[X] Close

அப்பா இயக்கத்தில் நடித்தது குறித்து கல்யாணி ப்ரியதர்ஷன் நெகிழ்ச்சி


kalyani-tweet

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 20:42 pm
  • அ+ அ-

'மாராக்கர்' படத்தில் அப்பா ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்

மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'மாராக்கர்:அரபிக்கடலின்டே சிம்ஹம்'. ப்ரியதர்ஷன் இயக்கி வரும் இப்படத்தில் மோகன்லால், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துவருகிறார்கள். 

பெரிய செட்கள் போடப்பட்டு, இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதில்  முதன்முறையாக அப்பா இயக்கத்தில் நடிப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

தற்போது 'மாராக்கர்' படத்தில் தனது காட்சிகள் அனைத்து படமாக்கி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அப்பாவுடன் நான் பணியாற்றுவேன் என்று கற்பனை செய்ததில்லை. படப்பிடிப்பு தளத்தில் அப்பா என்னிடம், "அம்மு நீ இதை சரியாக செய்யவில்லை" என்று கத்தியது முதல் முதல் நாளில் அவர் சொன்னதற்கு பயத்துடன் தலையசைத்ததில் இருந்து  "சூப்பர்ப் இந்தக் காட்சியில் நான் ஒரு ஷாட்டைகூட கட் செய்யப்போவதில்லை " என்று சொன்னது வரை எல்லாமே நினைவில் இருக்கிறது. 

அச்சா உனை நான் நேசிக்கிறேன். உங்களது பிரம்மாண்ட படைப்பை இந்த உலகம் காணும் நாளுக்காக காத்திருக்கிறேன். அதில் நானும் ஒரு சிறு பங்காற்றியிருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்

மகளின் நெகிழ்ச்சி குறித்து இயக்குநர் ப்ரியதர்ஷன் மகளின் ட்வீட்டைக் குறிப்பிட்டு, “இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தந்தையைப் போலத்தான் நானும் எனது மகளை வழிநடத்த வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். 

ஆனால், என் கனவிலும்கூட என் மகளை ஒரு படத்தில் நான் இயக்குவேன் என எதிர்பார்த்தது இல்லை. விதி அதை நடத்திக்காட்டியிருக்கிறது. கடின உழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும். அம்மு உனை நினைத்து பெருமைப்படுகிறேன். நீ விரும்பி செய்ய நினைக்கும் செயலுக்கு உண்மையாக இருக்கிறாய்.” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close