14ம் தேதி ரிலீசானது தூறல் நின்னு போச்சு. அப்படியெனில், 37 வருடங்களாகிவிட்டன.  தூறல் நின்னு போச்சுதான். ஆனால்  தூறல் நின்னு போச்சு படம் மனதுள் தந்த  சந்தோஷங்களும் குதூகலங்களும் இன்றைக்கும் விடாது தூறிக்கொண்டே இருக்கின்றன!

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close